பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
12:04
சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் கள்ளழகர், கல்யாணம் முடிந்ததை கேள்வியுற்று, கோபத்துடன் ஆற்றில் இறங்குவதாக ஐதீகம். ஆற்றில் இறங்கும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதாக, புராணம் உண்டு. ஆற்றில் இறங்கும் கள்ளழகரின் கோபத்தை தணிக்க, ராமராயர் மண்டபகப்படியில், ஆயிரக்கணக்கான கள்ளழகர் வேடமிட்டோர், தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிரவைப்பர். பார்க்க பரவசம் தரும் இந்நிகழ்வை, ஏராளமானோர் கண்டு மனம்குளிர்வர். இதற்காக, கள்ளழகர் வேடம் அணிவோர், 20 நாட்களுக்கும் மேலாக விரதமிருப்பர். அழகர்கோவில், கொடியேற்றத்தில் இருந்து, அழகர் ஆற்றில் இறங்கி மீண்டும் அழகர்கோவில் சென்றடையும் வரை விரதமிருப்பர். விரதநாட்களில் கோவிந்தா கோஷத்தை தவிர, வேறு வார்த்தைகளை இவர்கள் வாய் உச்சரிக்காது. சிறப்பு ஆடை சல்லடத்தை அணிந்து, தோப்பரை எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தோல் பையுடன், எதிர்சேவையின் போது, கள்ளழகரை எதிர்கொண்டு அழைப்பர். கள்ளழகர் எழுந்தருளும் மண்டக படிகள் முழுவதும் தொடர்ந்து செல்லும் இந்த வேடதாரிகள், கோடை வெயிலில் பக்தர்களின் சூட்டை தணிக்க, அவர்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பர். கள்ளழகரே வந்து தெளிப்பதாக கருதும் பக்தர்கள், வலிய கேட்டும் தண்ணீரை பீய்ச்சி அடி கச் சொல்வதுண்டு. இன்னும் சில வேடதாரிகள், நெய் விளக்கு எரியும் திரியை ஏந்தி வருவர். பல நெடுங்காலமாக இந்த நேர்த்திக்கடனை செலுத்தும் சில பக்தர்களிடம் பேசியதிலிருந்து...
மூர்த்தி, 48, ரியல் எஸ்டேட் தொழிலாளி, தல்லாகுளம், (95003 47751): அழகர்கோவில் கருப்பணசுவாமி தான் எங்கள் குல தெய்வம். தாத்தா பாக்கியம், தந்தை கோட்டைச்சாமி காலம் தொட்டு, கள்ளழகர் வேடம் தரிப்பதை பரம்பரையாக கொண்டுள்ளோம். 32 ஆண்டுகளாக கள்ளழகர் வேடம் தரிக்கிறேன். மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது. பக்தர்கள் எங்களை கள்ளழகராக பார்ப்பர். கள்ளழகரை மட்டுமின்றி பக்தர்களையும் குளிர்விக்கும் புண்ணியம் எங்களை சேருகிறது. ரவி, 47, கேபிள் டிவி ஆப்பரேட்டர், தமுக்கம், (93666 77779): எங்களுக்கு அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள்தான் குல தெய்வம். எனக்கு தெரிந்து மூன்று தலைமுறைகளாக கள்ளழகர் வேடம் தரிக்கிறோம். தற்போது நான்காவது தலைமுறையாக என் மகன்களும் வேடம் தரிக்க துவங்கி விட்டனர். பெருமாளை குளிர்விப்பதை விட, வேறு புண்ணியம் ஏதுமில்லை. இவர்களின் சேவை தொடர வாழ்த்துவோம்... பக்தர்கள் மனம் குளிரட்டும்!