இறைவனின் நாமத்தை சொன்னாலே போதும் பலன் தானாகவே வந்துசேரும். யஜுர் வேதத்தை எடுத்துப் பிழிந்தால், நமசிவாய என்ற நாமம் சாரமாக வரும் என்பார்கள். ஆகவே நமசிவாய என்று உச்சரித்தால் யஜுர் வேதத்தையே ஓதிய பலன் உண்டு என்பது அர்த்தமாகிறது. ஒரு நல்ல வார்த்தை திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொழுது அது நம் எண்ணத்தை துõய்மைப்படுத்துகிறது. அதற்கேற்ப செயலை வடிவமைக்கிறது. ராம என்ற வார்த்தை மாருதியை சொல்லின் செல்வன் ஆக்கியது. மரா என்று உச்சரிக்கப்பட்ட வார்த்தை கூட ராம என்று மாறி ஒரு கொள்கையனின் மனதிற்கு வெள்ளை அடித்து ஒரு வால்மீகியை வெளிக்கொண்டு வந்தது. குரங்குகள் நம்மை நெருங்கும் பொழுது ராமா என்று சொல். அவை தொந்தரவு செய்யாது என்பார்கள். உண்மை! ராமா என்று சொல்லி வந்தால் நம் மனக்குரங்கு நம்மை கடிக்காது என்பதுதான். நமக்குப் பிடித்தவர்களின் பெயரைக் கேட்டதும் மனதில் மகிழ்ச்சி உணர்வும், பிடிக்காதவர்களின் பெயரைக் கேட்டதும் கசப்புணர்வும் வருகிறது. சத்தம் மனதை எவ்வளவு துõரம் ஆளுமை செய்கிறது.
இறைவனின் நாமம் தொன்று தொட்டு உச்சரிக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. கங்கைப் பிராவாகம் போன்று அதில் ஓர் அருள் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறைவனின் நாமத்தைச் சொல்லி, அந்த அருள் வெள்ளத்தில் நம்மை இணைக்க வேண்டும். நல்ல நினைவு இருக்கும் பொழுதே இறைவனின் நாமத்தை நிரந்தர வைப்பு நிதியைப் போல் மனதில் நிலைப்படுத்த வேண்டும். தற்கால சேமிப்பு பிற்காலத்தில் உதவுவது போல் நாம் சொன்ன பலன் காலன் வரும் வேளையில் கை கொடுக்கும்; பேரின்பக் கரை சேர்க்கும் என்பது உறுதி.