பதிவு செய்த நாள்
12
நவ
2014
11:11
ஈரோடு : சபரிமலை சீசனுக்கு, புது வரவாக, தங்க நிற ஜரிகைக்கரை வேஷ்டி விற்பனை சூடுபிடித்து உள்ளது.வரும் 17ம் தேதி, கார்த்திகை முதல் நாளில், சபரிமலை ஐயப்பனுக்கு, பக்தர்கள் மாலை போடுவர். இந்த சீசனில் பிரத்யேக வேட்டி, துண்டு, இருமுடி செட் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:ஈரோடு மாவட்டம், எடப்பாடி, திருச்செங்கோடு, குமாரமங்கலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்துாரில் இருந்து, காவி, நீலம், கருப்பு, கருநீல நிற வேட்டி, துண்டு செட் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது.பழைய மாடல், ’பொந்துகரை’ மட்டுமின்றி, இந்தாண்டு புது வரவாக தங்க நிற, ’ஜரிகை பார்டர்’ வேட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பிரத்யேக நுாலை கொண்டு, பார்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை சபரிமலை பக்தர்கள், விரும்பி வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு, வியாபாரிகள் கூறினர். இந்தாண்டு, 500க்கும் மேற்பட்ட தறிகளில் வேஷ்டி, துண்டு தயாரிக்கப்பட்டு உள்ளன. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.