பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
நீராடிவிட்டு வந்த அவர்கள் தங்களிடம் இருந்த விக்ரகங்களுக்கு பூஜை செய்ய துவங்கினர். பூஜை முடிந்ததும், அப்படியே தியானத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தபோது, தங்கள் முன்னால் இருந்த விநாயகர்,சிவன்,பார்வதி, விஷ்ணு, சூரியன் விக்ரங்களால் காணாமல் போனது கண்டு திகைத்தனர். அவர்கள் பெரும் அதிர்ச்சியுடன் காஷ்யப முனிவரிடம் சென்று, விக்ரகங்கள் காணாமல் போய்விட்டது பற்றி கண்ணீர் வடித்தனர். முனிவரே! தங்கள் ஆஸ்ரமத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததை தாங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். எங்களது விக்ரகங்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை கிடைக்காமல் போனால், நாங்கள் உயிர் தரிக்க மாட்டோம் என்பது வேறு விஷயம். ஆனால், இந்த அநியாயத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும், என முறையிட்டனர். காஷ்யபர் வருத்தமும், கோபமும் அடைந்தார். தனது சீடகோடிகளை அழைத்து, யாராவது இவர்களது சிலைகளைத் திருடியிருந்தால், உடனே கொண்டு வந்து கொடுத்துவிடுங்கள். இப்போதே கொடுத்துவிட்டால் உயிராவது மிஞ்சும். நானாக கண்டுபிடித்தால், உங்களை சாம்பலாக்கி விடுவேன், என கடுமையாக எச்சரித்தார். சீடர்கள் நடுநடுங்கி நின்றனர். குருவே! உங்கள் சீடர்களான எங்களுக்கு, யாரும் சொல்லிக்கொடுத்தாலும்கூட திருட்டுப்புத்தி வராது என்பதை தாங்கள் உணர்ந்திருக்கவில்லை என்பதை அறியும்போது, நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். எங்களைத் திருடர்கள் என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? துறவையே வாழ்க்கையாகக் கொண்ட நாங்கள், பிறர் பொருளுக்கு ஆசைப்படுவோமா? என வருத்தத்துடன் கூறினர். அனைவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இதைப்பார்த்த ஆஹா, ஊஹூ, தும்புரு ஆகியோர் நெகிழ்ந்து போனார்கள். காஷ்யபரிடம் சீடர்கள் பற்றி புகார் கூறியதற்காக வருந்தி நின்றார்கள். ஆயினும், விக்ரகங்களைக் காணவில்லை என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்நேரத்தில் காஷ்யபர், தனது ஞான திருஷ்டியின் மூலம் விக்ரகங்கள் எங்கிருக்கின்றன என்பதை கண்டு பிடித்து விட்டார். சீடர்களிடம், நீங்கள் உடனே சென்று என் மகன் மகோற்கடனை அழைத்து வாருங்கள் என்றார்.
விநாயகப்பெருமானாகிய மகோற்கடன் அழைத்து வரப்பட்டார். அவரது உடம்பெல்லாம் வெண்ணிற திருநீறு பளபளவென மின்னியது. அவரைப் பார்த்தவுடனேயே, கையெடுத்து வணங்க வேண்டுமென அங்கிருந்தவர்களுக்கு தோன்றியது. காஷ்யபர் மிகவும் கண்டிப்பான குரலில், மகோற்கடா! நம் இல்லத்திற்கு வந்தவர்களின் பொருளைத் திருடி எனக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே? நீதான் அவர்கள் கொண்டு வந்த சிலைகளை மறைத்து வைத்திருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொண்டேன். உடனே அதைக் கொடுத்துவிடு! இல்லாவிட்டால் பிரம்பை எடுத்து வந்து உன்னை உதைப்பேன். என்ன செய்யப்போகிறாய்? என்றார். மகோற்கடன் சிரித்தான். தந்தையே! விக்ரகங்கள் என்னிடம்தான் உள்ளன. நான் யார் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். என்னால் உங்களுக்கு பெருமைதான் வருமே ஒழிய, சிறுமை ஏற்படாது. இப்போது பாருங்கள். உங்களுக்கே நான் யார் என்பது தெரியும், என்று சொல்லியவர், தனது வாயைத் திறந்தார். அண்ட சராசரங்களும் அவரது வாய்க்குள் தெரிந்தன. அது அகலமாகிக் கொண்டே போனது. வயிற்றுக்குள் ஈரேழு லோகங்களும் அடங்கியிருந்தன. வல்லமை பொருந்திய இறைவனே, காஷ்யபருக்கு மகனாக அவதரித்துள்ளதை ஆஹா, ஊஹூவும், தும்புருவும் புரிந்து கொண்டனர். காஷ்யப முனிவர், தங்களுக்குப் பிறந்துள்ளது விநாயகப்பெருமான் என்பதை அறிந்திருந்தாலும், அவரே முழுமுதல்கடவுள் என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டார். அவர் வாயைத்திறந்தபோது, சகல உலகங்கள் மட்டுமின்றி காணாமல் போன, விக்ரகங்களும் உள்ளே இருந்ததை அனைவரும் கண்டனர். விநாயகப்பெருமான் புன்னகை செய்தபடியே, அந்த விக்ரகங்களை வாயில் இருந்து எடுத்து ஆஹா, ஊஹூவிடம் ஒப்படைத்தார். சிலைகளைக் காணாமல் செய்ததன் மூலம், தான் யார் என்பதை மகோற்கடனாகிய விநாயகர் உலகுக்கு அறிவித்துள்ளார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். பின்னர், அவர்கள் காஷ்யபரின் ஆஸ்ரமத்தில் உணவை முடித்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, மகோற்கடனுக்கு ஐந்து வயதானது. அவருக்கு பூணூல் அணிவிக்கும் சடங்கை நடத்த காஷ்யபர், ஏற்பாடு செய்தார். அந்த விழாவிற்காக பல முனிவர்களை தங்கள் ஆஸ்ரமத்திற்கு அழைத்திருந்தார். ஏராளமானோர் அங்கு வந்து சேர்ந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட நராந்தகன், மகோற்கடனைக் கொல்வதற்காக பிங்காட்சன், பிங்களன், சபலன், விகிர்தன், விசாலன் என்ற ஐந்து அசுரர்களுக்கு முனிவர் போல வேடமிட்டு அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தான். அந்த அசுரர்கள் விபூதி, ருத்ராட்சம் அணிந்து, கையில் கமண்டலத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். பூணூல் அணிவிக்கும் சடங்கு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. முனிவர்கள் எல்லாம் குழந்தை மகோற்கடனை ஆசிர்வதிப்பதற்காக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அந்த வரிசையில் ஐந்து அசுரர்களும் இணைந்து கொண்டனர். எல்லாரும், அட்சதை தூவி குழந்தையை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தனர். ஐந்து அசுரர்களும் தாங்கள் கொண்டு வந்த அஸ்திரங்களை அட்சதையாக மாற்றி தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, அட்சதையை தூவுவது போல அஸ்திரங்களை ஏவி, மகோற்கடனை கொன்றுவிட வேண்டும் என திட்டம் தீட்டியிருந்தனர். அவர்கள் மகோற்கடனை நெருங்கினர்.