பதிவு செய்த நாள்
16
அக்
2013
04:10
நாலு முழ வெள்ளைக் கதர் வேட்டியும், ஜிப்பாவுமே அவரின் வழக்கமான ஆடைகள். கிராம வாசிகளோடு சேர்ந்து நின்றால், அவரைத் தனியாக இனம் காண முடியாது. அந்த அளவுக்கு எளிமை. ஆனால், அவரது கண்களில் அபரிமிதமான ஈர்ப்பு சக்தி இருந்தது. அவர்தான் அப்பண்ண சுவாமிகள்.
அவர் ஒருமுறை திருவண்ணாமலை சென்று சேஷாத்ரி சுவாமிகளைத் தரிசனம் செய்தார். அப்போது, போக்குவரத்து குறைந்த ஒரு பின்தங்கிய பகுதியில் நிரந்தரமாகத் தங்கிக் கொண்டு, அங்குள்ள மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய். உன் ஆத்ம சாதனையையும் தொடர்ந்து வா! என அறிவுறுத்தினார் சேஷாதிரி சுவாமிகள். அதன்படியே, அப்பண்ண சுவாமிகள் வட குமரையை தன் நிரந்தர தங்குமிடமாகக் கொண்டார். அவ்வூரில் தம் அன்பர்களின் நிதி உதவியுடன் ஒரு பள்ளியை நிறுவினார். குடிநீர் கிணறு தோண்டினார்; மாவட்ட ஆட்சியரையும் வளர்ச்சி அலுவலரையும் அணுகி சாலை வசதிக்கு ஏற்பாடு செய்தார். கோயில்களைப் புதுப்பித்தார். இப்படிப் பல திருப்பணிகள் செய்தார். காஞ்சி மகாசுவாமிகள், ஒருமுறை கள்ளக் குறிச்சியில் இருந்து ஆத்தூருக்குப் பயணம் செய்தார். வடசென்னிமலையில் பல்லக்கை நிறுத்தச் சொல்லி அருகிலிருந்தவரிடம், இவ்விடம் வைஷ்ணவ குலத்து அதிவர்ணாச்ரமி ஒருவர் இருக்கிறாரே! அவரை அழைத்து வாருங்கள் என்றார். அப்பண்ண சுவாமிகளை, பெரியவரிடம் அழைத்து வந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, காஞ்சி முனிவர் தன் கழுத்திலிருந்த துளசி மாலையை எடுத்து அப்பண்ண சுவாமிகளுக்கு அணிவித்தார். பின்னர் அருகிலிருந்தவர்களிடம், இவர் நல்ல அநுபூதிமான் என்றார்.
அப்பண்ண சுவாமிகள், திருவண்ணாமலை ரமண மகரிஷியையும், திருக்கோவிலூர் ஞானானந்தரையும் தரிசித்து ஆசி பெற்றுள்ளார். இப்படி மகான்களோடு மகானாய் வாழ்ந்த சுவாமிகள், தம் அன்பர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஒருமுறை சுவாமிகள் ராமேஸ்வரத்தில் சோமநாதன் செட்டியார் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். சுவாமிகள் தங்கியிருந்த அறை, செட்டியார் பணம் வைக்கும் அறையாக இருந்தது. அச்சத்தின் பேரில் செட்டியார், சுவாமிகள் இரவு தங்கியிருந்த அறைக்கு வெளிப்பூட்டு போட்டுவிட்டார். விடியற்காலையில் எழுந்து குளித்து வழக்கம்போல சிவபூஜையில் ஈடுபட்டார் செட்டியார். சுவாமிகள் தங்கியிருந்த அறை பூட்டியபடியே இருக்க, பொழுது புலர்ந்தவுடன் சுவாமிகள் பல்குச்சியுடன், வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்ட செட்டியாருக்கு பெரும் அதிர்ச்சி. தன் தவறை உணர்ந்து சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். தண்ணீரைப் பாலாக்கியும், நீரில் விளக்கெரித்தும், காசநோயை குணமாக்கியும், நள்ளிரவில் அந்தரத்தில் நிஷ்டையில் இருந்தும் சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பல. அந்த மகான், நாளைக்கு இங்கு பலர் வருவார்கள். எதற்கும் ஆயத்தமாக இருங்கள் என்று தன் இறுதித் தருணத்தைக்கூட சூசகமாகச் சொல்லி, தமது 48-ஆம் வயதில் முக்தி அடைந்தார். அவரது அதிஷ்டானத்தில், பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் ஜயந்தி விழாவும், முக்தி அடைந்த தினமான மகாளய அமாவாசையில் ஆராதனை விழாவும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.