பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
03:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் என்றாலே, ராமாயண வரலாற்றில் தொடர்புடைய புனித தலம் என்பது இந்துக்கள் பலருக்கும் நினைவிற்கு வரும். அத்தகைய ராமேஸ்வரத்தில் குறிப்பிடப்படும் முக்கிய இடங்களில் ஒன்றுராமர் பாதம். இங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றைக்கும் கம்பீரமாக நிற்கிறதுராமர் பாதம் கோயில். ராவணனால் கடத்திச் செல்லப்பட்டு, இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க, தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு அனுமான் மற்றும் வானர சேனைகள் பாலம் அமைத்தன. இப்பணியை, ஸ்ரீ ராமர் கெந்தமாதன பர்வதம் (உயரமான இடம்) எனும் மணல் குன்று மீது நின்று பார்வையிட்டதாக, ராமாயண காவியத்தில், கூறப்பட்டுள்ளது. அதை நினைவு கூறும் விதத்தில், ராமர் நின்ற இடத்தில், அவரது பாதத்தை வைத்து பூஜித்திட அமைக்கப் பட்டது தான் ராமர் பாதம் கோயில்.
ராமேஸ்வரம் கோயிலில் இருந்து வடக்கு திசையில் 3 கி.மீ. துõரத்தில் உள்ள இக்கோயிலில் இருக்கும் ஸ்ரீ ராமர் பாதம் பதித்த சுவட்டை வழிபட தினமும் ஆட்டோ, கார், வேன் மூலம் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் நின்று, ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதையும் கண்டு ரசிக்க முடியும். இக்கோயிலுக்கு சென்று திரும்பினால், இழந்து விட்ட குலப்பெருமைகளை மீண்டும் பெறலாம் என, காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுவதால், நீங்களும் ஒரு முறை ராமர் பாதம் கோயிலுக்கு சென்று வரலாமே.