வைணவ சம்பிரதாயம் கருடனை பெரிய திருவடி என்று போற்றுகிறது. எம்பெருமான் எத்தனையோ வாகனங்களில் பவனி வந்தாலும், அவரை கருடவாகனத்தில் தரிசிப்பதே அதிக நன்மை தரும் புண்ணிய தரிசனம் என்று சிறப்பிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அருள பகவான் எப்போது புறப்படுவாரோ என்று எப்போதுமே தயாராக இருப்பதால், பகவானே இவர் மீது தனி அன்பு செலுத்துவதாக புராணங்கள் சொல்கின்றன. இறைவன் திருவடியை எப்போதும் சுமக்கும் பெரும்பேறு பெற்ற கருடதேவனைப் போற்றும் திருநாளே கருட பஞ்சமி. இந்த வருடம் 1.8.2014 அன்று கருட பஞ்சமி. கருட பகவானின் பெருமைகளையும், அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தையும் கருடபுராணம் விரிவாகக் கூறுகிறது.
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன். பறவைகளுக்கு அரசனாகவும், திருமாலுக்குச் சேவை செய்யும் போது பெரிய திருவடியாகவும், தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள் நல்கும் விஷ்ணு அம்சமான கருட பகவானாகவும் அவர் விளங்குகிறார். வைணவத்தில் உபாஸனா மார்க்கத்தில் ஒரு குறிப்பிட்ட லட்சத்திற்காக பரம்பொருளை வேண்டி அணுகும் நெறிகளுள் கருட உபாசனை முக்கியமானது. வல்வினைகளில் இருந்து, விஷ ஜந்துகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்தும் விடுபட கருடபகவானை வழிபடுவது சிறந்தது என புராண நூல்கள் விவரிக்கின்றன.
கருட உபாசனை மூலம் வேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாகக் கூறுவர். திருவஹீந்திரபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது. நாடாண்ட மன்னர்கள் பலரும் கருடனிடம் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதை உணர்த்தும் வகையில் வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கருடன் எம்பெருமானுக்கு எல்லா அவதாரங்களிலும் உதவக்கூடியவனாக இருந்தான். இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் மயங்கிக் கிடந்த ராமலட்சுணர்கள், ஆகாயத்தில் பறந்த கருடனின் இறக்கைக் காற்றால் புத்துணர்ச்சி பெற்று யுத்தத்தில் ஈடுபட்டனர். கண்ணபிரான் பாதாள லோகத்தில் அனிருத்தனுடன் சண்டையிட்ட போது, இரு இறக்கைகளையும் பறக்க விரித்து உதவினான். ஆதிமூலமே எனக் கதறிய கஜேந்திரனைக் காப்பாற்ற மகாவிஷ்ணுவின் வாகனமாகச் சென்று உதவினான். வாகனத்தில் கருடனைப் பார்ப்பதும், அவன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். சில்பா மிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக சமயத்தில் இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமைகளையுடைய கருடனை தரிசிப்பதும், கருட பஞ்சமி விரதத்தைக் கடைப்பிடிப்பதும் சகல பலன்களையும் தரும் என்பதில் ஐயமில்லை.