பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
05:04
திறமையுடன் செயல்புரிந்து அதிக நன்மை பெறும் மேஷராசி அன்பர்களே!
புத்தாண்டில் கேது, உங்கள் ராசியிலும், சனி, ராகு ராசிக்கு ஏழாம் இடத்தில் சிரமம் தரும் சூழ்நிலையில் உள்ளனர். மே28ல், குரு மூன்றாம் இடமான மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். பிரதான கிரகங்களின் அமர்வு அனுகூலக் குறைவாக உள்ளது. அதேநேரம், குருவின் ஐந்தாம் பார்வை சனி, ராகு கிரகங்களின் மீது பதிந்து அவை தரும் கெடுபலன்களின் உக்கிரத்தன்மையை குறைத்து சாந்தப்படுத்துகிறது. இதனால், வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று உணரும்வகையில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பீர்கள்.இளைய சகோதரர்களின் நல்ல ஆலோசனையை ஏற்றுக்கொள்வீர்கள். வீடு, வாகன ஸ்தானத்தில் சனிபகவானின் பத்தாம் பார்வை பதிகிறது. இதனால் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பும், வாகனம் ஓட்டும்போது மிதவேகமும் பின்பற்றுவது நற்பலன் தரும். பூர்வசொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். புத்திரர்கள் பிடிவாதம் செய்வர். ஆடம்பரப் பொருட்கள் வேண்டுமென கேட்பதால் செலவு அதிகமாகும்.எதிரிகளிடம் வீண் விவாதம், பணப்பரிவர்த்தனை போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும். நேரத்துக்கு சாப்பிடுவது பல பிரச்னைகளைத் தவிர்க்கும். கடன்கள் தொந்தரவு தரும். சொத்துக்களை விற்று கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சுயதொழில் துவங்க விரும்புபவர்கள் அனுபவமின்றி இறங்கக்கூடாது. அளவான மூலதனம் இடுவதும் நல்லது.கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பநலன் கருதிவிட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களுக்கு உதவ உங்களிடம் பணமிருக்காது. அதுபோல, அவர்களிடம் உதவியை எதிர்பார்க்கவும் வேண்டாம். தந்தைவழி உறவினர்கள் கடந்தகால மனஸ்தாபம் மாறி பாசத்துடன் நடந்துகொள்வர். சுபநிகழ்ச்சிகளை சிக்கன பணச்செலவில் நடத்துவதால் தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். கடந்த ஆண்டில் செய்தது போல, ஆடம்பர செலவுகளை இவ்வாண்டு செய்ய இயலாது.
தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சிபெற வாய்ப்பு உருவாகும். இதைப் பயன்படுத்திக் கொள்வதால் மட்டுமே கிடைக்கிற வருமானத்தையாவது தக்க வைக்கலாம். சக தொழிலதிபர்களில் நல்லவர்களின் நட்பை மட்டும் ஏற்பது நல்லது. உற்பத்தியை அதிகரிக்க நேரடி கண்காணிப்பை செலுத்துவது மிக அவசியம். புதிய தொழில் நுட்பங்களை தைரியமாக புகுத்துவதன் மூலம் உற்பத்தி நிலை சீராகும். பணியாளர்களின் ஒத்துழைப்பை பெற அதிக சம்பளம் கொடுக்க வேண்டி வரும். தொழிலதிபர் சங்கங்களில் பதவியில் இருப்போர் அதை இழக்க நேரிடும். பிறருக்காக பணம் உட்பட எந்த விஷயத்துக்காகவும் பொறுப்பேற்க வேண்டாம்.
வியாபாரிகள்: வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் பெற இனிய பேச்சு அவசியம். விற்பனையும், லாபமும் சுமாரான அளவில் இருக்கும். பணத்தேவை அதிகரிப்பதால் சிறு அளவில் கடன் பெறுவீர்கள். புதிய இடங்களில் சரக்கு கொள்முதல் செய்பவர்கள், லாபத்தை விட பொருட்களின் தரத்திற்கு முன்னுரிமை தருவர். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் அனுசரணையுடனும், வெளிப்படையான செயல்பாடும் கொள்வதன் மூலம் விற்பனையைத் தக்க வைக்கலாம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிகளை நிறைவேற்றுவதில் குறுக்கீடும், அதனால் கால தாமதமும் ஏற்படும். நிர்வாக நடைமுறை சீராக செயல்பட தேவையான மாற்று உபாயங்களை பின்பற்றுவது நல்லது. சிலர் ஒழுங்கு நடவடிக்கை, சலுகைகளை இழத்தல் போன்ற சிரமமான பலன்களை எதிர்கொள்வர். சம்பள உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கு ஓரளவுக்கே இருக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள், திறமையை வளர்த்துக் கொள்வதால் மட்டுமே குறித்த காலத்தில் வேலைகளை முடிக்க இயலும். சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனம் கடைபிடிப்பர். தாய்வீட்டு உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கடின உழைப்பினால் உற்பத்தி, விற்பனை அளவை சீரான நிலைக்கு கொண்டுவருவர். கடன் கிடைக்கிறதே என்பதற்காக அதிகம் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம்.
மாணவர்கள்: அதிக மார்க் பெற முயற்சி மட்டுமே உதவும். படிப்புக்குத் தேவையான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது நல்லது. சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்களில் விவாதம் வேண்டாம். பெற்றோரின் கண்காணிப்பு உங்கள் மீது இல்லையே என்பதற்காக, சேர்க்கை விஷயத்தில் அலட்சியம் கூடாது. வாகன பயணங்களில் மிதவேகம் பின்பற்றுவது அவசியம்.
அரசியல்வாதிகள்: அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும் என்பதால், காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள தாமதமாகும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை இழக்கும் சூழல் வரும். அவர்களைத் தக்க வைக்க அதிக செலவாகும்.விவகாரம், சமரச பேச்சுக்களில் தலையிட்டு கெட்ட பெயர் ஏற்படலாம். இது உங்களை தலைமையின் ஆத்திரத்துக்கு உள்ளாக்கும். அரசியல் பணிக்கு புத்திரரின் உதவி ஓரளவு கிடைக்கும். தலைமையைத் திருப்திப்படுத்துவதன் மூலம் மட்டுமே பதவியைத் தக்க வைக்க இயலும்.
விவசாயிகள்: இடுபொருட்கள் வாங்க பணத்தேவை அதிகரிக்கும். கடுமையாகப் பாடுபட்டும், சுமாரான மகசூல் தானே கிடைத்தது என்ற மனவருத்தம் இருக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.
செல்ல வேண்டிய கோயில்: கும்பகோணம் ராமசுவாமி கோயில்
பரிகாரம்: ராமரை வழிபடுவதால் சிரமங்கள் தூளாகும்.
பரிகார பாடல்: பணியில் ஆர்வம் ஏற்படும்
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீ
ராம ராம ராம ராம ராமவென்னும் நாமமே!