பதிவு செய்த நாள்
25
டிச
2013
01:12
மதுரை உயர் மறைமாவட்ட ஆர்ச்பிஷப் பீட்டர் பெர்னாண்டோ: .டிச., 25 அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள். அன்று விண்ணகம் மண்ணகத்தை சந்தித்த நாள். கருணை நிறை இறைவன், நம்மை சந்தித்த நாள், இதுவே கிறிஸ்துமஸ். அன்பான கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பும் அளவுக்கு நம்மேல் வைத்த அன்பை உலகம் கண்கூடாக பார்த்த நாள். இயேசு பிறப்பை ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடும் போது, 2000ம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வை நினைவு கூறவில்லை. மாறாக அந்த நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் வாழ்வாக்கு கிறோம் என அர்த்தம். நம் வாழ்வின் நோக்கம், லட்சியத்தை புரிய, நம்மை கிறிஸ்துவின் அருகில் வைத்து பார்க்க வேண்டும். கிறிஸ்துவுக்கு எதுவெல்லாம் நிறைவை அளித்ததோ, அவை நமக்கும் நிறைவளிக்கும். இறைச்சித்தத்தை நிறைவேற்றுவதே, அவருக்கு நிறைவு அளித்தது. இறைத்திட்டத்தை உணராவிட்டால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அர்த்தமற்றதாகும். இயேசு பசியாக இருப்பவரின் வயிற்றில் இருக்கிறார். உடையின்றி இருப்பவரின் உடலில் இருக்கிறார். இவர்களில் இயேசுவை காண்பதே இறைத்திட்டம். இவர்களை சகோதரனே! சகோதரியே! என அழைக்கும் போது இயேசு நம்மில் பிறக்கிறார். இயேசு தன்னை ஏழைகளுடன் இணைத்து கொண்டார். மாட்டுக் குடிலில், புல்லோடும், வைக்கோல் பஞ்சனையோடும் நிறைவு காண்கிறார். ஏழை, எளியோருக்கு தான் கிறிஸ்துவின் பிறப்பு மிக அர்த்தமுள்ள விழாவாகும். அன்பே உருவான இறைவன் நம் உள்ளத்தில் உதிக்க, அன்பால் நம் உள்ளத்தை புதுப்பிப்போம். ஆடம்பர உலகில் எளிமையாக வாழ்வது, சுயநல உலகில் பிறர்நலம் தேடுவது, பிறர் வாழ தியாகம் செய்வது, அடுத்தவரை சிரிக்க வைத்துப் பார்ப்பது, அயலாரை வாழ வைத்து பார்ப்பது, இதுவே இயேசுவின் பிறப்பு நமக்கு தரும் சவால். கிறிஸ்துமஸ் என்றால் அன்பு, எளிமை, சேவை. அன்பு செய்பவர் கடவுளிடம் இருந்து பிறந்துள்ளார் என்கிறார், இயேசு. பாலகன் இயேசுவின் பிறப்பின் மகிழ்ச்சியும், அமைதியும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!.
திண்டுக்கல் மறைமாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி: உங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி, உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்(லூக் 2:10-11), என்று இயேசுவின் பிறப்பு நற்செய்தியை அன்று இடையர்களுக்கு அறிவித்தனர் வானதூதர்கள். இந்நற்செய்தி மாந்தர் அனைவருக்கும் மகத்தான நம்பிக்கையை மனதில் விதைக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை என்பதுதான் கிறிஸ்து பிறப்பு செய்தி என்கிறார் டெய்லர் கால்டுவெல் என்ற மேலைநாட்டு சிந்தனையாளர். கிறிஸ்துவின் பிறப்பு இன்றும் இத்தகைய அனுபவத்தை நிச்சயமாக நமக்கு நல்கும் என்பதில் ஐயமில்லை. வளர்ந்து வருகின்ற நவீன மயமான காலச்சூழலில் பல்வேறு எதிர்மறை காரியங்கள் அரங்கேறி வருவதை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலையில் மனம் சோர்ந்து விடாமல் விரக்தியால் வீழ்ந்து விடாமல் இருக்க கிறிஸ்துவின் பிறப்பு புதுநம்பிக்கையை நம்மில் தூண்டுவதாக உணர்கிறேன். இந்த சமயத்தில், ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர், நோயாளிகள், மனப்பிறழ்வு மனிதர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை தனிப்பட்ட அக்கறையோடு அன்பு செய்ய ஆண்டவரின் பிறப்பு நம்மை அழைக்கிறது. அதே போன்று நமக்காக பிறந்த மீட்பரின் துணையால், அனைவரும் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ நாம் சபதமேற்போம். எனவே, கிறிஸ்து பிறப்பு ஏதோ வந்து போகும் ஒரு விழாவாக இல்லாமல், நம்மில் நம்பிக்கை ஒளியை ஏற்றி அன்பு நிறை மக்களாக வாழவும், அமைதியால் இப்புவி சூழப்படவும் நமக்கு அருள்பாலிக்கும் ஒரு விழாவாக திகழட்டும். மகிழ்ச்சியும், மனநிம்மதியும் உங்கள் உள்ளங்களில், குடும்பங்களில், இச்சமூகத்தில் நிறைவாக குடிகொள்ளட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்!.
