பதிவு செய்த நாள்
30
செப்
2025
02:09
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவது உண்டு. இதனால், ஆண்டிற்கு ஒரு முறை பக்தர்கள் திருப்பதி சென்று வருவது வழக்கம். ஒருவேளை அங்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக, திருப்பதி பாணியில் நிறைய கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று பெங்களூரு மஹாலட்சுமிபுரம் ஸ்ரீனிவாசா கோவில்.
இந்த கோவிலின் நுழைவு வாசலே பக்தர்களை ஈர்க்கும் வகையில் பிரமிப்பாக உள்ளது. பெரிய கழுகின் மீது கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் பிரமாண்ட சிலை பக்தர்களை வெகுவாக கவருகிறது. மூலவராக வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பத்மாவதி, மஹாலட்சுமி, விநாயகர், நவக்கிரக சிலைகளும் கோவிலுக்குள் உள்ளன.
6 மாடி கட்டடம் இந்த கோவிலின் முக்கிய அம்சமே ஆறு மாடி கட்டடம் தான். ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு கடவுளின் சிலைகள் புராண கதைகளாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.
முதல் தளத்தில் சாரங்க ராஜகோபுரம்; இரண்டாவது தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாணத்தை எடுத்து கூறும் சிலைகள்; மூன்றாவது மாடியில் சமுத்திர மந்தனா; நான்காவது மாடியில் சாய்பாபா, ருஷி முனி சிலைகள்; ஐந்தாவது மாடியில் லட்சுமி மற்றும் விஷ்ணு அவதாரங்கள்; ஆறாவது மாடியில் கிருஷ்ண லீலையை சித்தரிக்கும் வகையில் சிற்பங்கள் உள்ளன.
பெருமாள் சயன நிலையில் இருக்கும் சிலை, கூடையில் இருக்கும் கிருஷ்ணரை சுமந்து ஆற்றைக் கடந்து செல்லும் வாசுதேவர் சிலை உட்பட பல்வேறு சிலைகள் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன.
லிப்ட் வசதி தரைதளத்தில் இருந்து ஆறாவது மாடிக்கு, ‘லிப்ட்’ மூலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம்; ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். ஐந்து முதல் பத்து வயது உட்பட்ட குழந்தைகளுக்கு இருபது ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
திருப்பதி சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாதவர்கள், கோவிலை சுற்றியுள்ள சலுான்களுக்கு சென்று மொட்டை அடித்து விட்டு வந்து, சாமியை தரிசிக்க டோக்கன் வாங்கி செல்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, ஜென்மாஷ்டமி, கார்த்திகை தீபம், வருடாந்திர பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கோவிலின் நடை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.