பதிவு செய்த நாள்
08
மார்
2011
05:03
அவள் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.அன்பரே! நீங்களா இப்படி சொன்னீர்கள்! காதல் வயப்பட்டு நாம் கிடந்த காலத்தில், கடைசி வரை பிரியமாட்டோம் என உறுதியளித்தீர்களே! அது காதல் மோகத்தில் சொன்னது தானா? என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொல்கிறேன், கேளுங்கள். ஒரு பெண் குழந்தைகளை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவள் தன் கணவனை இழந்துவிட்டால் பாதுகாப்பற்ற நிலையை அடைவாள். அவளது கற்புக்கு களங்கம் கற்பிக்கப்படும், அல்லது பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே, எந்த ஒரு பெண்ணும் தன் கணவனை இழக்க சம்மதிக்கவே மாட்டாள், என்றாள்.தன் மனைவியின் உறுதியான மனநிலை கண்டு, அந்த துன்பமான சூழலிலும் நளன் உள்ளூர மகிழ்ந்தான். ஆனாலும், மற்றொரு உண்மையை அவன் அவளுக்கு எடுத்துச் சொன்னான்.தமயந்தி! உனக்குத் தெரியாததல்ல! இருப்பினும் சொல்கிறேன் கேளுங்கள். ஒருவன் மரணமடைந்து விட்டால், அவனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பிள்ளைகள் வேண்டும். அப்படியானால் தான் அவன் சொர்க்கத்தை அடைவான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. நீ கேட்கலாம், புண்ணியம் செய்தால் சொர்க்கத்தை அடைய முடியாதா என்று! நிச்சயம் அது முடியாது. எந்த வித தவறும் செய்யாமலும், பிறருக்கு வஞ்சனை செய்யாமலும் இருப்பவராக இருந்தாலும் கூட, எவ்வளவு நல்லறிவு பெற்ற உயர்ந்தவரானாலும் கூட, நல்ல பிள்ளைகளைப் பெறாத பெற்றோருக்கு சொர்க்கம் கிடைக்காது, என்றவனை இடைமறித்த தமயந்தி, ஐயோ! என்ன சொல்கிறீர்கள்! நீங்களே எனது சொர்க்கம், நான் வாழும் போது சொர்க்கத்தைத் தேடுகிறேன். நீங்கள் வாழ்க்கையின் முடிவுக்கு பிறகுள்ள விஷயங்களைப் பேசுகிறீர்களே! என இடைமறித்தாள்.
நளன் அவளைத் தேற்றினான்.
அன்பே! எவ்வளவு தான் பணமிருந்தாலும் சரி! புகழின் உச்சத்தில் இருந்தாலும் சரி! இன்னும் இந்த உலகத்தில் எவ்வளவு நற்பெயர் பெற்றிருந்தாலும் சரி! ஒருவனுக்கு இவையெல்லாம் மகிழ்ச்சி தராது. சாதாரண தட்டில் சோறிட்டு, அதை தன் பிஞ்சுக்கரங்களால் அளைந்து சாப்பிடுமே குழந்தைகள்! அந்தக் குழந்தைகளின் செய்கையும், அவை குழலினும் இனியதாக மழலை பேசுமே! அந்தச் சொற்களுமே இவ்வுலக சொர்க்கத்தை மனிதனுக்கு அளிக்கின்றன. தமயந்தி! பல அறிஞர்களும், புலவர்களும் அரிய பல கருத்துக்களை பேசுவதை நீ கேட்டு மகிழ்ந்திருப்பாய். ஆனால், அவற்றையெல்லாம் விட, பால் குடித்து அது வழிந்தபடியே, நம் குழந்தைகள் பேசும் பேச்சு தானே காதுகளை குளிர வைக்கிறது! எனவே குழந்தைகள் தான் நமக்கு முக்கியம். அவர்களை அழைத்துக் கொண்டு உன் இல்லத்துக்குச் செல். தயவுசெய்து