பதிவு செய்த நாள்
11
நவ
2025
11:11
தீய சக்தியால் கடுமையான இன்னல்களுக்கு ஆளான கிராமத்தினரை காப்பாற்ற தோன்றிய விஷ்ணு, தீய சக்தியை ஒழித்து, கிராமத்தினரை பாதுகாக்க இங்கேயே நிலைத்து, அருள்பாலித்து வருகிறார்.
இத்தகைய புண்ணியம் பெற்ற அலேவூர் கிராமம், உடுப்பி டவுனில் இருந்து 8 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது அலேவூர் விஷ்ணுமூர்த்தி கோவில்.
புராணங்கள்படி, பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, அலேவூர் கிராமத்தில் தீய சக்தியினால், நோய்களாலும், துரதிர்ஷ்டங்களால் அவதிப்பட்டு வந்தனர். தொடர்ந்து சிரமங்களை அனுபவித்து வந்தனர்.
பயிர்கள் நாசமாயின; குடும்பத்தில் அமைதியின்றி தவித்தனர். அவ்வப்போது கிராமத்தில் விசித்திரமான நிகழ்வுகள் நிகழ்ந்து வந்தன. வேறு வழியின்றி, கிராம மக்கள், கடவுளை நோக்கி பிரார்த்தித்தனர்.
இவர்களின் பிரார்த்தனையால் குளிர்ந்த விஷ்ணு, கிராமத்தினரை காப்பாற்ற, தீய சக்திகளை எதிர்த்து போராடவும், பக்தர்களை பாதுகாக்கவும் சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் விஷ்ணுமூர்த்தி அவதாரம் எடுத்து, பூலோகத்துக்கு வந்து, தீய சக்திகளை அழித்து, கிராமத்தினரை காப்பாற்றியதாகவும், மக்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே நிலைத்து நின்றதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின், இக்கிராமத்தில் எந்த தீய சக்திகளின் ஆட்டமும் எடுபடவில்லையாம். தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கூட, இக்கோவிலுக்கு வந்து சென்றபின், குணமடைந்ததாக பல கதைகள் உள்ளன.
இத்தகைய இந்த கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் இருந்த கல்வெட்டில் 19 வரிசைகள் உள்ளன. அதில், சிவலிங்கம், நந்தி, சூரியன், சந்திரன் உட்பட மற்ற குறிகளும் உள்ளன. ஆரம்பத்தில் இது சைவ வழிபாட்டு தலமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இக்கோவில், கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள கோவில்கள் போன்று, கல் பாணியில் கட்டப்பட்டுள்ளது. கருவறையில் விஷ்ணுமூர்த்தி அருள்பாலிக்கிறார். இக்கோவில் அருகில் பழங்கால கல்வெட்டுகள், பழைய கோவில்களின் அடையாளங்கள் காணப்படுவதால் இக்கோவில் எத்தகைய தொன்மை வாய்ந்தது என்பது நிரூபணமாகிறது.
மயூர வர்மா அரசர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், வழக்கமான கோவில் போன்று இல்லாமல், வீடுகளுக்குள் நுழைவது போன்று கோவில் நுழைவு வாயில் அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்ததும், கொடி கம்பம் வரவேற்கும். அதை தாண்டி மற்பூஜை மண்டபம், அதை தாண்டிச் சென்றால், கருவறையில் விஷ்ணுமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் பிரம்ம தேவரின் பாதமும், இடதுபுறத்தில் நாகதேவதை சன்னிதியும் உள்ளன. விஷ்ணுமூர்த்தி கருவறை முழுதும் கற்களால் செதுக்கப்பட்டதால், இன்னும் நிலைத்து நிற்கிறது. அதுமட்டுமின்றி, கருவறை சுவர், ‘இன்டர்லாக் சிஸ்டம்’ போன்று, கற்களால் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிமென்டோ, களிமண்ணோ பூசப்படவில்லை.
கருவறையை சுற்றி வந்தால், இடதுபுறத்தில் துளசி மாடம் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி வரும்போது, அந்த காலத்திற்கே நாம் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இக்கோவிலில் அனைத்து பரிவார சுவாமிகள் இங்கு காணலாம்.
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சி மூலம், உடுப்பி டவுன் அடைய வேண்டும். அங்கிருந்து உள்ளூர் பஸ் மூலம் செல்லலாம்.
ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
பஸ்சில் செல்வோர், உடுப்பி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
திருவிழா: மார்ச் – ஏப்ரலில் பிரம்ம ரத உத்சவம்
கோவில் திறப்பு: காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.