பதிவு செய்த நாள்
30
செப்
2025
02:09
சிக்கமகளூரு மாவட்டத்தின் சிக்கமகளூரு டவுனில் இருந்து 16 கி.மீ., தொலைவில் மல்லேனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவில் தேவிரம்மா மலை அமைந்து உள்ளது. 3,000 அடி உயரத்தில் சாமுண்டீஸ்வரி தேவிரம்மா என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
புராணங்கள்படி, தேவர்கள் மற்றும் மக்களை கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனுடன் சாமுண்டீஸ்வரி போரிட்டார். மகிஷாசுரனை வதம் செய்து, தீமையை கொன்று மக்களையும், தேவர்களையும் காப்பாற்றினார்.
அதன் பின்னரும் கோபம் தனியாமல் இருந்த சாமுண்டீஸ்வரி, சந்திர துரோண மலையில் தங்கினார். அப்போது அங்கு ஐந்து முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். தனக்கு இவ்விடத்தில் கோவில் கட்டும்படி, அவர்களின் தியானத்தில் கேட்டு கொண்டார்.
அம்மனின் வேண்டுகோளை ஏற்று முனிவர்களும், இம்மலையில் சாமுண்டீஸ்வரிக்கு சிறிய சன்னிதி கட்டி, தேவிரம்மா என்று அழைக்க துவங்கினர்.
ஆனால், மக்கள் தன்னை தரிசனம் செய்ய மலை மீது ஏறி வருவதை தவிர்க்கும் வகையில், மல்லேனஹள்ளி கிராமத்திலும் அம்மன் எழுந்தருளினார். அம்மனுக்கு அங்கேயும் கோவில் கட்டப்பட்டு உள்ளது. அன்று முதல் மைசூரு மன்னர் குடும்பத்தினரும் இங்கு வருகை தந்தனர்.
இக்கோவில் ஆண்டு முழுதும் திறந்திருக்கும். அதேவேளையில், மலையின் உச்சியில் உள்ள தேவிரம்மா, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
நவராத்திரியின் போது ஒன்பதாம் நாள் இரவு முதல் 10ம் நாள் முடிய பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நாளில் அம்மனின் தரிசனம் பெற, பக்தர்கள் வெறும் காலில் 3,000 அடி உயரம் உள்ள மலையில், கற்கள், முட்கள் மற்றும் பாறைகளில் ஏறி வருகின்றனர். அன்றைய தினம் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நாளில், மாலையில் கிராமத்தில் உள்ள தேவிரம்மா கோவில் கருவறை திரைச்சீலையால் மூடியிருக்கும். அன்று மாலை மலையில் உள்ள தேவிரம்மா, காற்றாக உருமாறி, கிராமத்தில் உள்ள கோவிலுக்கு நுழையும் போது, திரைச்சீலை தானாக விலகும். இதை காணவும் பக்தர்கள் குவிவர்.
அம்மன் தரிசனம் முடிவடைவதை அறிவிக்கும் வகையில், கோவில் மணி, வாத்தியங்கள் முழங்கும். அதன்பின் மூன்று நாட்கள் உத்சவ திருவிழா நடக்கும்.
அம்மனுக்கு வளையல், ஆடைகள், நெய் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் வழங்குகின்றனர். அது தவிர, அம்மனிடம் மனமுருகி வேண்டினால், அம்மனின் வலது புறம் இருந்து பூ விழுந்தால், வேண்டியது நிறைவேறும் என்றும்; இடதுபுறமாக விழுந்தால் நிறைவேறாது என்றும் நம்புகின்றனர்.
கடந்த 2024 லோக்சபா தேர்தல் முடிவில், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவாரா என்று கேட்டபோது, வலது புறமாக பூ விழுந்தது. அதன்படியே மோடியும் பிரதமராகி உள்ளார்.