பதிவு செய்த நாள்
02
டிச
2013
02:12
ஐயப்பனின் நகைகள் பந்தளம் அரண்மனையில் இருந்து 3 பெட்டிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதுபற்றிய சுவையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். பந்தளம் அரண்மனையில் தான் பகவான் ஐயப்பன் வளர்ந்தார். புலிப்பால் சம்பவத்திற்கு பிறகு 12 வயதில், தன் மானுட வாழ்க்கையை துறந்து வனவாசம் போக முடிவுசெய்த போது மன்னர் ஆழ்ந்த கவலை அடைந்தார். இதை கண்டு மனம் இரங்கிய ஐயப்பன் ஆண்டுக்கு ஒருமுறை தன்னை காண தந்தைக்கு வரம் வழங்கினார். சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பனை ஆண்டுதோறும் பந்தளம் மன்னர் காண சென்றார். அப்படி அபூர்வமாக ஐயப்பனை காணும் போது அவர்சர்வ ஆபரண அலங்காரத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக அவர் ஆபரணங்களை தயார் செய்தார்.
நித்ய பிரம்மசாரியாக உள்ள பகவான் ஐயப்பன் காட்டில் இருப்பதால் ஒரு படைத்தலைவனின் உருவில் காண மன்னர் விரும்பினார். அந்த அடிப்படையில் தான் திருவாபரணங்கள் வடிவமைக்கப்பட்டது. இந்த திருவாபரணங்கள் அனைத்தும் சுத்த தங்கத்தில் செய்யப்பட்டதாகும். இந்த ஆபரணங்களுக்கு ராஜ வம்சத்துக்குரிய பகட்டு உண்டு. திருமுகம், சரப்பொழி மாலை, எருக்கின்பூமாலை, வில்வ தளைமாலை, நவரத்னமோதிரம், சூரிகை (இருமுனைவாள்), நெற்றிப்பட்டம், அரமணி, வாள், யானை, புலி ஆகியவை திருவாபரணங்களாகும்.
மூன்று பெட்டிகளில் திருவாபரணங்கள் எடுத்து செல்லப்படுகிறது. முதலில் திருவாபரண பெட்டியும், இரண்டாவது கலசக்குடை பேடகமும், மூன்றாவதாக கொடிப்பெட்டியும் எடுத்துச் செல்லப்படும். பந்தளம் அருகே கொச்சுதுண்டு என்ற இடத்தை சேர்ந்த செல்லப்பன் பிள்ளை தலைமையிலான 15 பேர் கொண்ட பக்தர் குழுவினர், இந்த திருவாபாரண பெட்டிகளை கடந்த 39 ஆண்டுகளாக சுமந்து செல்கின்றனர். திருவாபரணங்கள் இன்றும் பந்தளம் அரண்மனைக்கு சொந்தமானதாகும். இந்த நகைகள் அனைத்தும் கோபுர வடிவில் உள்ள நெட்டூர் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்குக்கு 2 நாட்களுக்கு முன்னர் பந்தளம் வலியகோயிக்கல் தர்மசாஸ்தா கோயிலில் இருந்து திருவாபரணங்கள் புறப்படுகிறது. கூடவே, பந்தளம் மன்னர் பிரதிநிதியும் உடன் செல்கிறார். ஆண்டாண்டு காலமாக இந்த ஆச்சாரங்கள் தவறாமல் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.