பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
04:06
மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்திலுள்ள ஷீரடியில் வாழ்ந்த மகான் சாய்பாபா. இவர் தங்கியிருந்த மசூதி துவாரகாமாயி என அழைக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பல பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள துனி என்னும் நெருப்புக் குண்டத்தில் கிடைக்கும் சாம்பல் உதி என்னும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாபாவின் அவதார தினமாகக் கருதப்படும் ராமநவமியும், சமாதி அடைந்த தினமான விஜயதசமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகிற்கு நல்வழி காட்டிய குருநாதரான இவருக்கு குரு பூர்ணிமா விழா மூன்று நாள் கொண்டாடப்படுகிறது. குரு வாரமான வியாழனன்று, இவரை வழிபடுவோருக்கு கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
சீரடி சாயி பாபாவின் 9 வியாழக்கிழமை விரத மகிமை: சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் : துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் மனுஷ்யத்தயம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ ஸம்சயம்.
சீரடி சாயி சத்சரித்திர பாராயணத்தையும், விரத பூஜையையும் 67 நாட்களிலோ (சப்த சப்தாஹா) அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட அத்தியாயங்கள்
என கணக்கில் கொண்டு 9 நாட்களிலோ முடிக்க வேண்டும். கடவுளால் படைக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளிலேயே மிகவும் உன்னதமானது மனித ஜென்மம். அவனால் மட்டுமே இதே மனித ஜென்மத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானத்தை பெறும் அவகாசமிருக்கிறது. தேவதைகள் கூட ஒரு தடவையாவது பூலோகத்தில் மனித ஜென்மம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆதலால், இந்த மனித ஜென்மம் எவ்வளவு விசேஷமானது என்று நினைத்துப் பாருங்கள். சாயிநாதரின் சேவையில் ஜீவன் முக்திப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். சாயி நாதரின் பிள்ளைகளாகவே இருந்து இந்த ஜென்மத்தில் முக்தியடையலாம்.
சீரடி சாயி நாதரை மனதில் தியானித்து செய்யப்படும் 9 வியாழக்கிழமை விரதம் மற்றும் சப்த சப்தாஹா பாராயணத்தையும் செய்து முடிக்கும் போது தங்களால் இயன்ற காணிக்கையை பக்தி சிரத்தையுடன் சாயி பாபாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரின் துணையுடனோ நமது வீட்டிலேயே செய்து சாயி நாதரின் ஆசீர்வாதம், அனுக்ரஹம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பக்தி, ஞான வைராக்கியமும் பெற்று பிரம்மானந்தத்தைப் பெறலாம்.
சீரடி சாயி நாதரின் விரத பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்: பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.