பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
04:06
தேனி: தலவிருட்சமாக அரச மரமும், கொடிமரமாக இன்றும் வளர்ந்து கொண்டிக்கும் இழுப்பை மரமும், விழுதுகளை பூமியில் புதைத்து குடையாக விரிந்து வளர்ந்துள்ள ஆழமர நிழலில் அமைந்துள்ளது தேனி கே.ஆர்.ஆர்.நகரில் உள்ள பால கணபதி சமேத, காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோயில். இக்கோயிலில் மூலவராக பாலகணபதியும், அருகே சிவன், விசாலாட்சியும் காட்சியளிக்கின்றனர். கோயிலை சுற்றிய பிரகாரங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, வடக்கே பிரம்மா, மேற்கே விஷ்ணு சிலைகளாக காட்சியளிக்கின்றனர். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பாக பக்தர்கள் உணர்கின்றனர்.
இங்கு துணை தெய்வங்களாக வலம்புரி விநாயகர், ராஜமுருகன், சண்டிகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர் உள்ளனர். இங்கு சிவன் ஐந்துநாகங்களுடன் சேர்ந்து இருப்பது சிறப்பு. திருமணம் ஆகாத பெண்கள் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் ஒன்பது வார வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்தால் விவாகம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு தினமும் இருவேளை பூஜைகளும், விநாயகர்சதுர்த்தி நாளில் சுவாமி ஊர்வலம், மகா சிவராத்திரி சிறப்புபூஜை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மேலும் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, பைரவர் அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மேலும் அறிய அர்ச்சகர் குருவாயூரப்பனை 94420 24891 தொடர்புகொள்ளலாம்.