Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐந்தாம் பத்து! ஏழாம் பத்து!
முதல் பக்கம் » பதிற்றுப்பத்து
ஆறாம் பத்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
14:45

பதிற்றுப்பத்து - 51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வடு அடு நுண் அயிர்

துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர,
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்
கடல் சேர் கானற் குட புலம் முன்னி,
கூவல் துழந்த தடந் தாள் நாரை
குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும்,  5
வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,
தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,
இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள்  10
வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி,
பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி
அர வழங்கும், பெருந் தெய்வத்து,
வளை ஞரலும் பனிப் பௌவத்து,
குண குட கடலோடு ஆயிடை மணந்த  15
பந்தர் அந்தரம் வேய்ந்து,
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாடுடன் கமழ,
சுடர் நுதல், மட நோக்கின்,
வாள் நகை, இலங்கு எயிற்று,  20
அமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்,
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்! என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங் குன்றத்து,  25
செயிருடைய அரவு எறிந்து,
கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்
பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;
தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்
எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்;  30
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து,
நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப,
தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை
கை வல் இளையர் கை அலை அழுங்க,
மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம்  35
வலை விரித்தன்ன நோக்கலை;
கடியையால், நெடுந்தகை செருவத்தானே.

பதிற்றுப்பத்து - 53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : குண்டு கண் அகழி

வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப,
நல்கினை ஆகுமதி, எம் என்று; அருளி,
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்
தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின்,  5
செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி,
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை,
ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி,  10
நின்னின் தந்த மன் எயில் அல்லது,
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது? வளையினும்,
பிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்!-
எழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக்  15
குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின்,
தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி,
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
ஏந்து கை சுருட்டி, தோட்டி நீவி,
மேம்படு வெல் கொடி நுடங்க,  20
தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே.

பதிற்றுப்பத்து - 54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்

துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நில்லாத் தானை

வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,
உள்ளியது முடித்தி; வாழ்க, நின் கண்ணி!
வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள்,
ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை,
பூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல்,  5
மின் இழை, விறலியர் நின் மறம் பாட;
இரவலர் புன்கண் தீர, நாள் தொறும்,
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி,
அனையை ஆகன்மாறே, எனையதூஉம்
உயர் நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று,  10
இரு நில மருங்கின் நெடிது மன்னியரோ!-
நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,
ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும்  15
ஒல்லார் யானை காணின்,
நில்லாத் தானை இறை கிழவோயே!

பதிற்றுப்பத்து - 55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துஞ்சும் பந்தர்

ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல! நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ!
இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்.
கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை,  5
தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந!
செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை,
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை!
குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்!
வாரார் ஆயினும் இரவலர், வேண்டி,  10
தேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!-
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய,
பெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி,
விண்டுச் சேர்ந்த வெண் மழை போலச்  15
சென்றாலியரோ-பெரும! அல்கலும்,
நனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற,
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு,
பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை,
தாங்குநர்த் தகைத்த ஒளி வாள்,  20
ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின் நாளே.

பதிற்றுப்பத்து - 56. வென்றிச் சிறப்பு

துறை : ஒள் வாள் அமலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்,  5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

பதிற்றுப்பத்து - 57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்

துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சில் வளை விறலி

ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,
துணங்கை ஆடிய வலம் படு கோமான்:
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்  5
செல்லாமோதில்-சில் வளை விறலி!-
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,
குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;
இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த,  10
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,
ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே?  15ஃ

பதிற்றுப்பத்து - 58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏ விளங்கு தடக்கை

ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!-
வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர்,
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை  5
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம்அல்லேம், புகா எனக் கூறி,
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்;
பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின்,
எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை,  10
ஏந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை;
வானவரம்பன் என்ப-கானத்துக்
கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வன் கை வினைஞர்  15
சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி,
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்,
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.

பதிற்றுப்பத்து - 59. வென்றிச் சிறப்பு

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மா கூர் திங்கள்

பகல் நீடு ஆகாது, இரவுப்பொழுது பெருகி,
மாசி நின்ற மா கூர் திங்கள்,
பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப,
புல் இருள் விடிய, புலம்பு சேண் அகல,
பாய் இருள் நீங்க, பல் கதிர் பரப்பி,  5
ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு,
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக,
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை! வீற்று இருங் கொற்றத்துச்
செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம்!-  10
அறியாது எதிர்ந்து, துப்பில் குறையுற்று,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்;
சினம் செலத் தணியுமோ? வாழ்க, நின் கண்ணி!-
பல் வேறு வகைய நனந் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்  15
ஆறு முட்டுறாஅது, அறம் புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத் தோள்,
பாடு சால் நன் கலம் தரூஉம்
நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே.

பதிற்றுப்பத்து - 60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்

துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மரம் படு தீம் கனி

கொலை வினை மேவற்றுத் தானை; தானே
இகல் வினை மேவலன்; தண்டாது வீசும்:
செல்லாமோதில், பாண்மகள்! காணியர்-
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது,
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி  5
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்,
மறாஅ விளையுள் அறாஅ யாணர்,
தொடை மடி களைந்த சிலையுடை மறவர்
பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி,  10
வரும் கடல் ஊதையின் பனிக்கும்,
துவ்வா நறவின் சாய் இனத்தானே.

 
மேலும் பதிற்றுப்பத்து »
temple news
பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் பதிற்றுப் பத்து எனப் பெயர் ... மேலும்
 

இரண்டாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 11. வெற்றிச் செல்வச் சிறப்பு துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : ... மேலும்
 

மூன்றாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல் துறை : செந்துறைப் பாடாண் ... மேலும்
 

நான்காம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் துறை : செந்துறைப் ... மேலும்
 

ஐந்தாம் பத்து! மார்ச் 22,2013

பதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு துறை : காட்சி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar