பதிவு செய்த நாள்
28
மார்
2011
05:03
எல்லோருமே மனம் உவந்து நெல் கொடுத்தனர். அதைக் குத்தி அவல் தயார் செய்தாள். அவல் தயாராயிற்று...கிருஷ்ணனுக்கு எடுத்துப் போக வேண்டும் என்றால் வெள்ளிப்பாத்திரம் இருந்தால் எடுத்துப் போக நன்றாகத் தான் இருக்கும். ஆனால், குசேலர் வீட்டில் என்ன இருந்தது? ஒரு கிழிந்த வேட்டி. அதில் ஒரு முனையைக் கிழித்து அதில் அவளைக் கட்டினாள். கணவரின் கையில் கொடுத்து,அன்பரே! கிருஷ்ணரைத் தரிசித்து வாருங்கள். நாங்களெல்லாம் அவரை விசாரித்ததாகச் சொல்லுங்கள், என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.குசேலர் புறப்பட்டார். அவரது பசியைத் தீர்த்துக் கொள்ள கட்டுச்சோறு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. கைச்செலவுக்கு பணம் எடுத்துச் சென்றார்... என்ன பணம் தெரியுமா? கிருஷ்ணபக்தி என்னும் அன்புப்பணம். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண... இப்படி கிருஷ்ணனின் திவ்யநாமத்தைச் சொல்லிக் கொண்டே நடந்த போது வயிற்றின் மீது அவருக்கு சிந்தனையே வரவில்லை. கால்கள் வலித்தது தெரியவில்லை. 300 கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து சென்றதாகச் சொல்வார்கள் ஆன்றோர்கள்.வழியில் சில சமயங்களில் பாதை தெரியாமல் தடுமாற்றம் ஏற்படும். அங்கே இருப்பவர்களிடம் விசாரித்து அவ்வழியில் செல்வார். சில இடங்களில் சாலை நான்கு பாதையாகத் தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் புலப்படமாட்டார்கள். அப்போது, தன் சுயஅறிவைப் பயன்படுத்தி, கிருஷ்ணனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அவ்வழியில் செல்வார். அந்தப் பாதை சரியாகவே இருக்கும். அவர் செல்லும் வழியில் பல மலைகள் இருந்தன. அங்கே பெண் யானைகளின் ஊடலைத் தீர்க்க ஆண் யானைகள் தளிர் இலைகளைப் பறித்து தருவதை ரசித்தபடியே சென்றார். சில இடங்கள் மிக மேடாகவும், கற்கள் நிறைந்தும் இருந்தன. அவற்றில் தடுமாறி தடுமாறி நடந்தார்.
சில இடங்களில் புலி, சிங்கம், கரடிகள் நிறைந்த காடுகள் வந்தன. கண்ணன் இதயத்துக்குள் இருக்கும்போது கரடிகள் என்ன செய்யும்? அந்தக் காடுகளையெல்லாம் அவர் அச்சமின்றி கடந்தார். ஆங்காங்கே நதிகளும் குறுக்கிட்டன. அவற்றுள் இறங்கி நடந்த அவர், வெப்பம் மிக்க இடங்களையும் கடக்க வேண்டியதாயிற்று.கொஞ்ச தூரமா! குசேலருக்கு வருத்தம் உண்டாயிற்று.கிருஷ்ணா! உன்னைக் காண எவ்வளவு தூரம் நடந்து விட்டேன்! ஊரை விட்டுக் கிளம்பி ஒரு வாரமாயிற்று. துவாரகையின் எல்கையை இன்னும் காண முடியவில்லையே! துவாரகை எங்கிருக்கிறது என யாரைக் கேட்டாலும், இன்னும் பல காத தூரம் செல்ல வேண்டுமே என்று தான் எல்லாரும் சொல்கிறார்கள். சில இடங்களில் குடிக்க நீர் கிடைக்கவில்லை. ஏனெனில் ஓடைகளெல்லாம் வறண்டு கிடந்தன. ஓரிடத்தில் காலில் முள் தைத்தது. அதை எடுப்பதற்கு அவரால் முடியவில்லை. கால் கடுமையாக வலிக்கவே நொண்டியபடியே நடக்க வேண்டியதாயிற்று. குசேலர் ஓரிடத்தில் அமர்ந்தார். வீட்டை விட்டு கிளம்பியது தவறோ என்று கூட அவர் மனதில் பட்டது. அதே நேரம் எம்பிரானின் நினைவு மனதில் வரவே துணிச்சல் ஏற்பட்டது. உயிரே போனாலும் சரி...நண்பனைப் பார்த்தே தீருவதென உறுதியெடுத்தார்.கடவுளைக் காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல. கடவுளை நேரில் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம்பிடிப்பவர்கள் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கிறார்கள்! கடவுள் என்றால் சாதாரணமானவனா! அவனை அவ்வளவு எளிதில் பார்த்து விட முடியுமா! கடவுளைக் காண நாம் தியானம் மேற்கொண்டால் போதாது! தவம் செய்தால் போதாது. வாசனாதி திரவியங்கள் கொண்டு பூஜித்து புளியோதரையையும், சர்க்கரைப் பொங்கலையும் அவனை முகரச் செய்தால் போதாது! உறுதி...உறுதி...உறுதி...ஆம் உறுதியான பக்தியே அவனை நம் கண்முன் காட்டும்! அந்த உறுதியுடன் துவாரகை நோக்கி பயணமானார் குசேலர்.
சுகப்பிரம்ம முனிவர், பரீட்சித்து மன்னனிடம் இந்தக் கட்டத்தை சொல்லிக் கொண்டிருந்த போது, மன்னன் கிரீடம் அணிந்த தன் தலை பூமியில் படும்படி வணங்கினான். யாருக்கு இந்த வணக்கம் தெரியுமா? காலில் முள் தைத்தாலும், அதை எடுக்க முடியாவிட்டாலும், தத்தி தத்தி குழந்தை போல நடந்தாரே...அந்த குசேலரின் திருவடியை மனதார எண்ணி வணங்கினான். இந்தக் கதையை வாசிக்கும் நமக்கும் அந்தப் பாக்கியம் கிட்டியிருக்கிறது. பகவானை விட பாகவதன் (பக்தன்) உயர்ந்தவன். பகவானே பக்தனுக்குப் பயந்து அவனைத் தேடி வந்து விடுவான். பகவான் நரசிம்மனாக வெளிப்பட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.இரணியன் கதையுடன் நிற்கிறான். ஏ பிரகலாதா! எங்கேயடா உன் ஹரி? என்று கேட்கிறான். பகவான் டென்ஷன் ஆகி விட்டார்.இந்தப் பொடியன் நம்மை எங்கே இருப்பதாகச் சொல்லப் போகிறானே! எதற்கு வம்பு! நாம் தூணிலும் இருப்போம், துரும்பிலும் இருப்போம் என்று உலகிலுள்ள சகல வஸ்துக்களிலும் தன் உருவத்தை வியாபித்துக் கொண்டானாம். அவன் இதோ இந்த தூணில் இருக்கிறான் என்று சொல்ல, தூணைப் பிளந்து வெளிப்பட்டான். பார்த்தீர்களா! உலகையே நடுங்க வைத்த நரசிம்மம், அந்தச் சிறுவனுக்கு நடுநடுங்கிப் போனதை! அவன் தான் பகவான். நிஜபக்திக்கு அவன் கட்டுப்பட்டு நிற்பான்.தன் நண்பனைப் பார்த்தே தீருவதென்ற உறுதியுடன் நடந்த குசேலர் ஒருவாறாக துவாரகையை எட்டியே விட்டார். மனமெங்கும் பரவசம். இருந்தாலும், அந்த நேரத்திலும் நிதானம். துக்கமோ, மகிழ்ச்சியோ எந்த உணர்வுக்கு நாம் ஆட்பட்டிருந்தாலும் நிதானத்தை மட்டும் விடவே கூடாது. குசேலர் மிகவும் பவ்வியமாக துவாரகைக்குள் சென்றார். குறிப்பாக, பெண்கள் எதிரே வந்தால் ஒதுங்கி நின்று அவர்களுக்கு வழிவிட்டுச் சென்றார். ஒழுக்கம் உயிரை விட உயர்ந்தது என்பது அவர் இவ்விடத்தில் நமக்கு கற்றுத்தரும் பாடம். மாடமாளிகைகள் நிறைந்த அந்த ஊரின் இயல்பு ஆச்சரியப்பட வைக்கும். எல்லாமே மாளிகைகள்... இதில் கண்ணனின் மாளிகை எது? குசேலர், அந்நகரை ஆச்சரியமாகப் பார்த்தபடி நடந்தார்.