பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
02:04
பொறுமையான குணத்தால் சமூகத்தில் மதிப்பு பெறும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம், உங்கள் ராசிக்கு, நான்காம் இடத்தில் அமர்வு பெறுகிற ஐந்து கிரக சேர்க்கையில் சுக்கிரனும், புதனும் நல்ல பலன்களை வழங்குகின்றனர். ஐந்தாம் இடத்தில் உள்ள குரு தன்பங்கிற்கு கூடுதல் சிறப்பு பலன்களைத் தருகிறார். பேச்சு, செயல்பாடுகளில் அமைதியான போக்கு இருக்கும். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற ஓரளவு பணவசதி கிடைக்கும். தம்பி, தங்கைகளுக்கு தேவையான உதவியை வழங்குவீர்கள்.வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். புத்திரர்கள் அறிவுப் பூர்வமாக செயல்பட்டு படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். இஷ்டதெய்வ அருள் உங்கள் செயல்பாடுகள் சிறக்க துணை நிற்கும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்து, எதிர்கால நலன் குறித்து முக்கிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சிஏற்படும். தொழிலதிபர்கள், உற்பத்தியும் லாபமும் சுமாரான அளவில் இருக்கும். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் ஆதரவினால் விற்பனையில் திட்டமிட்ட இலக்கை அடைவர். இருப்பினும் லாபம் சுமார் தான். பணியாளர்கள், நிர்வாகத்தின் வழிகாட்டுதலை ஏற்று நடந்து நற்பெயரை பாதுகாத்திடுவர். குடும்பப் பெண்கள், புத்திரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். பணிபுரியும் பெண்கள், ஒருமித்த மனதுடன் செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பர். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், அளவான உற்பத்தி கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் ஆக்கப்பூர்வமான செயல்களால் ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூலும், விளை பொருட்களுக்கு ஓரளவு விலையும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளை சிறப்பாக எழுதி, விரும்பிய கல்லூரியில் இடம் பெறுவர்.
பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
உஷார் நாள்: 20.4.13 மாலை 4.49- 22.4.13 இரவு 12.24.
வெற்றி நாள்: மே 5,6,7
நிறம்: பச்சை, இளஞ்சிவப்பு
எண்: 5,7