பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
அதிதியின் மடியில் படுத்திருந்த குழந்தை மகோற்கடன், ஒரு பருந்தாக வடிவெடுத்தான். மின்னல் வேகத்தில் கிளிகளை நோக்கிப் பறந்தான். அந்தக் கிளிகளை வாயால் கவ்வினான். அதன் இறக்கைகளை பிய்த்து எறிந்தான். தலையைக் குதறினான். அந்த இரண்டு கிளிகளும் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து மடிந்த போது, தங்கள் சுயரூபத்தை அடைந்து ஓவென்ற பேரிரைச்சல் கேட்டது. இதெல்லாம் அரக்கர்களின் வேலை என்பது அப்போது தான் அதிதிக்குப் புரிந்தது. அவள் காஷ்யபரிடம் ஓடிச்சென்று விஷயத்øதைச் சொல்ல, அவரும் வந்து பார்த்து குழந்தையின் வீரத்தை எண்ணி அதிசயித்தார். மேலும், பால விநாயகனின் லீலையையும் ரசித்தார். தங்களால் அனுப்பப்பட்ட அசுரர்கள் கிளிவடிவில் சென்று குழந்தையின் கையால் இறந்தார்கள் என்பதைக் கேள்விப்பட்ட தேவாந்தக, நராந்தகருக்கு கிலி பிடித்துக்கொண்டது. மேற்கொண்டு சில காலம் குழந்தை மகோற்கடனுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்து விட்டனர். அதிதியும் நிம்மதியாக குழந்தையை வளர்த்தாள். குழந்தைக்கு மூன்று வயதான போது, அவனை ஒரு முறை சோமவதி என்ற குளத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே சில முனிபத்தினிகளும், முனிவர்களும் அவரவர்க்குரிய துறைகளில் நீராடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு முதலை தண்ணீருக்குள் இருந்து வெளிப்பட்டது. குழந்தை மகோற்கடன் விளையாட்டுத்தனமாக, அதோ! பூச்சி வருகிறது. நான் அதைப் பிடிக்கப் போகிறேன் என சொல்லிவிட்டு, யார் பதிலுக்கும் காத்திராமல், தண்ணீரில் குதித்து விட்டான். அதிதி அலறினாள். குழந்தை தண்ணீரில் குதித்து விட்டானே என்று பிற துறைகளில் குளித்துக் கொண்டிருந்த முனிவர்களும் ஓடோடி வந்தனர். ஆனால், யாருக்கும் தண்ணீரில் குதிக்க தைரியமில்லை. என்னாகப் போகிறதோ என்று பதைபதைப்புடன் பேசிக் கொண்டனர். மகோற்கடன் அந்த முதலையை நிஜமாகவே பூச்சியைப் பிடிப்பது போலவே பிடித்தான். ஆனால், அந்த முதலை தன் பிறவிக்குணத்தைக் காட்டி விட்டது. குழந்தையை வாலால் சுழற்றி அடித்து அப்படியே விழுங்கிவிட்டது. அதிதியும் முனிபத்தினிகளும் கதறி அழுதனர். முனிவர்கள் வருத்தம் தாளாமல் கண்ணீர் வடித்தனர்.
மகோற்கடா! உன் தந்தைக்கு என்ன பதில் சொல்வேன். குளத்திற்கு குளிக்க வராதே. வீட்டிலேயே நீராடு என்று சொன்னேனே! உன்னை அங்கே பாலிலும், பன்னீரிலும் குளிக்க வைத்திருப்பேனே! இப்படி சேஷ்டை செய்து, வீணாக உயிர் துறந்தாயே! விநாயகப்பெருமானே! தவமிருந்து பெற்ற உம்மை எப்படி மீட்பேன், என புலம்பியபோது, குழந்தையை விழுங்கிய முதலையின் வாயைப் பிளந்து கொண்டு, மகோற்கடன் வெளிப்பட்டதை எல்லாரும் பார்த்தனர். அவன் முதலையின் முதுகில் ஏறி அமர்ந்தான். மகோற்கடா! முதலையைக் கொன்றுவிட்டு தப்பி வந்துவிடு. அல்லது சமயோசிதமாக கரைக்கு வந்து சேர், என அதிதி கத்தினாள்.மகோற்கடன் அந்த முதலையைப் பார்த்து, கரையை நோக்கிச் செல், என்று ஆவேசமாக சொன்னான். முதலை வேகமாக கரைக்கு வந்தது. அது கரை முகப்பைத் தொட்டதும் இறந்து விட்டது. அதன் உடலில் இருந்து அழகே வடிவான ஒரு இளைஞன் வெளிப்பட்டான். அவன் மகோற்கடனின் பாதங்களில் விழுந்து பணிந்தான். ஐயனே! நான் ஒரு கந்தர்வன். எனது பெயர் சித்திரன். எங்கள் லோகத்தில் நடந்த திருமணத்துக்கு பிருகு முனிவரை அழைத்திருந்தோம். அவரும் வந்தார். எல்லா கந்தவர்களும் அவருக்கு தகுந்த மரியாதை அளித்தனர். நான் திருமண வேலையில் மும்முரமாக இருந்தததால், அவரை வரவேற்காமல் விட்டுவிட்டேன். இதனால், கோபமடைந்த அவர் என்னை முதலையாக மாறும்படி சபித்து விட்டார். நானும் முதலையாகி இந்த தடாகத்திலே கிடந்தேன். அவரிடம் சாபவிமோசனம் கேட்ட போது, சிவமைந்தரான விநாயகர், பூமியில் மகோற்கடராக அவதரிக்கும்போது, அவரது ஸ்பரிசத்தால் சுயரூபம் பெறுவேன் என்றார். அதன்படி என் நிலை இன்று மாறியது என்றான். பின்னர் கந்தவர்கள் சிலர், புஷ்பக விமானத்தில் பூமிக்கு வந்தனர். அவர்களுடன் சித்திரனும் ஏறி தன்லோகம் சென்றான்.தங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி... அவர்களை வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி வரவேற்காதவர்கள் முதலையாகவோ இன்னும் உயிர்களைப் பறிக்கும் பூச்சிகளாகவோ பிறந்து மக்களால் வெறுக்கப்படுவார்கள். ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமையில் சொந்த பந்தமின்றி வாழ்வார்கள் என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு தத்துவத்தையும் பால விநாயகரின் லீலையில் இருந்து இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். ஏதாவது சிறப்பாக செய்து விட்டவர்களை ஆஹா...ஊஹூ என பாராட்டுவோம். இந்த ஆஹா, ஊஹூ என்ற வார்த்தைகள் எப்படி பிறந்தது தெரியுமா?
ஆஹா, ஊஹூ என்பவர்கள் கயிலாய லோகத்திற்கு சென்று அடிக்கடி சிவபெருமானை தரிசிப்பவர்கள். வழிபாடுகளிலேயே மிகவும் உயர்ந்தது இசையால் இறைவனை வழிபடுவதாகும். உள்ளம் உருகி, தாள வாத்தியங்களுடன் பாட்டுப்பாடி இறைவனை வணங்கினால் அவன் மிகவும் மகிழ்வான். இசைக்கலைஞர்கள் பாடும்போது ரசிகர்கள் பாடலில் லயித்து ஆஹா, ஊஹூ என சொல்லி பாராட்டுவதில்லையா? அதனால் அவர்கள் அந்த வார்த்தைகளையே தங்களுக்கு பெயராக சூட்டிக் கொண்டனர். இவர்களது நண்பர் தும்புரு. குதிரை முகம் கொண்ட இவரும் சிறந்த இசைஞானி. இவர்கள் மூவரும் சிவபெருமானைத் தரிசிக்க தங்கள் தாளவாத்தியங்களுடன் கயிலைமலைக்குச் சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் காஷ்யபரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். அந்த மகரிஷியைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்ரமத்திற்குள் சென்றனர். காஷ்யபரும், அதிதியும் அவர்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்று, விருந்து சாப்பிட வேண்டினர். அந்த கலைஞர்களும் தாங்கள் நீராடி விட்டு, பஞ்சமூர்த்தி பூஜை செய்த பிறகு சாப்பிடுகிறோம் என்றனர். அவர்களிடம் விநாயகர், சிவன், பார்வதி, விஷ்ணு, சூரியன் ஆகியோரின் சிலைகள் இருந்தன.