திருமங்கலம்: இமயமலை போன்ற பனி பிரதேசங்களில் வளரும் ருத்ராட்ச மரம், மதுரை திருமங்கலத்தில் தானாக வளர்ந்துள்ளது. இதை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமங்கலம் நான்குவழிச்சாலை பைபாஸ் ரோட்டிற்கு அருகில் காட்டுபத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இதன் பின்புறம், சில ஆண்டுகளுக்கு முன், தானாக ஒரு ருத்ராட்ச மரம் முளைத்து, தற்போது பூப்பூத்து காய்க்கும் பருவத்தை அடைந்துள்ளது. அரிதான இந்த மரத்தை யாரும் சேதம் செய்துவிடாமல் இருக்கவும், ஆடு,மாடுகள் மேய்ந்து விடாமல் இருக்கவும் சுற்றிலும் வேலி அமைத்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன், திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் சலவைக்கூடம் அருகே இதே போன்று சுயம்புவாக ஒரு ருத்ராட்ச மரம் வளர்ந்திருந்தது. போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த மரம் காணாமல் போய்விட்டது. அதே போல் திருமங்கலம் மரத்திற்கும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும்.