பதிவு செய்த நாள்
30
நவ
2013
10:11
சபரிமலை: சபரிமலை பொன்னு 18ம் படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 90 பேர் ஏறுகின்றனர். சபரிமலை வரும் பக்தர்கள், புனிதமாக கருதுவது 18 படி ஏறுவதுதான். இருமுடி ஏந்தி வரும் பக்தர்கள் மட்டுமே, இந்த படியில் ஏறமுடியும். 18 மலைகளை குறிக்கும் இந்த படிக்கட்டு, சாதாரண படிக்கட்டுகளை போலின்றி, சற்று செங்குத்தாக இருக்கும். ஏறும் போது பக்தர்களின் சிரமங்களை குறைக்க, படியின் 2 பக்கங்களிலும் போலீசார் நின்று உதவி புரிகின்றனர். இதற்காக, 25 போலீசார் பணியில் அமர்த்தப்படுகின்றனர். விரதமிருக்கும் போலீசாரில், விருப்பம் தெரிவிப்பவர்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சாதரணமாக, ஒரு நிமிடத்தில் 70 பக்தர்கள் படியில் ஏற்றப்படுகின்றனர். கூட்டம் அதிகமாகும் போது, 80 முதல் 90 பேர் ஏறுகின்றனர். கூட்டம் அதிகமாகும் போது, பக்தர்களை வேகமாக பிடித்து இழுப்பதால், பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்படுவதுண்டு. "பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து இருப்பதால், அவசரம் கருதி இதுபோன்று இழுக்க வேண்டியுள்ளது; இது தவிர்க்க முடியாதது என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.