செஞ்சி: செஞ்சி அருகே பழங்கால கல்வெட்டுகள் உள்ள திருநாதர் குன்றில், 10ம் நுாற்றாண்டு காலத்திய தமிழ் கல்வெட்டுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காசுயியல் கழக நிறுவனர் லெனின், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா திருநாதர் குன்றில் உள்ள 24 சமண தீர்த்தங்கரர்கள் பகுதியில் ஆய்வு நடத்தினார். இதில் சமண தீர்த்தங்கரர்கள் பாறைக்கு அருகே இரண்டாக உடைத்து கிடந்த மகாவீரர் சிலையின் மேல் பகுதியில் தமிழ் கல்வெட்டுகள் இருப்பதை கண்டு பிடித்துள்ளார். இது குறித்து லெனின் கூறியதாவது: இங்குள்ள மகாவீரர் சிலையை அக்கால தொழில் நுட்பத்தில் உடைத்திருப்பதால் கல்வெட்டு எழுத்துக்கள் சிதைந்து காணப்படுகின்றன. எனவே கல்வெட்டை முழுமையாக படிக்க முடிய வில்லை. தற்போதுள்ள கல்வெட்டில், இங்குள்ள தேவர்களுக்கு சந்திரன், சூரியன் உள்ளவரை திருநொந்தா விளக்கு எரிக்க தேவையான நெய் தய õரிக்க உயிருள்ள மூப்பு அடையாத பால் தரக்கூடிய நாணுாற்றுக்கும் அதிகமான பெரிய ஆடுகள் தானமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடப் பட்டுள்ளது. அத்துடன் அந்த தானத்தை காப்பாற்றி கடை பிடித்தவர் பாதங்கள் என் தலை மேல் என கல்வெட்டு முடிகிறது. எழுத்து அமைப்பை கொண்டு இக்கல்வெட்டின் காலம் கி.பி.10ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். என்றாலும் இதை வடிக்க செய்த அரசன் பெயரோ, ஆட்சி ஆண்டோ, கடவுளின் பெயரோ அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு கல்வெட்டு சிதைந்துள்ளது. இதே பகுதியில் சற்றே அருகாமையில் மற்றொரு பாறையில் 6ம் நுாற்றாண்டை சேர்ந்த பிராமியும், வட்டெழுத்தும் கலந்த சமண முனிவர்களை பற்றிய குறிப்பை உணர்த்தும் கல்வெட்டுகள் ஏற்கன வே கண்டு பிடித்ததாக பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு லெனின் கூறினார்.