பதிவு செய்த நாள்
28
மார்
2011
05:03
சுசீலா கேள்! பிரம்மன் ஒருவனுக்கு எந்தளவுக்கு ஆயுளை எழுதி வைக்கிறான் என்பதை அறிவுடைய அனைவரும் அறிவர். அதை எப்படி கணிப்பதென்று மயங்காதே. ஒவ்வொருவரும் புண்ணியம், பாவம் என்ற இருவினைகளை எந்தளவுக்கு செய்கிறார்களோ, அந்தளவுக்கு அந்தக் காலம் இருக்கும். அதுபோல, இதே அளவிற்கேற்பவே ஒருவரின் வாழ்க்கை வசதியும் அமையும், என்று நிறுத்தினார். இன்றைக்கு உலகத்தில் பணக்காரர்களாக இருப்பவர்களைப் பார்த்து, இல்லாதவர்கள் பொறாமைப்படுகிறார்கள். இவருக்கு மட்டும் இவ்வளவா? இவர் நல்ல வழியில் தான் சம்பாதித்த பணமாகத் தெரியவில்லையே என்று விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனத்துக்கு அவசியமே இல்லை. நியாயம் தவறாமல் நடக்கும் ஒருவன் ஏழையாய் இருக்கிறான் என்றால், அவன் செய்த முன்வினைப் பாவத்தின் பலனே ஆகும் என்பதை குசேலரின் இந்த சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.குசேலர் மேலும் தொடர்ந்தார். அன்புக் குழந்தைகளே! இந்த உலகத்தில் படித்தவன் யார் தெரியுமா? தன்னிடம் செல்வமிருக்கிறது, அழகிருக்கிறது, அழகான மனைவி வாய்த்து விட்டாள், அறிவுள்ள புத்திரர்கள் ஏராளமாக இருக்கிறார்கள், கவலையே இல்லாததால் தலை கூட வெளுக்கவில்லை என்று எவன் ஒருவன், இவற்றையெல்லாம் பெற்றிருந்தாலும் நினைப்பதில்லையோ, அவனே நூலறிவு உள்ளவன். அதாவது, இவையெல்லாம் நிலைப்பதில்லை என்பதால் அவன் கர்வம் கொள்ளமாட்டான். நாம் கிருஷ்ணனை மட்டுமே நம்புவோம். அவன் திருநாமத்தையே சுவாசிப்போம். பணம் என்பது அவனது திருநாமத்தை சொல்வதன் முன் ஒரு பொருட்டேயல்ல! கொலை, உண்ணும் உணவில் ஆடம்பரம், சிநேகிதர்களையே வஞ்சிக்கும் குணம், நல்லவர்களைப் பழிக்கும் குணம் ஆகியவற்றையே பணம் தரும். பணத்தின் மீது பற்றுள்ளவன் கோயிலில் கூட கொள்ளையடிப்பான், என்று முடித்தார்.
குசேலர் என்றோ சொன்ன வார்த்தைகள் ஆனாலும், இவை அனைத்தும் இன்றைக்கும், என்றைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறதல்லவா! அப்போது, சுசீலை அவரிடம், சுவாமி! செல்வத்தின் இழிநிலை குறித்து தெளிவாகச் சொன்னீர்கள், இதில் இருந்து விடுபடும் வழி உலகத்தாருக்கு கடினமாய் உள்ளதே! அதற்கு வழியிருக்கிறதா? என்றாள். கையில் பொருள் வந்தால் கோயில்களுக்கு கொடுக்க வேண்டும். அங்கே சொல்லப்படும் உபன்யாசங்களை கேட்க வேண்டும். யாசகம் கேட்டால் கொடுக்க வேண்டும். எம்பெருமான் நாராயணனின் திருவடிகளை நினைத்தபடி இருந்தாலே பொருள் பற்று குறைந்து போகும், என்ற குசேலர், பணம் மட்டுமின்றி, குடல், ரத்தம், எலும்பு,கொழுப்பு, தோல், மாமிசம், மலம் நிரம்பிய உடலைக் கொண்ட பெண்களையும் மனிதன் விரும்புகிறான். இதுவும் கொடிய ஆசையே, என்றார்.சுவாமி! பொன்னாசை, பெண்ணாசை பற்றி சொல்லி விட்டீர்கள். குழந்தைகளைப் பெற்றவனாவது பாக்கியவானா? அவன் செல்வம் பெற்றவன் தானே, என்றதும் குசேலர் புன்னகைத்தார்.சுசீலா! யதார்த்தத்தைப் புரிந்து கொள்! குழந்தையைப் பெறும் போது தாய் துன்பப்படுகிறாள். மனைவியின் துன்பம் கண்டு கணவன் மனம் நோகிறான். வளர்க்கின்ற நாளிலும் துன்பம் தானே! அந்தக் குழந்தைக்கு ஒரு நோய் வந்தால் மனிதனால் தாங்க முடியுமா? பருவத்தை அடைந்து விட்டாலும் துன்பம். எமன் வந்து அந்தக் குழந்தையின் உயிரை இடைநாளில் பறித்தால்... அப்பப்பா! அந்த துன்பம் காலமெல்லாம் மாறுமா? இளமையில் பெற்றவர்கள் கொடுக்கும் தண்டனைக்கு பயந்து நடுங்குவார்கள். பெற்றவர்கள் முதுமையடைந்து விட்டால் இவர்களைக் கண்டு நடுங்க வைத்து விடுவார்கள், என்றார். தன் கணவரின் சொல்லில் உள்ள உண்மையை உணர்ந்த சுசீலை, அவரை துவாரகாபுரிக்கு அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபடத் தயாரானாள்.சுவாமி! தாங்கள் சொன்னபடி நிஜமான பேரின்பமான ஸ்ரீகிருஷ்ணரின் திருவடி தரிசனம் காண புறப்படுங்கள். அவரது தரிசனத்தை விட மிகப்பெரிய செல்வம் வேறென்ன இருக்கப்போகிறது? தாங்கள் புறப்படுங்கள், என்றாள்.
அப்போது அவர், அன்புடையவளே! உனக்குத் தெரியாத விஷயமல்ல! இருப்பினும் சொல்கிறேன். என் அன்பு நண்பனைக் காணச் செல்வதில் எனக்கு மகிழ்ச்சியே! ஆனால், இப்போது அவன் அரசன். அது மட்டுமா! அவனே தெய்வம். அவனே இந்த உலகத்துக்கு ஆசான். கடவுள், அரசர், குரு ஆகியோரைக் காணச் செல்பவர்கள் வெறும் கையுடன் செல்வது முறையல்ல. அவர்களைக் காணச் சென்றால் கனி வகைகளோ பிறவற்றையோ எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாதவன், இருப்பவன் முன் செல்வது ஆகாது என்பது உலகவிதி. ஏனெனில், அங்கே அவனுக்கு மதிப்பிருக்காது. உறவினர்கள் ஒரு வீட்டுக்குச் சென்றால், கையில் என்ன கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பார்ப்பது உலகம். என் கண்ணன் இந்தக் குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றாலும், கையில் ஏதாவது கொண்டு செல்வது தானே முறை! அவன் மகாபெரியவன்! அவனிடம் இல்லாத பொருள் ஒன்று உண்டோ? இந்த எளியவனால் அவனுக்கு கொண்டு செல்லத்தக்க பெரிய பொருள் இல்லை. ஆனாலும், இறைவன் சிறு பொருளையும் காணிக்கையாக ஏற்பான். சுசீலா! உனக்கு ஒன்று தெரியுமா? நமது ஊர் கன்னிப்பெண்கள் தனக்கு நல்ல கணவன் வாய்ப்பதற்காக தங்கள் புடவை முந்தானையில் உள்ள நூலிழையைப் பறித்து மூன்றாம் பிறைச்சந்திரனுக்கு அர்ப்பணம் செய்வதைப் பார்த்திருக்கிறாய் அல்லவா! அந்த நூலிழைக்கு என்ன மதிப்புண்டு? ஆனால், அது மிக நல்ல கணவனை அவர்களுக்கு தருகிறதே! நம் வீட்டிலும் என் கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லத்தக்க பொருள் ஏதுமில்லை. அதனால், இருப்பதைக் கொடு, அதை அவனிடம் கொண்டு சேர்ப்பிக்கிறேன், என்றார்.சுசீலை சற்றும் தாமதிக்கவில்லை. அவளது வாழ்நாளில், பக்கத்து வீடுகளில் தன் குழந்தைகளின் பசிக்காக கூட எள்ளளவு பொருளும் கேட்டதில்லை. முதன் முறையாக பகவானுக்காக யாசகம் கேட்கச் சென்றாள்.மாமி! மாமி! என் கணவர் கண்ணபிரானை தரிசிக்கச் செல்கிறார். கண்ணனும், என் கணவரும் பால்ய சிநேகிதர்கள். அவரைக் காணச் சென்றால் வெறும் கையுடன் செல்ல முடியுமா? தங்கள் இல்லத்தில் இருந்து கொஞ்சம் நெல் தாருங்களேன், என்று கேட்டு அலைந்தாள்.