அக்னி நட்சத்திரத்திர நாட்களில் என்ன செய்யக் கூடாது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2014 05:05
கொளுத்தும் வெயில் அதிலும் கத்திரி வெயில் மிகக் கடுமையாக இருக்கும்.மதுரை தமிழ்ச்சங்க அகராதி கத்திரி என்பதற்கு வேனில் காலத்து கடுங்கோடை என்று பொருள் சொல்கிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 21ம் தேதி (04-5-2014) அன்று தொடங்கி வைகாசி மாதம் 14ம்தேதி (28-05-2014) நிவர்த்தியாகிறது. இந்த நாட்களில் வெப்பம் கடுமையாக இருக்கும். அதிலும் மே மாதம் 18, 19-ம் தேதிகளில் வெயில் கடுமையாகக் கொளுத்தும். நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்த அக்னி நட்சத்திரம் கார்த்திகையானதால் அந்த நட்சத்திரத்தை அக்னி நட்சத்திரம் எனலாம். இந்த நாளில் சந்திரன் மட்டுமல்ல பூமி கூட சூரியனுக்கு அருகில் உள்ளது.
சிவபிரானுடைய ஆறு முகங்களில் இருந்து ஆறு தீப்பொறிகள் பிறந்து அவை ஆறு குழந்தைகளாக மாறின. அக்குழந்தைகளை ஆறு பெண்கள் வளர்த்தார்கள். அதனால் அவர்களால் வளர்க்கப்பட்ட முருகப் பெருமான் கார்த்திகேயன் எனப்பட்டான் என்கிறது கந்த புராணம். இதன் காரணமாக கார்த்திகை நட்சத்திரத்தை அக்னி நட்சத்திரம் எனக் குறிப்பிடலாம்.
அக்னி நட்சத்திரத்திர நாட்களில் என்ன செய்யக் கூடாது: இந்த நாளில் திருமணம் உபநயனம் போன்ற சுப விழாக்களை நடத்தலாம். யாகங்கள் செய்ய விரும்புகிறவர்கள் யாகங்கள் நடத்தலாம். அதிகாலையில் துயிலெழுந்து நீராடி சூரிய பூஜை, சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி ரேணுகா தேவிக்கு சூரியன் பாதரட்சைகள், குடை, விசிறி முதலியவற்றைத் தானமாகத் தந்ததாக சூரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பொருட்களைத் தானமாக தருபவர்களுக்கு அருள் புரிவதாக சூரியன் வாக்குறுதி கொடுத்தான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சித்திரை மாத சதுர்தசியில் இந்தத் தானங்களைச் செய்வது விசேஷம். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முதல் நாள் (03-05-2014) சதுர்தசி திதி அமைவதால் அன்றே இந்தத் தானங்களைச் செய்யலாம்.
அக்னி நட்சத்திர நாளில் பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் வழிபடுவதுடன் கிருத்திகைக்குரிய தேவதையான அக்னி மற்றும் முருகப்பெருமானையும் வழிபட நற்பலன்கள் கிட்டும். அக்னி நட்சத்திர நாட்களில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம், நீர் போன்றவற்றை தானம் செய்தால் புண்ணியம் ஆயிரம் மடங்காகக் கிடைக்கும். இந்த நாட்களில் குளம், குட்டை, தோட்டங்கள், அமைக்கக் கூடாது. விவசாய நிலத்தில் விதை, விதைக்கக்கூடாது. செடி கொடிகளை வெட்டக்கூடாது. இந்த நாட்களில் வெப்பம் கடுமையாக இருப்பதால் இதற்கெல்லாம் தடை விதித்திருக்கிறார்கள் சான்றோர்கள்.