பதிவு செய்த நாள்
12
செப்
2015
11:09
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி, ஆவணி அமாவாசையை முன்னிட்டு, சிறுமலை எலுமிச்சை விலை 60 கிலோ சிப்பம் ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை மலைப்பகுதியில் விளையும் எலுமிச்சைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. நாட்டு எலுமிச்சையை விட அதிக சாற்றை தரவல்லது என்பதால் வியாபாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சிறுமலை எலுமிச்சைக்கு தனி வரவேற்பு உள்ளது.
மாவட்டத்தில் சிறுமலை பகுதியில் 604 எக்டேரிலும், ஆடலுார், கொடைக்கானலில் 120 எக்டேரிலும் மலை எலுமிச்சை சாகுபடியாகிறது. ஏ.வெள்ளோடு, சிலுவத்துார் ரோடு, நத்தம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 121 எக்டேரில் நாட்டு எலுமிச்சை பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் 5 ஆயிரத்து 438 எக்டேரில் சாகுபடியாகிறது.இன்று (செப்.12ல்) ஆவணி அமாவாசை என்பதால் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதை முன்னிட்டு நேற்றே, திண்டுக்கல் சிறுமலை செட் சந்தையில் எலுமிச்சை அதிகளவில் வியாபாரிகள் வாங்கி சென்றனர். செப், 17ல் விநாயகர் சதுர்த்தியும் வரவுள்ளதாலும், மதுரையிலுள்ள சில்லரை வியாபாரிகள் அதிகளவில் திண்டுக்கல்லுக்கு வந்து எலுமிச்சைகளை வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்தது.கடந்த மாதத்தில் 60 கிலோ சிப்பம் ரூ.2,500க்கு விற்பனையானது. தற்போது 60 கிலோ சிப்பம் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாகிறது.