பதிவு செய்த நாள்
14
நவ
2025
01:11
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்
தெளிவான சிந்தனையும் எடுக்கும் வேலைகளை முடிக்கும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை நன்மையான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டில் குடியேறும் நிலை ஏற்படும். சிலர் வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். டிச.6 வரை 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் புதன் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தித் தருவார். கடன் கேட்டும் கிடைக்காமல் இருந்த நிலையை மாற்றுவார். கையில் பணப்பழக்கத்தை ஏற்படுத்துவார். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்க வைப்பார். புதிய இடம், வீடு வாங்கும் கனவை நிறைவேற்றி வைப்பார். ராசிநாதன் சுக்கிரன் நவ.27 வரை உடல்நிலையில் சிறிய சங்கடங்களை ஏற்படுத்தலாம். அதன் பிறகு நட்பு வட்டத்தால் உங்கள் நிலையில் திடீர் மாற்றத்தை உண்டாக்கலாம். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தாய்வழி உறவுகளின் வழியே பிரச்னை, நெருக்கடியை ஏற்படுத்தலாம். சிலருக்கு உழைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு வரலாம் என்பதால் இந்த மாதத்தில் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ. 22, 23
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 24, 28. டிச. 1, 6, 10, 15
பரிகாரம் அனுமனை வழிபட அல்லல்கள் நீங்கும். நன்மை சேரும்.
எந்த நிலையில் பிறந்திருந்தாலும் வாழ்வில் முன்னேற்றத்தை அடையும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மங்களகாரகன் குரு மூன்றாம் இடத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் அவர் முன்பு சஞ்சரித்த இரண்டாம் வீட்டின் பலனை இப்போது கொடுப்பார் என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஜீவன ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்து வருவதால் தொழிலில் எதிர்பாராத நெருக்கடி, பிரச்னைகள் உருவாகும். பணியாளர்கள் கவனக்குறைவின் காரணமாக மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக வேண்டி வரும். சிலர் உங்கள் மீது புகாரும் அளிக்கலாம் அதன் காரணமாக இடமாற்றமும் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. சுயதொழில் செய்பவர்கள் பிறரை நம்பாமல் அனைத்திலும் நேரடி பார்வையை செலுத்துவது அவசியம். உங்கள் விரயாதிபதி செவ்வாய் டிச.6 வரை சப்தம ஸ்தானத்திலும் அதன் பின் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். உடல் பாதிப்பும் உண்டாகலாம். புதிய இடம் வாங்கும் முயற்சியில் சங்கடத்திற்கு ஆளாகலாம் என்றாலும் டிச.6 வரை 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்களைப் பாதுகாப்பார். வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை அளிப்பார். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவார். வங்கியில் கேட்டிருந்த பணம் கையில் வருகின்ற நிலையை உண்டாக்குவார். நவ.27 முதல் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த மாதத்தில் நன்மையை உண்டாக்கும். சங்கடத்தை போக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி விலகும்.
சந்திராஷ்டமம்: நவ. 23, 24
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 24, 29. டிச. 2, 6, 11, 15
பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்
மனதில் தைரியமும் செயல்களில் வேகமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ரத்தக்காரகன், சகோதரக்காரகன் செவ்வாய் டிச.6 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளலாம் கவனம். அதனால் சட்டரீதியான பிரச்னைகளை சந்திக்கும் நிலை இருப்பதால் ஒவ்வொரு வேலையிலும் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நல்லது. பிறருக்கு ஜாமின் கொடுப்பது, முன்நிற்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட வேண்டாம். உங்கள் ராசிக்கு சுகாதிபதியான சூரியன் மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் திடீர் மாற்றங்களை சந்திக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். பணியாளர்கள் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். அதன் காரணமாக இடமாற்றம் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொன்றிலும் கவனமாக இருப்பது அவசியம். ஜீவன ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிப்பதும் பணியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். தவறு செய்வோருக்கு சிக்கலை உண்டாக்கும். வியாபாரிகள் தடை, பிரச்னையை சந்திக்கலாம். உங்கள் தன, குடும்பாதிபதி புதனின் சஞ்சாரம் டிச. 6 வரை சாதகமாக இருப்பதால் நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். உறவினரால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து நடந்து கொள்வர். சுயதொழில் செய்பவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் லாபம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் யாரையும் வேலையை விட்டு நீக்க வேண்டாம். அது உங்களுக்கு எதிர்மறையான நிலையை உண்டாக்கும். 3 ம் இடத்தில் உள்ள குரு வக்கிரம் அடைந்திருப்பதால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வார்த்தையில் தெளிவு இருக்கும் என்றாலும், உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகள் இந்த மாதத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: நவ. 24, 25
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 27. டிச. 6, 9, 15
பரிகாரம் முருகனை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடந்தேறும்.