பதிவு செய்த நாள்
30
செப்
2025
02:09
தாவணகெரே மாவட்டம், ஜகலுார் தாலுகா கல்தேவாராபுரா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ கல்லேஸ்வர் கோவில். மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் முக்கியமானதாக திகழ்கிறது. இந்த கோவில், சிவனின் அவதாரமான கல்லேஸ்வருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கல்யாணி சாளுக்கியா கட்டட கலையில், 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டு உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். கோவிலில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.
நவரங்க மண்டபம், மஹா மண்டபம், நந்தி மண்டபம், நுழைவுவாயிலில் பெரிய கோபுரம் என கோவிலே பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள இயற்கையான சூழல், தெய்வ வழிபாட்டுக்கு சிறப்பாக உள்ளது.
கருவறையில் கல்லேஸ்வரரை வெள்ளி கவசத்தில் தரிசிக்க ஆயிரம் கண்கள் போதாது. கோவிலில், பார்வதி, விநாயகர், கார்த்திகேயா, துர்கா, விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி விக்ரஹங்களும் உள்ளன.
ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் கல்லேஸ்வருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த நாளில் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. பிரதோஷம், அமாவாசை போன்ற நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். மஹாசிவராத்திரி, ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ரத உத்சவத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
கல்லேஸ்வரை வேண்டினால் தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு, தடைகள் தகர்ப்பு, உடல் நலம், திருமணம், ஆன்மிகத்தில் முன்னேற்றம் போன்றவை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் நடை காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். தினமும் விசேஷ பூஜைகள் நடப்பது போன்று காணப்படும். பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.