இருமாமுனிவர்கள் வசிஷ்டரும், கோசிகரும். இவர்கள் இருவருக்கிடையில் ஒற்றுமை இருந்ததே இல்லை. பகையுணர்வின் காரணமாக கோசிகன், வசிஷ்டரை பழி வாங்க முயன்று தவவலிமை இழந்து மீண்டும் தபோதனராகப் பலமுறை முயன்று தன் தவ வலிமை பெற்று வந்தார். உதிரன் என்ற அரக்கன் மூலம் தனது தவ வலிமைகளைத் தந்து வசிட்டரின் புதல்வர்களை அழிக்க ஏற்பாடு செய்தார் கோசிகன். வசிட்டரும் அருந்ததியும் இல்லாத சமயம் அவர்களது பிள்ளைகளை மாய்த்து விட்டான். வசிட்டரும், அருந்ததியும் மனமுடைந்து இருந்தனர். வசிட்டரின் மகன் சக்தி என்பவனின் மனைவி திரிசந்தி கருவுற்றிருந்த காரணத்தால் அவளது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தகவலறிந்து வந்து தானும் உயிர் துறக்க முற்பட்டாள். வசிட்டரும், அருந்ததியும் தங்களது வாரிசு அவளது வயிற்றில் வளர்வதனால் சாந்தப்படுத்தி கண்ணும் கருத்துமாக திரிசந்தியைப் பாதுகாத்தனர். தக்கதோர் நன்னாளில் திரிசந்தி ஆண் மகவொன்று ஈன்றெடுத்தாள்.
பேரனுக்கு பராசரன் என்று பெயரிட்டு கல்வியறிவூட்டினர். நற்குணம் நற்செயல்களோடு வேத நூல்யாவும் அறிந்தான். அவனது மனத்தில் இருந்த குறையை தாயிடம் கேட்டான். பாட்டி சுமங்கலியாக, தாய் அமங்கலியாக இருப்பதன் காரணம் பற்றி கேள்விகளாகக் கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில் உண்மையில் நடந்தவற்றை திரிசந்தி உரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாத்தா, பாட்டி, தாயின் மனமுவந்த ஆசிகள் பெற்று மனத்தை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை நோக்கிக் கடுமையாக தவமேற் கொண்டான். நேரில் காட்சி தரும் நிலையும் ஏற்பட்டது. தன் தந்தையைக் காணவும், அரக்கர்களை அழிக்க ஆற்றலும் வேண்டிக் கோரினான். அவனது பக்தியின் வலிமையால் பராசரரின் தந்தையான சக்தி அங்கு தோன்றுமாறு ஈசன் கருணை புரிந்தான். தந்தையைக் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றான். அரக்கர்களை அழிப்பது எளிதல்ல என்பதால் வேள்வி செய்யுமாறு ஈசன் பணித்தார். ஈசன் உபதேசித்தப்படி சிறந்ததொரு யாகம் மேற்கொண்டான். யாகத்தில் ஏற்படும் புகை முழுவதும் அரக்கர்கள் இருக்குமிடத்தில் பரவி அரக்கர் கூட்டம் அழிந்து விட்டது.
யாரோ செய்த தவறுக்குப் பலர் அழிவதை உணர்ந்த வசிட்டர் தனது பேரன் பராசரரிடம் பலர் அழியக் காரணமாகி பலரைக் கொன்ற பாபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் இறைவனை வேண்டி வழிபடுவதே தக்க செயலாகும் என்று கூறி வேள்வியை நிறுத்துமாறு உ<பதேசித்தார். அச்சமயம் அங்கு வந்த புலஸ்திய முனிவரும் பராசரரிடம் பிற உயிர்கள் அழியாத நிலையில் தவமேற் கொண்டோர் வாழ்வதே சிறப்பு என விளக்கினார். பாட்டனாரும், புலஸ்தியரும் கூறிய வார்த்தைகட்கு இணங்கி பராசரர் இறைவழிபாட்டில் தன் வாழ்க்கைப் பணி ஏற்றார். மூத்தோர் சொல் அமுதமாகும் என்பதை உணர்ந்த காரணத்தால் பராசரர் தனது அறிவை ஞானத்தின் பால் மாற்றி மெய் ஞானம் உணர்ந்திட்ட மஹானாக விளங்கினார் என்றும், அழியாப்புகழுடன் சிறந்த நூல்களை எழுதி வரும் சந்ததிகட்கு வழிகாட்டிய மஹானாகத் திகழ்ந்தார்.