பதிவு செய்த நாள்
07
மார்
2011
03:03
மகோற்கடனின் அருகில் வந்ததும் ஐவரும் ஒன்றிணைந்து, தங்கள் கையிலுள்ள அட்சதையை கணபதியின் மீது தூவினர். அட்சதை அரிசி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஆயுதமாக மாறி மகோற்கடனை நோக்கிப் பாய்ந்தது. மகோற்கடன் அவற்றை நோக்கிப் புன்னகைக்கவே அவை அவரது திருவடிகளில் சரணடைந்தன. ஐந்து அரிசிகள் மட்டும் மகோற்கடனின் கைகளில் விழுந்தது. அவற்றை அவர் அசுரர்களின் மீது எறியவே, அவை பாய்ந்து சென்று அவர்களை அழித்தன. முதலில் அதிர்ந்த அனைவரும், மகோற்கடனின் அற்புதச்செயல் கண்டு அவரைப் புகழ்ந்தனர். பின்னர் உபநயன சடங்கை சிறப்புற முடித்தார் காஷ்யபர்.உபநயன சடங்குக்கு வந்தால் பரிசுகள் தர வேண்டாமா? உபநயனத்திற்கு திருமால், பிரம்மா, சிவன், துர்க்கை மற்றும் பல தேவர்கள் வந்திருந்தனர். அவர்களில் சிவன் திரிசூலம், கோடரி எனப்படும் மழு, உடுக்கை, சடை, நிலா ஆகியவற்றைக் கொடுத்தார். துர்க்கை தனது சிங்க வாகனத்தைக் கொடுத்தார். பிரம்மா நவரத்தினங்களால் செய்யப்பட்ட புனிதநீர் செம்பு ஒன்றைக் கொடுத்து தாமரை மலரால் அர்ச்சித்தார். திருமால் தனது சக்ராயுதத்தைக் கொடுத்து அழகிய பட்டாடை ஒன்றையும் வழங்கினார். பிரகஸ்பதியாகிய தேவகுரு ரத்தினங்களையும், வருணன் பாசக்கயிற்றையும், கடலரசன் முத்து மாலையும், எமதர்மன் தண்டாயுதத்தையும் கொடுத்தனர். திருமாலுடன் வந்திருந்த ஆதிசேஷன் அவரது படுக்கையாக மாறி, மகோற்கடனைத் தன்னில் சயனம் செய்ய வைத்தான். ஆனால், தேவர் தலைவனான இந்திரன் மட்டும் மகோற்கடனின் அருகில் வரவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. காஷ்யபர் அவனை அழைத்தார்.
இந்திரா! இவன் சிவபெருமானின் மைந்தன் என்பதை நீ அறிவாய். எங்களது தவப்பயனால், எங்கள் இல்லத்தில் பிறந்திருக்கிறான். எனவே, இவனை மானிடன் என நினைத்து ஒதுக்கி விடாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். தெய்வம் விண்ணில் இருந்தாலும், மண்ணில் இருந்தாலும், தூணில் இருந்தாலும், துரும்பில் இருந்தாலும் அதை வணங்குவதே முறையானது. அதிலும் , விநாயகர் முழுமுதல் கடவுள் என்பதையும் மறந்து விடாதே, என்று புத்திமதி சொன்னார்.சிலருக்கு கெட்ட நேரம் வந்து விட்டால், யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. கேட்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் கருத்துக்கு எதிர்க்கருத்தைச் சொல்வார்கள். இந்திரனும் அப்படித் தான் தேவையற்றதைப் பேசி சிக்கிக் கொண்டான். காஷ்யபரே! நீர் பெரிய மனிதர் ஆவதற்காக, சிவமைந்தனை உம் மகனாகப் பெற்றீர். எப்படியோ, அவன் மானிட வர்க்கத்தில் அவதரித்து விட்டான். ஒரு மானிடனை தேவர் தலைவனான நான் எப்படி வணங்க முடியும்? மேலும், இங்கே எல்லோரும் உம் மகனை ஆசிர்வதிக்கவே வந்துள்ளனர். அவன் வயதில் சிறியவன். ஆனால், அவனோ பல பொருட்களை பரிசாக ஏற்றுக்கொண்டு, அதைத் தனக்கு தந்தவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறான். ஒரு சிறுவனிடம் தேவர்கள் ஆசி பெறுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. இவர்களெல்லாம், தேவலோகத்திற்கு திரும்பியதும், அவர்களை விசாரணை செய்து தக்க தண்டனை கொடுப்பேன். ஒருக்காலும், உம் மகன் மகோற்கடனின் ஆசியைப் பெற மாட்டேன், என்றான். அவன் இப்படி சொன்னதற்காக காஷ்யபர் கோபிக்கவில்லை.
இந்திரா! நீ அடிக்கடி அசுரர்களிடம் சிக்குபவன். அவர்களிடம் இருந்து மீள வேண்டுமானால், விநாயகரின் ஆசி அவசியம் வேண்டும். அவரை அலட்சியப் படுத்துவதன் மூலம், உனக்கு நீயே கேடு விளைவித்துக் கொள்கிறாய், என்று மீண்டும் புத்திமதி சொன்னார். அப்போதும் இந்திரன் கேட்ட பாடில்லை. போதாக்குறைக்கு, காஷ்யபரே! தேவாதி தேவனான நான் பெரியவனா? இந்தச் சிறுவன் உயர்ந்தவனா? என்பதை இப்போதே நிரூபித்துக் காட்டி விடுகிறேன், என்றவனாய், வாயு பகவானை அழைத்தார். ஏ வாயு! நீ போய் அந்த மகோற்கடனை எங்காவது தூக்கி வீசி விட்டு வா, என்றான். வாயுபகவானுக்கு அதிர்ச்சி. விநாயகப்பெருமானை தூக்குவதாவது, வீசுவதாவது. சூறாவளியாக மாறி வீசினாலும், அதை தன் தும்பிக்கையாலேயே உறிஞ்சி விடுபவர் அல்லவா அந்த மகாசக்தி மைந்தர்! வேறென்ன செய்வது? தலைவன் கட்டளையிட்டு நிறைவேற்றாவிட்டால், அவன் சபித்து விடுவான், என சிந்தித்தவன், விநாயகப்பெருமானே! நீரே என்னைக் காப்பாற்ற வேண்டும், என்று மனதார அவரை வணங்கி, வேகமாக வீசத்துவங்கினான். காற்றின் வேகத்தில் அண்டசராசரங்களும் கிடுகிடுத்தன. சூறாவளியால் கடல்கள் பொங்கின. பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடுவது போன்ற தோற்றம்! மலைகள் தூக்கி வீசப்பட்டன. உலகமே அசைந்தாலும், மகோற்கடன் மட்டும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைக்கண்டு சலனமடைந்த இந்திரன், ஏ அக்னி! நீ போ! தேவர்கள் பெரியவரா? இந்த சிறுவன் பெரியவனா? என்று பார்த்து விடுவோம், என்றான்.