இந்திரத்யும்னன் என்ற மன்னர் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தார். மகாவிஷ்ணுவின் பக்தரான அவர் ஒருநாள் மவுன விரதம் இருந்தார். அப்போது அவரைக் காண அகத்திய முனிவர் வந்தார். அவரை வரவேற்காமல் வழிபாட்டிலேயே இருந்தார் மன்னர். இதனால் கோபம் கொண்ட அகத்தியர், ‘‘விருந்தினரை உபசரிக்காத நீ யானையாகப் பிறப்பாய்’’ எனச் சாபமிட்டார். கஜேந்திரன் என்ற பெயரில் யானையாக காட்டில் அலைந்தார் மன்னர் இந்திரத்யும்னன்.
இதற்கிடையில் அதே காட்டில் இன்னொரு சம்பவம் நடந்தது. ஒருநாள் தேவலோகத்தைச் சேர்ந்த ‘ஹூஹூ’ என்பவன் அங்கிருந்த குளத்தில் நீராடினான். அங்கு தேவல மகரிஷி தண்ணீர் குடிக்க வந்தார். அப்போது விளையாட்டாக அவருடைய காலை இழுத்தான் ஹூஹூ. கோபத்தில், ‘‘நீ முதலையாக பிறப்பாய்’’ என சாபமிட்டார். அவனும் அந்த குளத்திலேயே முதலையாக வாழ்ந்தான்.
அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது கஜேந்திரன் யானை. அதன் காலை முதலை கவ்வி இழுத்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் அதனால் தப்ப முடியவில்லை. கடைசியாக மகாவிஷ்ணுவை அழைத்தது. உடனடியாக கருடன் மீதேறி வந்த மகாவிஷ்ணு, சக்கர ஆயுதத்தால் முதலையைக் கொன்றார்.
பாகவதத்தில் உள்ள இந்த ‘கஜேந்திர மோட்சம்’ வரலாறை படித்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.