பதிவு செய்த நாள்
17
செப்
2026
04:09
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எந்த வேலையாக இருந்தாலும் அதில் நிதானமும் கவனமும் பொறுமையும் தேவை. இந்த மாதத்தில் அவசர வேலை உங்களை அலைக்கழிக்கும். தேவையற்றப் பிரச்னைகள் தேடி வரும். இந்த நேரத்தில் பெரியோருடைய ஆலோசனைகளை ஏற்பதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நல்லது. முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவதும், கடன் வாங்குவதைத் தவிர்ப்பதும் நெருக்கடியில் இருந்து உங்களை மீட்கும். ராகு பகவானால் தவறான உங்கள் வாழ்க்கைப் பயணம் மாறலாம். கவுரவக் குறைவு ஏற்படலாம். பொன், பொருள், பெண் என நிறைய ஆசைகளை உங்களுக்கு உண்டாக்கி அதன் வழியாக உங்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம், தடம் புரள வைக்கலாம் என்பதால் எதிலும் இருந்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை அலசி ஆராய்ந்து அதன்பிறகு முடிவிற்கு வருவது நல்லது. குரு பகவானின் பார்வை 4, 6, 8 ம் இடங்களுக்கு உண்டாவதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். நோய் நொடி எதிர்ப்பு பகை என்பது எல்லாம் விலகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதையெல்லாம் சமாளித்து வெளியில் வருவீர்கள். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு மாதத்தின் தொடக்கத்தில் எதிர்பார்த்த பணம் வரும். விளைச்சல் கை கொடுக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: செப். 26, 27.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 25, 28. அக். 1, 7, 10, 16.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடம் விலகும்.
பூரம்: செல்வம் செல்வாக்கு என்ற எண்ணத்தோடு எப்போதும் பகட்டாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் இருந்த இடம் தெரியாமல் போகும். உறவினர் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் புதிய வாகனம் என்ற கனவு நனவாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி பிரச்னை முடியும். மறைமுகத் தொல்லை இருந்த இடம் தெரியாமல் போகும். பெண்கள், புதிய நண்பரிடம் ஓரடி விலகி இருப்பது கவுரவத்தை பாதுகாக்கும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மாதத்தின் முற்பகுதியில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முக்கியமான வேலைகளில் கவனக் குறைவு ஏற்படும். வேலைகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது. வாகனப் பயணத்தின் போதும், இயந்திரப் பணிகளிலும் நிதானம் அவசியம். குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலர் தேவையற்ற செலவு செய்து சங்கடத்திற்கு ஆளாவீர். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். அதற்காக கையிருப்பு கரையும். விவசாயிகள் நிதானமாகவும் சூழ்நிலையை அறிந்தும் செயல்படுவது அவசியம். மாணவர்கள் தவறான நண்பர்களை விட்டு விலகுவதால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: செப். 27, 28.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 24. அக். 6, 10, 15.
பரிகாரம்: மகாலட்சுமியை மனமுருகி வழிபட உங்கள் வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்: உழைப்பையும் திறமையையும் நம்பி வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் சூரியன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினர் ஆலோசனை உங்களுக்கு நன்மையளிக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் சங்கடம் உண்டாகும். கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போகும். சில நேரங்களில் உங்கள் கோபம் வார்த்தைகளில் வெளிப்படும். பண விவகாரத்தில் திருப்தியில்லாத, பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனம் குழப்பம் அடையும். வியாபாரிகள் பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பது சங்கடத்தில் கொண்டு போய் விடும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது. உங்களால் முடிந்ததை நிதானமாக செய்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும், அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்படுவதும் நன்மைக்கு வழி வகுக்கும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் உண்டாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பெண்களுக்கு குடும்பத்திலும் வெளியிலும் மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். வேலைக்கு முயற்சித்து வரும் பெண்களுக்கு திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலை அமையும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த நன்மையை அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.
அதிர்ஷ்ட நாள்: செப். 19. அக். 1, 10.
பரிகாரம்: காலையில் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.