பல்லவர் கால விஷ்ணு துர்க்கை கற்சிற்பம் காஞ்சிபுரம் அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2026 04:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள ஆரியம்பாக்கத்தில், கி.பி., 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பல்லவர் கால விஷ்ணு துர்க்கை கற்சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர் முனைவர் மு.அன்பழகன் நேற்று கண்டெடுத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஆரியம்பாக்கம் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் அன்பழகன் நேற்று களவு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊரின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தங்கரையில் கி.பி., 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால விஷ்ணுதுர்க்கை கற்சிற்பத்தை கண்டறிந்தார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் அன்பழகன் கூறியதாவது: ஆரியம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பம் 80 செ.மீ., உயரமும் 42 செ.மீ., அகலமும் கொண்டது. இச்சிற்பம் கிழக்குதிசை பார்த்த நிலையில் உள்ளது. மஹாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் இப்பெண் தெய்வ சிற்பம் நின்ற நிலையில், நான்கு கரங்களுடன் உள்ளது. வலது முன்கை சிதைந்த நிலையில், அபய முத்திரை காட்ட பின்கை சக்கரம் கொண்டுள்ளது. இடது முன்கை இடுப்பில் வைத்திருக்க பின்கை சங்கு கொண்டுள்ளது. மார்பு மற்றும் இடை பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பட்டாடை அணிந்துள்ள இவரின் தலையில் கிரீடமும், கழுத்து, மார்பு, காதுகள், தோள்கள், கைகள் மற்றும் கால்களில் அணிகலன்களும் காணப்படுகின்றன. முகம் சிறிது மழுங்கிய நிலையில் காணப்படுகிறது. கல்வெட்டு எழுத்துக்கள் எதுவுமற்ற இச்சிற்பம் பல்லவர் காலமான கி.பி. 9ம் நுாற்றாண்டாக இருக்கலாம். இத்தகவலின் உண்மைத்தன்மையை காஞ்சிபுரம் அருங்காட்சியகக் காப்பாட்சியர் உமாசங்கரும் உறுதி செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.