பதிவு செய்த நாள்
05
பிப்
2011
02:02
உடனடியாக சுரசை தன் அரக்க வடிவத்தை மாற்றினாள். காஷ்யபரின் ஆஸ்ரமத்திற்கு செல்வதனால், அந்தணப்பெண்ணின் வடிவமே ஏற்றது என முடிவெடுத்தாள். அதுபோலவே தன்னை மாற்றிக் கொண்டு, ஆஸ்ரமத்தை நெருங்கினாள். மகோற்கடன் வாசலில் சக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவரது தும்பிக்கையை பிடித்து இழுத்து, சிறுவர்கள் கலாட்டா செய்தனர். பலம் மிக்க யானையல்லவா கணபதி! அந்தச்சிறுவர்களுக்கு அதன் மூலம் அளவற்ற மகிழ்ச்சியை அவன் தந்து கொண்டிருந்தான். இந்நேரத்தில் அங்கே வந்த சுரசையை மகோற்கடன் கவனித்து விட்டான். இருப்பினும், தன் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தான். சுரசை அங்கே வந்து அவனிடம் அன்புமொழி பேசினாள். மற்ற சிறுவர்களிடமும் அவள் அன்பைப் பொழிவது போல நடித்தாள். திடீரென தன் உருவத்தை மாற்றி, குழந்தை மகோற்கடனை தன் வாய்க்குள் போட்டு விட்டாள். சக சிறுவர்கள் அலறியடித்து ஆஸ்ரமத்திற்குள் ஓடினர். குருவே! குருவே! மகோற்கடனை பூதம் விழுங்கிவிட்டது... பூதம் விழுங்கிவிட்டது என குரல் எழுப்பி ஓடிச் சென்றனர். காஷ்யபரும், அதிதியும் வாசலுக்கு வந்தனர். தங்கள் முன்னால் மிகப்பெரிய வடிவில் ஒரு அரக்கி நிற்பதையும், அவளது முன் பல் இடுக்கில் குழந்தை சிக்கியிருப்பதையும் பார்த்தனர். பெரியவர்கள் எந்தச்சூழலிலும் பதறுவதில்லை. காஷ்யபருக்கு தெரிந்து விட்டது... எல்லாம் அந்த ஆதிமுதலானவனின் திருவிளையாட்டு தான் என்று! ஆனால், பெற்றவளுக்கு பிள்ளைக்கு ஒன்று என்றால் தவித்துப் போவாள். அதிதி அழுது அரற்றினாள். ஏ பாதகி ! நீயும் ஒரு பெண்ணா! என் குழந்தையை விட்டுவிடு. பதிலாக என்னை உன் உணவாக்கிக் கொள், எனக் கதறினாள். சுரசையோ, எதையும் கண்டுகொள்ளாமல் பயங்கர சிரிப்பு சிரித்தாள். ஒரே விழுங்கு... மகோற்கடன் அவளது வயிற்றுக்குள் போய் விட்டான். அதிதி மயக்கநிலைக்கே போய்விட்டாள். காஷ்யபர் இப்போதும் பதறவில்லை. மனைவியைத் தேற்றினார்.
அதிதி! நாம் ஏன் அழ வேண்டும்? நமக்கு பிறந்திருப்பது யார் என்பதையே மறந்து பிள்ளைப் பாசத்தில் தவிக்கிறாயே! அவன் உலகையே ஆளும் ஈசனல்லவா! அந்த ஈசனுக்கும் அவன் இறைவனல்லவா! என் ஆறுதல் மொழிகள் சொன்னார். காஷ்யபர் நினைத்தது போலவே சற்றுநேரத்தில் நிகழ்ந்தும் விட்டது. குழந்தையை விழுங்கிய மகிழ்ச்சியில் பேயாட்டம் போட்ட சுரசையின் வயிற்றுக்குள் சென்ற மகோற்கடன், தன் நெற்றிக்கண்ணைத் திறந்தான். விரசையின் வயிறு எரிந்தது. அவள் அலறித் துடித்தாள். ஏ சிறுவா! உள்ளேயிருந்து என்ன செய்கிறாய்? என் வயிறு சுடுகிறதே, என்று கதறினாள். பிறர் வயிற்றெரிச்சலை சம்பாதிப்பவர்கள், தாங்களும் அதே அவஸ்தைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதற்கு இந்த சுரசையே ஒரு உதாரணம் தான்! இந்த நேரத்தில் வயிற்றுக்குள் இருந்த மகோற்கடன் தன் கால் பெருவிரலால், அவள் வயிற்றை அமுக்கினான். அது கிழிந்து தொங்கியது. ரத்த ஆறு வெளிப்பட்டது. உள்ளிருந்து துள்ளிக் குதித்து வெளிப்பட்டான் மகோற்கடன். சுரசை வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்து மடிந்தாள். அதிதி மகிழ்ந்தாள். காஷ்யபர் தன் திருமகனின் வீரச்செய<லுக்காக பெருமிதப்பட்டார். கடவுளின் கிருபை அலாதியானது. பக்தையான நல்லவளின் வயிற்றில் நேரடியாகப் பிறக்காமல், பெரிய உருவத்துடன் வந்தார். அவளது வேண்டுகோளுக்காக உருவத்தைச் சுருக்கி, பாலலீலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், கெட்டவளான அரக்கியின் வயிற்றுக்குள் ஒரு நிமிடப்பொழுதாவது இருந்து விட்டு, அவளது வயிற்றில் இருந்து மீண்டும் மறு பிறப்பெடுக்கிறார். தவறான நோக்கத்துடன் தன்னை விழுங்கி தாங்கியிருந்தாலும், சுரசையின் வயிற்றில் கணநேரமாவது இருந்துவிட்டதால், அவளுக்கு முக்தியும் தந்தார். அவள் சொர்க்கத்தை அடைந்து பிறவாநிலை பெற்றாள். கடவுள் நல்லவர், கெட்டவர் என பார்ப்பதில்லை. அவருக்கு எல்லாரும் ஒன்றுதான். நல்லவர்களுக்கு நேரடியாக சொர்க்கத்தையும், கெட்டவர்களுக்கு சிறிது அவஸ்தையைக் கொடுத்து அவர்களையும் ஆட்கொள்ளும் தன்மையுடையவர் என்பது இதில் இருந்து தெரிகிறது அல்லவா! குழந்தையை ஆஸ்ரமத்திற்குள் எடுத்துச் சென்று அவரை பலவகை திரவியங்கள், பால், பன்னீர், புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு நீராட்டினாள் அதிதி. பின்னர் சாம்பிராணி புகையிட்டு, தலையைக் கோதி விட்டாள். இதற்குள் விரசை இறந்து போன தகவல், வேதாந்தக, நராந்தர்களை எட்டியது. ஆச்சரியப்பட்டு போனார்கள் அவர்கள். நிச்சயம் அந்தக் குழந்தை சக்தி வாய்ந்தது தான். அவனைக் கொல்ல வேண்டுமானால், பலசாலிகளை அனுப்ப வேண்டும் என முடிவு செய்து, உதத்தன், துந்துபி என்ற இரண்டு சேனாதிபதிகளை வரவழத்தனர்.
சேனாதிபதிகளே! நீங்கள் உடனடியாக காஷ்யபரின் ஆசிரமம் சென்று, அந்த சிறுவனைக் கொண்டு வாருங்கள் அல்லது கொன்று வாருங்கள், என்றனர். ஒரு சிறுவனைப் பிடிக்க இரண்டு பேரா? ஆச்சரியமாக இருக்கிறதே எனக்கருதிய அந்த அரக்கர்கள், காஷ்யபரின் இல்லத்தை கணநேரத்தில் அடைந்தனர். குழந்தையைக் கொல்வதற்காக ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தனர். தங்கள் வடிவத்தை மாற்றிக்கொண்டால் மகோற்கடனைப் பிடிப்பது எளிதெனக்கருதி, தங்களை கிளிகளாக மாற்றிக்கொண்டனர். அப்போது அதிதி, தன் பாலகனை மடியில் சுமந்து கொண்டு, வெளியே வந்தாள். கிளிகளைக் கவனித்துவிட்டான் மகோற்கடன். புன்னகை பூத்தான். கிளிகளைப் பார்த்து தன் குழந்தை சிரிப்பதைக் கண்ட அதிதி,அவற்றை வேடிக்கை காட்டியபடியே, குழந்தைக்கு பால்சோறு ஊட்ட ஆரம்பித்தாள். குழந்தை மகோற்கடனோ, அம்மா! எனக்கு அந்தக்கிளிகள் வேண்டும், அவற்றை பிடித்து தா! அவை என் அருகில் இருந்தால் தான் நான் சாப்பிடுவேன், என சாப்பிடாமல் முரண்டு பிடித்தான். அதிதி மகனைக் கண்டித்தாள். குழந்தாய், என்ன இது சேஷ்டை! மரத்தில் இருக்கும் கிளிகளை என்னால் எப்படி பிடிக்க முடியும்? நீ சாப்பிடு! வேடர்கள் இவ்வழியாக வருவார்கள், அவர்களிடம் சொல்லி பிடித்து தருகிறேன், என்று சொல்லவும், அந்த அதிசயம் நிகழ்ந்தது.