இன்று விஜயதசமி; வெற்றி நாள்; வெற்றி வேண்டுமா... அம்பிகையை வழிபடுங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2025 09:10
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.
புதிய முயற்சியை தொடங்க இன்று நல்ல நாள். அரக்கனான ராவணனைக் கொன்ற ஸ்ரீராமர், அசோகவனத்தில் சீதையை மீட்ட நாள். விராட தேசத்தின் மீது படை எடுத்த கவுரவர்களை தனியாளாய் அர்ஜுனன் வெற்றி பெற்ற நாள். எருமை வடிவில் வந்த மகிஷாசுரனை வதம் செய்த நாள்.
கருவிகளை பயன்படுத்தும் நாள். நெல் பரப்பி குழந்தைகளின் கையை பிடித்து எழுதப் பழக்கும் நாள். இதை வித்யாரம்பம், அட்சர அப்யாசம் என்பர். ஆசிரியர்களிடம் ஆசி பெறும் நாள்.
விருப்பம் நிறைவேற... விஜயதசமியன்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லுங்கள்.
சிவனுடன் இணைந்திருக்கும் சக்தியே. வேதத்தை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், மகாலட்சுமி என்றும், பார்வதி என்றும்
சொல்கின்றனர். மனம், சொல்லுக்கு அப்பாற்பட்டவளே. எல்லையற்ற மகிமை கொண்டவளே. உலகை இயக்குபவளே
எங்களுக்கு அருள்புரிவாயாக.
குறை இல்லை; கல்வி, செல்வம், வீரம் என மூன்றும் நமக்கு அவசியம். இவற்றை தருபவள் பராசக்தி.
அவளே கல்வியைத் தரும் சரஸ்வதி, பணம் தரும் மகாலட்சுமி, வீரம் தரும் துர்கை. இவளை நவராத்திரியின் போது வெவ்வேறு கோலங்களில் வழிபடுகிறோம்.
பராசக்தியை வழிபடுங்கள். உங்களுக்கு குறை ஒன்றும் இருக்காது.
அதிர்ஷ்டமான யானை; மகிஷாசுரமர்த்தினியாக வந்து அசுரனை அழித்தாள் பராசக்தி. இவளே மைசூருவில் சாமுண்டீஸ்வரியாக இருக்கிறாள். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என நிரூபிக்கும் இவள் அன்பு நிறைந்தவள்.விஜயநகர பேரரசர்கள் காலத்தில் ஹம்பியில் தசரா நடக்கும். ஆனால் தற்போது மைசூருவில் நடக்கும் தசராவே பிரபலம். சாமுண்டீஸ்வரி கோயிலும், அரண்மனையும் தசராவை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்படும். இதில் முக்கிய நிகழ்ச்சி யானை ஊர்வலம். இதற்காக யானைகளுக்கு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் அதிர்ஷ்ட யானையைக் காண மக்கள் கூட்டம் முண்டியடிக்கும். அந்த யானையின் மீதுதான் தங்க சிம்மாசனத்தில் சாமுண்டீஸ்வரியை வைத்து ஊர்வலமாகச் செல்வர். இதை மைசூரு மகாராஜா துவக்கி வைப்பார்.
வெற்றி வேண்டுமா...
கலையமர் செல்வி கடனுணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின் கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது
போருக்கு எடுத்துச் செல்லும் ஆயுதங்களை கொற்றவை (துர்கை) முன் வைத்து வழிபட்டு எடுத்துச் செல்ல வேண்டும். அவளுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை செய்யாவிட்டால் வெற்றி தர மாட்டாள் என்கிறார் சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள். சங்க காலத்தில் கொற்றவை என்ற பெயரில் அம்மனை வழிபட்டனர். எனவே வெற்றி வேண்டுமா... அம்பிகையை வழிபடுங்கள்.