பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
01:04
சித்திரை புத்தாண்டில் கிடைக்கும் சில வெற்றிலை மற்றும் பாக்கை பெறுவதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் மந்தையில் காத்திருக்கும் காட்சியை, மேலூர் வெள்ளலூரில் காணலாம். கிராமங்களில் இன்றளவும் வெற்றிலைக்கு தரும் மதிப்பும், மரியாதையும் அளவற்றது. திருமணத்திற்கு அழைப்பவர்கள் பலர் பத்திரிக்கை கொடுப்பதில்லை. வெற்றிலை பாக்கு தட்டை, முன் வைத்து தங்கள் விசேஷத்திற்கு அழைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. வெள்ளலூர், அம்பலக்காரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, மலம்பட்டி என்னும் ஐந்து மாகாணங்களுக்கு தலைமையிடம் வெள்ளலூர். இங்குள்ள மந்தை கருப்பு சாமி கோயில் முன்பு, 60 கிராம மக்கள் கூடுகின்றனர். டன் கணக்கில் வந்த வெற்றிலை, தற்போது 200 கிலோவாக குறைந்துவிட்டது. முதலில் மாகாணம், கிராமம், தெரு மற்றும் குடும்ப அளவில் வெற்றிலை பிரித்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
வெள்ளலூர் பொன்னம்பலம் கூறியதாவது: மகாலட்சுமியான வெற்றிலையையும், மகா விஷ்ணுவான பாக்கையும் சேர்த்து கொடுத்தால், இறைவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் முதல் மரியாதை இந்த வெற்றிலை பெறுவது தான். வெற்றிலையை எங்களின் வெற்றியாக பார்க்கிறோம். இதனால் விவசாயம் செழிக்கும், மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள் என்பது எங்களது நம்பிக்கை என்றார்.