பதிவு செய்த நாள்
13
நவ
2014
12:11
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், திடீரென கோவில் முன் மாநகராட்சி சிறு பாலம் அமைக்கும் பணியை துவக்கியுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாலத்தை விரைந்து கட்டிக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் டிச., 1ல் நடக்கிறது. 27ம் தேதி முளைப்பாரி ஊர்வலம், 28ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. யாகசாலை அமைக்கும் பணி, அன்னதான பந்தல், முன்பகுதியில் கூரை மற்றும் அலங்கரிக்கும் பணி உள்ளிட்டவை தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், பெருமாள் கோவில் வீதியின் குறுக்கே மழை நீர் வடிகால் மீது எட்டு லட்சம் ரூபாய் செலவில் சிறு பாலம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, அந்த ரோடு அடைக்கப்பட்டு, குழி தோண்டப் பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு சாரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. திடீரென பாலம் கட்டுமான பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், வழக்கம் போல் பாலம் கட்டும் பணியை தாமதப்படுத்தாமல், விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாநகராட்சி மூன்றாவது மண்டல உதவி கமிஷனர் கண்ணனிடம் கேட்ட போது, மழை நீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் வெளியேறி வருகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பாலம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுக்கப் பட்டது. அதையடுத்து, எட்டு லட்சம் ரூபாய் செலவில் கல்வெட்டு பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது; தாமதம் இல்லாமல் பணி மேற்கொள்ளப் படும்; அதிகபட்சம் 15 நாட்களுக்குள் பாலம் தயாராகி விடும், என்றார்.