சி.எஸ்.ஐ., மதுரை-ராமநாதபுரம் பேராயம் பிஷப் எம்.ஜோசப்: கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி, எல்லா மக்களுக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும். இயேசு பிறப்பை கூறும் வேதபகுதிகளை ஆழ்ந்து வாசிப்போமானால், அது சிறந்த தீர்மானங்களை எடுக்க வழிநடத்துகிறது. மேய்ப்பர்கள்:சாதாரண மக்களாய், பிறரால் புறக்கணிக்கப்பட்ட, தங்கள் பணிகளை கடுங்குளிரிலும் உண்மையாய் நிறைவேற்றியவர்கள். இவர்களுக்கு இயேசு பிறப்பு, மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்க செய்தது. சந்தேகப்படாமல், இயேசுவை ஏற்று செயல்பட்டால், நாமும் மிகுந்த மகிழ்வும், நம் அன்றாட கடமைகளை நிறைவேற்றும் உற்சாகமும் பெற முடியும். மரியாள்: சிந்தனைக்கும், செயல்பாட்டிற்கும் வழிநடத்திய செய்தி (லூக் 2:19) நாமும் ஜெப சிந்தனையோடு, கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் போது, அர்ப்பணிக்கப்பட்ட செயல்பாடுகளைத் தொடர இயலும். சிமியோன்: இந்த பக்திமானுக்கு இயேசு பிறப்பின் சமாதானமும், ரட்சிப்பும் அருளும் நற்செய்தி(லூக் 2:29.32) இயேசுவின் மூலம் சமாதானமும், ரட்சிப்பும் பெற நம்மை அவருக்கு கீழ்படிதலினால், மிகுந்த சந்தோஷமடையலாம். அன்னாள்: இத்தீர்க்கதரிசிக்கு இயேசு பிறப்பு, கடவுளை துதிபாடும் மீட்பின் செய்தியானது(லூக் 2:8) பாடி மிகிழ்ந்து கடவுளை மகிமைப்படுத்தி இயேசுவின் பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல. நமது அனுதின அனுபவமாக ஆக்கி கொள்ள ஆண்டவர் விரும்புகிறார். ஞானிகள்: இயேசு பாலகனை தேடி வந்த இவர்களுக்கு இச்செய்தி மிகுந்த ஆனந்த சந்தோஷத்தை அருளி வேறு வழியில் செல்ல வழிநடத்தியது. குறைகளை உணர்ந்து மாற்று வழியில் செல்ல தீர்மானிப்பதே, நமக்கு இவ்வாண்டில் இயேசு பாலகன் தரும் ஆசியாய் அமையும். ஏரோது: இயேசு பிறப்பின் நற்செய்தியை ஏற்று கொள்ளாத ஏரோது கலக்கமடைந்து, தன்னோடு சேர்ந்தவர்களையும் கலக்கமூட்டினான். இது நமக்கு ஒரு எச்சரிப்பு. அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடவும், ஆசீர்வாதமான புதிய ஆண்டில், வாழ்ந்து மகிழவும் ஜெபத்தோடு வாழ்த்துகிறேன்.
சிவகங்கை மறை மாவட்ட பிஷப்எஸ்.சூசைமாணிக்கம்: கிறிஸ்துமஸ் என்பது செயல்வடிவம் பெற்ற அன்பு. ஒவ்வொரு முறையும் நாம் கொடுக்கும் போதும், அன்பு செய்கின்ற போதும், அது தான் கிறிஸ்துமஸ் விழா என்கிறார் இவான் ரோஜர்ஸ். கிறிஸ்துமஸ் விழா, இன்று உலகம் முழுவதும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. இதில் ஆடம்பரத்தை மட்டும் மையப்படுத்தாமல், நல்வாழ்வுக்கான நம்பிக்கையை ஆழப்படுத்துவதாகவும், குடும்பங்களை அன்பால் நிரப்புவதாகவும், நல்லதே நடக்கும் என்னும் எதிர் நோக்கிற்குப் பொருள் கொடுப்பதாகவும் அமைய வாழ்த்துகிறேன். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்,(யோவா 3:16)என நற்செய்தியாளர் யோவான் கூறுகிறார். எனவே அவரது பிறப்பு, கடவுள் நம்மை அன்பு செய்ய பிறந்திருக்கின்றார்; எல்லா நிலையிலும் நம்முடன் பயணிக்கின்றார், என்னும் அன்பின் நற்செய்தியை அறிவித்து நம்மில் நம்பிக்கையை வளர்ப்பதாக. மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தால் பிரிவினை பெருகும் இந்த வேளையில், அன்பு நிறைந்த, இறை விழுமியங்களை கொண்ட எடுத்துக்காட்டான குடும்பமாக மாற, நாம் எடுக்கும் முயற்சிகளே கிறிஸ்துமஸ் விழாவை அர்த்தமுள்ளதாக்கும். நம்மை போன்று மனிதராகி, நம்மில் ஒருவரான இயேசு வரவிருக்கும் புத்தாண்டில் நம்மை நெறிப்படுத்த வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.