நான் சொல்வதைக் கேள், என தன் கருத்தில் விடாப்பிடியாக இருந்தான் நளன். பிள்ளைகளும், மனைவியும் இனியும் தன்னால் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். இப்போது, தமயந்தி வேறுவிதமாக கிடுக்கிப்பிடி போட்டாள். என் தெய்வமே! அப்படியானால் ஒன்று செய்வோம். நீங்களும் எங்களுடன் என் தந்தை வீட்டுக்கு வாருங்கள். அங்கே, நாம் வாழத் தேவையான பொருள் உள்ளது. அவர் என் சிரமத்தைப் பொறுக்கமாட்டார். உதவி செய்வார். புறப்படுங்கள், என்றாள். நளன் இந்த இடத்தில் தான் தன் உறுதியான மனப்பான்மையைக் காட்டினான். இப்போதெல்லாம் ஒருவனுக்கு கஷ்டம் வந்துவிட்டால் போதும். மனைவியை தந்தை வீட்டுக்கு அனுப்பி ஏதாவது வாங்கி வாயேன், என கெஞ்சுகிறான். இன்னும் சிலர், அடியே! உன் அப்பன் சம்பாதிச்சு குவிச்சு வைச்சிருக்கான். அதிலே நமக்கு கொஞ்சம் கொடுத்தா குறைஞ்சா போயிடும்! போ! அந்த கல்லுளி மங்கனிடம் ஏதாச்சும் வாங்கிட்டு வா, என திட்டுகிறான்.
இன்னும் சிலர் மனைவியை அவர்களது வீட்டுக்கே அனுப்பி, இவ்வளவு தந்தால் தான் உனக்கு வாழ்க்கையே! இல்லாவிட்டால் விவாகரத்து, என மிரட்டி பணிய வைக்கிறான். நளமகாராஜா அப்படி செய்யவில்லை. என் அன்புச்செல்வமே! பைத்தியம் போல் பேசாதே! இந்த உலகத்தில் பணம் உள்ள வரையில் தான் ஒருவனுக்கு மதிப்பு! ஏதோ நோய் நொடி வந்தோ, பிள்ளைகளை கரை சேர்க்கவோ ஆகிய நியாயமான வழிகளில் பணத்தைக் கரைத்தவன் கூட, ஒருவனிடம் உதவி கேட்டுச் சென்றால், அவன் இவனைக் கண்டு கொள்ள மாட்டான்! நானோ, சூதாட்டத்தில் பணத்தைத் தொலைத்தவன். உன் தந்தையின் முன் நான் தலைகுனிந்து தானே உதவி கேட்க வேண்டியிருக்கும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்! பணமில்லாதவன், ஒரு செல்வந்தனிடம் போய், எனக்கு உதவு என்று கேட்டால், அவன் அவமானத்துக்கு ஆளாவான். அது அவனது புகழை அழிக்கும். தர்மத்தின் வேரை வெட்டி வீழ்த்தி விடும். அதுமட்டுமல்ல! அவனது குலப்பெருமையையும் அழித்து விடும், என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.அப்போதும் தமயந்தி விடவில்லை. அன்பே! நாம் கஷ்டத்தில் அங்கு வந்திருக்கிறோம் என்பதைக் கூட யாருக்கும் தெரியாமல் செய்துவிடலாம். வாருங்கள், என்றாள்.என்னைக் கோழையாக்க பார்க்கிறாயா தமயந்தி. நான் அரசனாக இருந்தவன். உன் தந்தை எனக்கு மாமனார் என்பது இரண்டாம் பட்சம் தான். அவரும் ஒரு அரசர்! ஒரு அரசன், இன்னொரு அரசனிடம் உதவி கேட்பதா! சூதில் தோற்று, ஒன்றுமில்லாமல் நிற்கும் என்னை ஆண்மையற்றவன் என்றும் எண்ணி விட்டாயா? பிறரிடம் உதவி கேட்பவன் பைத்தியக்காரன் என்கிறார்கள் பெரியோர். அப்படியானால், நானும் பைத்தியக்காரனா? நளன் ஆவேசப்பட்டான். இவர்களுக்குள் வாதம் வலுத்தது.