பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
12:04
அழகுப் பெண்களின் அங்கம் தங்கமாய் ஜொலித்தாலும், அதில் ஆபரணம் சேர்த்து அழகு பார்ப்பது, பொன்விளக்கிற்கு பொட்டிட்டு பார்ப்பதைப் போல மெருகேறும். தங்கமோ, வைரமோ, குண்டுமணி பாசி மாலையோ, அதன் வடிவமைப்புதான் கண்களை கவரும். மதுரை மீனாட்சி அம்மனும் பெண் தானே! அன்னையின் முகவசீகரத்தில் அவருக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் கூட வெட்கப்படுவது அழகோ... அழகு. அம்மன், சுவாமிக்கென பாண்டிய மன்னர்கள் காலம் தொட்டு பலர் வழங்கிய பவளம், முத்து, வைரம் பதித்த ஏராளமான நகைகள், கிரீடங்கள், பதக்க மாலைகள் இருந்தாலும், திருக்கல்யாணத்திற்கென பிரத்யேக ஆபரணங்கள் அணிவிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளன. திருக்கல்யாணத்தன்று, மணமகன் சுந்தரேஸ்வரருக்கு பவளங்கள் பதித்த கல்யாண கிரீடமும், அம்மனுக்கு ராயர் கிரீடமும் அணிவிக்கின்றனர். ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கியது தான், ராயர் கிரீடம். இதனாலேயே பட்டாபிஷேகத்தின் போதும் இந்த கிரீடம் அம்மனை அலங்கரிக்கிறது. உள்ளங்கை அளவு வட்டமான நீல நாயக பதக்கம், மதிப்பிட முடியாத பதக்கம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுதவிர, பச்சைக்கல் தங்க பதக்கம், நளப்பதக்கம் என சித்திரை திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் அம்மனையும், சுவாமியையும் விதவிதமான ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. எந்த திருவிழாவிற்கு எந்த ஆபரணம், கிரீடம் என, அலங்கார பட்டர்கள் ஆலோசித்து, சூட்டுகிறார்கள். திருக்கல்யாணத்தன்று மட்டும் அம்மனுக்கு பிட்டத்தகடு அணிவிக்கப்படுகிறது. அதாவது அம்மனின் பின்பகுதியில் பொருத்தப்படும் கவசங்கள். இதுமட்டு மல்லாமல், பொட்டுக்காரைத் தாலி, கல் இழைத்த தாலி, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சித்தர் பதக்கம், அம்மனுக்கு தங்க சடை சிங்காரம் என ஆபரணங்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. கல்யாணத்திற்கு வருவோரை வரவேற்க, சந்தன கும்பா, பன்னீர் சொம்பு, நெய் ஊற்றி வேள்வி வளர்க்க தங்க தேக்கரண்டி என எல்லாமே தங்கத்தில் இருப்பது திருக்கல்யாணத்தின் சிறப்பு. சரி, மொத்த ஆபரணங்களின் மதிப்பு இன்றைய மார்க்கெட் விலையில் எவ்வளவு இருக்கும்? ............ ரூபாய் (கணக்கிட முடியலையா... நாங்களும் இப்படித் தான் யோசிச்சிட்டே இருக்கோம்)