சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான ஏப், 25ல் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர்.
நான்கு கால்கள் குதிரையைத் தாங்கி நிற்பது போல, அறம், பொருள், இன்பம், வீடுபேறு (மோட்சம்) என்னும் நான்கும் மனித வாழ்வைத் தாங்குகின்றன. தர்ம வழியில் தொழில் செய்து, பொருள் தேடுபவன் இன்பமாக வாழ்வதோடு, இறைவன் திருவடியை அடையும் பேறு பெறுவான் என்பது இதன் பொருள். திறமை படைத்த வீரன் செலுத்தும் குதிரை குறிக்கோளைச் சென்றடைவது போல, மனக்குதிரையை அடக்கி சரியான வழியில் செலுத்துபவன் இறைவன் என்பதையும் இந்த வாகனம் உணர்த்துகிறது.
மதுரைக்கும் குதிரைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அரிமர்த்தன பாண்டியன் அவையில் அமைச்சசராய் இருந்த மாணிக்க வாசகர் குதிரை வாங்கச் செல்லும் போது, சிவனே குரயுவாக வந்து அருள்புரிந்தார். சுந்தரேஸ்வரர் குதிரை வீரனாக வந்து நரியைப் பரியாக்கியும், பரியை நரியாக்கியும் திருவிளையாடல் புரிந்தார். அவ்விளையாடல் புரிந்த கோலத்தை காட்ட சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் குதிரையில் பவனி வருகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து அம்மையப்பரைத் தரிசிப்போம்.