சிங்கம்மாள் என்ற கொங்கு சோழ மன்னனின் மனைவி, அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பகுதி தான் இது.
சிங்கம்மா நல்லுார் என்ற பெயர் மருவி, சிங்காநல்லுாராக மாறியுள்ளது. வேதியருக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த ஊர், வேதபுரி என்றும் வழங்கப்பட்டது.
ஏழு மாட வீதிகளை கொண்ட இந்த வேதபுரி என்ற சிங்காநல்லுார், அக்ரஹாரத்தில் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் வாயிலில் தீப தூணை அடுத்து, ஏழு நிலை கோபுரம், ஏழு மாடங்களுடன் ராஜகோபுரமாக எழுந்துள்ளது. அர்த்தமண்டப நுழை வாயிலில் ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுரத்தையடுத்து மகா மண்டபம், மார்பிள் கற்களால் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் மத்தியில் நிறுவப்பட்டுள்ள த்வஜஸ்தம்பம் கொடிமரம் 40 அடி உயரம் கொண்டது. பிரம்மோற்சவத்தின் போது இங்கு கொடியேற்றம் நிகழும்.
அடுத்துள்ள கருட மண்டபத்தில், கருடாழ்வார் கும்பிட்ட கரங்களுடன் பெருமாளை நோக்கி சேவை சாத்தியபடி உள்ளார். மகாமண்டப சுவற்றில், ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாடல்கள் கல்வெட்டுகளில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.