திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள நாட்டேரிக்கு பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரின் வெளிப்பபுறத்தில் ஒரு செங்கல் கோபுர நுழைவாயிலின் எதிரில் இரண்டடுக்குக் கோபுரம் கொண்ட ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த கோயில். அந்தக் கோயில் கட்டடம் சாதாரணமான ஒன்றல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் மகன் கங்கை கொண்ட சோழன். கடாரம் கொண்டான் என்றெல்லாம் புகழப்பட்ட ராஜேந்திரனின் கல்லறைதான் அந்தக் கட்டடம். ராஜேந்திர சோழன் கல்லறை குறித்து நாட்டேரி கிராம மக்கள் பெரும்பாலனவர்களுக்குத் தெரியவில்லை. சிலர் மட்டும் ராஜேந்திர சோழனின் சமாதி என்று அறிந்துள்ளார்கள். அப்பகுதி மக்கள் அதை மடவலத்துக் கோயில் என்றும் சந்திர மவுலீஸ்வரர் கோயில் என்றுதான் அழைப்பர். ராஜேந்திர சோழன் வரலாற்றில் தடம் பதித்தவன். ராஜேந்திர சோழன் தன்னுடைய எண்பதாவது வயதில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்தபோது இங்கே இறந்துவிட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.