பதிவு செய்த நாள்
11
நவ
2025
11:11
புளிய மரத்தை பார்த்தால், சிறு வயதில் நாம் கேட்ட கதைகள் நினைவுக்கு வரும். புளிய மரத்தில் பேய் இருக்கும் என, பயமுறுத்துவர். கர்நாடகாவில் புளிய மரத்தடியை கோவிலாக கொண்டுள்ள, அற்புதமான கோவில் உள்ளது. கேட்ட வரங்களை வாரி வழங்கும் துர்க்கை அம்மன் குடி கொண்டுள்ளார்.
மைசூரின், சிந்தவள்ளி கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையானது. கோவில், கட்டடத்தில் இல்லை; திறந்தவெளியில் புளிய மரத்தடியில் உள்ளது. இதற்கு முன்பு பல முறை கோவில் கட்ட, முயற்சி நடந்தது. ஆனால் கட்ட முடியவில்லை. பல இடையூறுகள் வந்தன. எனவே அம்பாள் திறந்த வெளியில், இயற்கை சூழலில் இருக்கவே அம்பாள் விரும்புவதாக நினைத்து, கோவில் கட்டும் முயற்சியை கைவிட்டனர்.
புளிய மரத்தடியில் கல்லில் துர்க்கை அம்மனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு குடிகொண்டுள்ள துர்க்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர். தன்னை நாடிவந்து கைகூப்பி பிரச்னைகளை கூறி வேண்டினால், பிரச்னைகள் சரியாகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
கடுமையான வேண்டுதல் தேவையில்லை. இரு கை கூப்பி வணங்கினாலே போதும். கேட்ட வரம் கிடைக்கும். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்தபடி பக்தர்களை அரவணைக்கிறார்.
கடன் தொல்லை, குடும்ப பிரச்னை, திருமண தடை, குழந்தை இல்லாமை போன்ற கஷ்டங்களில் தவிப்பவர்கள், இங்கு வந்து வேண்டுதல் வைத்து பலன் பெறுகின்றனர். தினமும் துர்க்கை அம்மனுக்கு பூஜைகள் நடக்கின்றன.
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி, துர்க்கை அம்மனை வழிபடுவர். அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அந்த வழியாக வாகனத்தில் பணிக்கு செல்வோர், வாகனத்தை நிறுத்தி, நமஸ்கரித்து விட்டு செல்கின்றனர்.
மைசூரு நகரில் இருந்து, 16 கி.மீ., துாரத்தில் உள்ள, சிந்துவள்ளி கிராமத்தில் புளிய மரத்தடி துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. பெங்களூரு, ராம்நகர், மாண்டியா, துமகூரு உட்பட, அனைத்து நகரங்களில் இருந்தும், மைசூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. பஸ் அல்லது ரயிலில் வந்திறங்குவோர், மைசூரில் இறங்கி அங்கிருந்து வாடகை வாகனத்தில், கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: திறந்த வெளியில் கோவில் அமைந்திருப்பதால், நேரம் கட்டுப்பாடு இல்லை. எப்போது வேண்டுமானாலும் துர்க்கை அம்மனை தரிசிக்கலாம்.