நிலக்கலிலிருந்து பம்பைக்கு செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2025 05:11
சபரிமலை; ஆன்லைன் முன்பதிவு அல்லது ஸ்பாட் புக்கிங் கூப்பன்கள் இல்லாமல் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட கடந்த 16-ம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த நான்கு நாட்களில் தினமும் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர். நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 23- ம் தேதி அதிகபட்சமாக ஒரு லட்சத்து 17 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் நடத்தினர். இந்த சீசனில் நேற்று காலை வரை சுமார் ஒன்பது லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளதாக கணக்குகள் தெரிவிக்கின்றது. கூட்டம் அதிகரித்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் ஆன்லைன் முன்பதிவு அல்லது ஸ்பாட் புக்கிங் கூப்பன் இல்லாத பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரு நாளுக்கான ஸ்பாட் புக்கிங் முன்பதிவு முடிந்து விட்டால் அடுத்த நாள் கூப்பன் எடுத்த பின்னரே தரிசனத்திற்கு செல்ல முடியும். அதுவரை நிலக்கலில் பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு தேவசம்போர்டு அறிவித்துள்ளது.