பதிவு செய்த நாள்
01
செப்
2015
12:09
உடுமலை: உடுமலை அருகே மண்ணில் புதைந்திருந்த கோவில் குறித்த தொடர் ஆய்வுகள் கைவிடப்பட்டுள்ளதால், அமராவதி ஆற்றுப்படுகையின் தொன்மை குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இது குறித்து தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்த வேண்டும். உடுமலை கல்லாபுரம் வேல்நகர் பகுதியில், மண்ணில் புதைந்திருந்த வைணவ கோவில், கடந்த 2011ம் ஆண்டு கண்டறியப்பட்டது. விளைநிலத்தில், இருந்த மண் மேட்டில், கோவில் துாண்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. இதையடுத்து, கோவில் சுவர்களின் அடித்தளத்தில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். தில், பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் கிடைத்தன. அமராவதி ஆற்றங்கரையில், பிராமணர்கள் தாங்களாகவே நிர்வகித்து வந்த பிரம்மதேயம் எனப்படும் கிராமங்கள் அதிகளவு இருந்தது கல்வெட்டு தகவல்களில் வெளியாகியுள்ளது.
தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வில், கல்லாபுரம் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட கோவில், மூன்றாம் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும். கோவில் அமைந்திருந்த ஊர் ஒரு பிரம்மதேயம் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரம்மதேயம் என்பது அரசன் வேதம்வல்ல பிராமணர்க்கு, முழுக்கிராமமாக, தானமளிக்கப்பட்ட கிராமமாகும். இக்கிராமங்கள், அகரம், அக்ரஹாரம், பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம் என பல பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. பிரம்மதேய கிராமங்களில், வசித்த பிராமணர்கள், மகாசபை எனப்படும் சபையை ஏற்படுத்தி, நிர்வாக பொறுப்பை மேற்கொண்டுள்ளனர். அரசால், பிரம்மதேய கிராமங்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்லாபுரம் விண்ணகப்பெருமாள் கோவில், அமைந்திருந்த பிரம்மதேய கிராமம், ஸ்ரீ உலகடைய பிராட்டி சதுர்வேதி மங்கலம், என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது.
கரைவழிநாட்டை பிரிந்த ராஜராஜ வளநாட்டு பிரம்மதேயம் என குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏற்கனவே அமைந்திருந்த கரைவழி நாடு எனும் நாட்டு பிரிவிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டது என தெரியவருகிறது. அமராவதி ஆற்றங்கரைக்கு இருபுறமும், பரவியிருந்தது கரைவழிநாடு. கடத்துார், கொழுமம், சோழமாதேவிநல்லுார், கண்ணாடிப்புத்துார், ஏழுர் ஆகிய கிராமங்கள் கரைவழி நாட்டிலும், கொமரலிங்கம் சதுர்வேதி மங்கலமாகவும் இருந்துள்ளது. விண்ணகப்பெருமாள் கோவில், கி.பி., 1277 ல் கட்டப்பட்டிருக்கலாம். கோவிலுக்கு வரும் தலயாத்ரீகர்களுக்கும், பக்தர்களுக்கும் உணவளிக்க, இரண்டு சந்தியாதீபம் எரிக்க, இருபத்தேழு அச்சு காசும், இருபத்தேழு கலம் நெல்லும் உபயமாக அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தானங்களை செய்தவர்கள், வேதநாயகபட்டர்; அவருடைய மகள் குழலாழி என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தானத்தை தலைமுறை, தலைமுறையாக தொடர்வோம் எனவும், பதினெட்டு மண்டலத்து ஸ்ரீவைஷ்ணவர்கள், தானத்தை கண்காணித்து பாதுகாப்பாளர்களாக இருப்பார்கள் என கல்வெட்டில் இருப்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதன்பின்னர், எந்த ஒரு ஆய்வும் அப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. மண்ணில் புதைந்துள்ள விண்ணக பெருமாள் கோவிலை மீட்காவிட்டாலும், அதிலுள்ள கல்வெட்டு தகவல்களையாவது மீட்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.