பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
05:04
நல்ல பண்புகளை வளர்க்க விரும்பும் கடகராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு ராசிக்கு நான்காம் இடத்திலும், பத்தாம் இடத்தில் கேதுவும் அனுகூலக் குறைவாக அமர்வு பெற்றுள்ளனர். மே28 வரை ஆதாய ஸ்தானத்தில் உள்ள குருபகவான் நல்ல பலனைத்தந்து பிறகு 12ம் இடமான மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார்.துலாம் ராசியில் உள்ள சனிபகவான், தனது பத்தாம் பார்வையால் ராசியை பார்க்கிறார். இதனால் நீங்கள் நீதி, நேர்மையை பின்பற்றினால் தான் சிரமங்களில் இருந்து தப்புவீர்கள். அர்த்தாஷ்டம சனியால், சில சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் நிதானமும் மென்மையும் பின்பற்ற வேண்டும். தகுதிக்கு மீறிய செயல்களில் அசட்டு தைரியத்துடன் ஈடுபடக்கூடாது. வாகனங்களை ஓட்டும் போதும், அவற்றின் பாதுகாப்பிலும் அதிக கவனம் நல்லது. தாய்வழி உறவினரிடம் பழைய விவகாரம் குறித்து பேச வேண்டாம். புத்திரர்கள் படிப்பில் சிறந்த இடத்தை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவார்கள். குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்காக சொத்துக்களின் பேரில் கடன் பெறுகிற கிரகநிலை உள்ளது. இவ்வாறு வாங்கும் போது, தனியாரிடம் வாங்கினால் மனஅமைதி அறவே போய்விடும். அரசு நிறுவனங்களில் மட்டும் கடன் வாங்குங்கள். ராசிக்கு ஆறாம் இடமான எதிரி ஸ்தானத்தை ராகுவும் சனியும் தனது மூன்றாவது பார்வையால் பார்க்கின்றனர். இதனால் உங்களின் எதிரி பலமிழந்து போகிற நிலை உண்டு. குரு, உங்கள் எதிரி ஸ்தானத்தை 7ம் பார்வை பார்ப்பதால் எதிரிகளும் உங்கள் மீது கருணை மனதுடன் நடந்துகொள்கிற வித்தியாச சூழ்நிலை உருவாகும்.உடல்நலம் ஆரோக்கியம் பெறும். தம்பதியர் குடும்ப நலனில் அக்கறையுடன் செயல்படுவர். அவ்வப்போது சிறு அளவிலான கருத்து வேறுபாடு உருவாகி, பின்னர் நல்ல இணக்கம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கிறதென்று அதிக அளவில் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.தந்தைவழி உறவினர்கள், உங்களின் கடந்தகால உதவியை நினைத்து மறு உதவியை மனமுவந்து வழங்குவர். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவை ஓரளவுக்கு நிறைவேறும். மூத்த சகோதர, சகோதரிகள் சொல்கிற ஆலோசனை உங்கள் சிந்தனையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு உகந்த சூழ்நிலை அல்ல.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் இடையூறு ஏற்படத்தான் செய்யும். அதை உடனுக்குடன் சரிசெய்வதால் வளர்ச்சி சீராகும். தொழில் போட்டி கடுமையாக இருக்கும். இதை சமயோசிதமாக சமாளிக்க முயற்சியெடுக்க வேண்டும். தொழில் நடத்த கடன் பெற்றவர்கள் குறித்த காலத்தில் செலுத்துவதால் மட்டுமே ஜப்தி போன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும். பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கும் நிர்ப்பந்தம் ஏற்படும். அவ்வாறு செய்தால் தான், அவர்களின் விசுவாசம் நிறைந்த உழைப்பு, உற்பத்தியை அதிகரித்து நிறுவனத்தின் நற்பெயரை பாதுகாக்கும்.
வியாபாரிகள்: வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதால் மட்டுமே விற்பனை அளவை சராசரி நிலைக்கு கொண்டு வரலாம். அதிக மூலதனம் இடுவதை இந்த ஆண்டு தவிர்ப்பது நல்லது. கூட்டு சேர்ந்து வியாபாரம் நடத்துபவர்கள் வியாபார நடைமுறைகளை வெளிப்படையாக அமைத்துக் கொள்வதால் மட்டுமே சச்சரவு, பிரிவுவராத நிலை ஏற்படும். குடோன்களில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றுவது அவசியம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக வேலை செய்தால் மட்டும் போதாது. குறித்த காலத்திற்குள்ளும் முடித்து விட வேண்டும். தாமத செயல்களால் நிர்வாகத்தின் கண்டிப்பு, சலுகைகளை பெறுவதில் குளறுபடி ஆகிய எதிர்மறை பலன்களை அடைவர். ஓவர்டைம் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தினால் தான், குடும்பத்திற்காக பெற்ற கடனை குறைக்க இயலும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் அக்கறையுடன் பணிபுரிவதால் மட்டுமே குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சிலருக்கு இடமாற்றம், பதவி குறைப்பு ஆகிய எதிர்மறை பலன்கள் இருக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவதால் மட்டுமே ஒற்றுமை சீராக இருக்கும். உடல்நலம் நல்ல விதமாக அமைந்து அன்றாட பணி சிறப்பு பெறும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம் இட்டால் போதும். கடுமையாக பாடுபட்டால் தான் உற்பத்தி, விற்பனையை ஓரளவுக்கேனும் தக்க வைக்கலாம். புதிய தொழிற்கருவி வாங்குபவர்கள் பயன் உணர்ந்து வாங்குவது நல்லது.
மாணவர்கள்: ராசிக்கு நான்காம் இடமான கல்வி ஸ்தானத்தில் சனி, ராகுவின் அமர்வு உள்ளதால் படிப்பில் பின்தங்குகிற நிலை உள்ளது. முயற்சி செய்பவர்களை ஆசீர்வதிப்பது சனீஸ்வரரின் இயற்கை குணம் என்பதை உணர்ந்து படிப்பதால் தரதேர்ச்சி சீராகும். வாகன பயணத்தில் நிதானமும் சாகச செயல்களை தவிர்ப்பதும் நல்லது. படிப்புக்கான பணத்தை சிக்கன முறையில் செலவு செய்வது பலன் தரும். சக மாணவர்களின் யதார்த்த பேச்சுக்களில் குறை காணாமல் பழகுவது நட்பை பலப்படுத்தும்.
அரசியல்வாதிகள்: சிலரது குறுக்கீட்டால் எல்லா செயல்களிலும் தாமதம் ஏற்படும். சோதனை கடுமையாக இருக்கும். ஆதரவாளர்களிடம் கூடுதல் நம்பிக்கை பெற ஆர்வமுடன் செயல்படுவீர்கள். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி ஓரளவே கிடைக்கும். தொழில் நடத்துபவர்கள் சுமாரான அளவில் லாபவிகிதம் கிடைக்கப்பெறுவர்.
விவசாயிகள்: அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அசவுகர்ய சூழ்நிலையும் மருத்துவ செலவும் அதிகரிக்கும். நிலம் தொடர்பான பிரச்னையில் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. விவசாயத்தை முன்னேற்ற அதிகளவில் கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது.
செல்ல வேண்டிய கோயில்: ஆலங்குடி (திருவாரூர் மாவட்டம்) தட்சிணாமூர்த்தி கோயில்
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை சேரும்.
பரிகார பாடல்: கல்லா னிழன்மேய கறை சேர் கண்டாவென்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் அமையாள்வா னல்ல நகரானே!