பதிவு செய்த நாள்
09
ஏப்
2026
11:04
உடுமலை: கோவில் வளாகத்தில், அஷ்டதிக் தேவதைகளாக, கிழக்கு – சசி தேவி, தென் கிழக்கு, ஸ்வாகா தேவி, தெற்கு– ஸ்வர்க்கா தேவி, தென்மேற்கு – வர்காதேவி, மேற்கு – காலகண்டி, வட மேற்கு – நிர்மினி தேவி, வடக்கு– நாரிணி தேவி, வட கிழக்கு – சுசி கேதினி ஆகியோர் காவல் தெய்வங்களாக உள்ளனர்.
மேலும், இக்கோவிலில், கிழக்கு நோக்கி, தென் மேற்கு மூலையில், சக்தி விநாயகர் தனி சன்னதியில் எழுந்தருளி வருகிறார்.
இக்கோவிலில், முருகப்பெருமான், தனி சன்னதியில், செல்வ முத்துக்குமரனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பறவை காவடி எடுக்கும் பக்தர்கள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பறவைக்காவடி, மயில்காவடி, குதிரைக்காவடி, நீதி காவடி என உடல் முழுவதும் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும், அம்மனை வேண்டியும், வேண்டுதல் நிறைவேற்றியதால் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், கிரேன்களில், பறவைக்காவடி, நீதி காவடி, மயில்காவடி, கன்னிமார் காவடி, குதிரைக்காவடி என, பக்தர்கள் வாய், நாக்கில் வேல் குத்தியும், உடம்பில் கொக்கி கொண்டு அலகு குத்தியும், தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்துவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.
நவதானியங்களைக்கொண்டு முளைப்பாலிகை அமைத்து, மகா மாரியம்மன், தேரடி கருப்பணசாமி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, சமயபுரம் மாரியம்மன், திரவுபதியம்மன் என பல்வேறு உருவங்களில், முளைப்பாலிகை அமைத்து, பெண்கள் விரதம் இருந்து, முளைப்பாலிகையை ஊர்வலமாக, கோவிலுக்கு எடுத்து வந்து, மகா சக்தி மாரியம்மனை வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இயல், இசையுடன் திருவிழா அம்மனை வழிபடும் பக்தர்கள்
மாரியம்மன் தேர்த்திருவிழா நோன்பு சாட்டியதும், விரதம் துவக்கும் பக்தர்கள், இயல், இசை நிகழ்ச்சிகளையும், நடத்தி, அம்மனை வழிபடுகின்றனர்.
திருவிழாவுக்காக கம்பம் நடப்பட்டதும், கோவில் வளாகத்திலுள்ள அரங்கிலும், குட்டைத்திடல் அரங்கிலும் பல்வேறு ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதே போல், பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள், தேவராட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களையும் ஆடி அம்மனை வழிபடுகின்றனர்.
பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரும் போதும், இசைக்கருவிகள் முழங்க, நகருக்குள் ஊர்வலம் வருகின்றனர்.
அதே போல், தேரோட்டத்தின் போதும், பல்வேறு கிராம குழுவினர், தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி, உற்சாகமாக அம்மனுக்கு சேவை செய்கின்றனர்.