364. மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர் மந்திரங்கள் ஆவது மரத்திலூறல் அன்றுகாண் மந்திரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே.
369. மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய் மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம் ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய் தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே.
387. கோயில் எங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ தேயு வாயு ஒன்றலோ சிவனும் அங்கே ஒன்றலோ ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துவராது ஒன்றலோ காயம் ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.
391. சத்தியாவது உன்னுடல் தயங்கு சிவன் உட்சிவம் பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்ததோர் வெளி சத்தி சிவமும் ஆகி நின்று தன்மையாவது உண்மையே.
393. அக்கரம் அனாதி அல்ல ஆத்துமா அனாதி அல்ல புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல தக்கமிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல ஒக்க நின்று உடன்கலந்த உண்மைகாண் அனாதியே.
394. மென்மையாகி நின்றதுஏதுவிட்டு நின்ற தொட்டதுஏது உண்மையாக நீயுரைக்க வேணும் எங்கள் உத்தமா பெண்மையாகி நின்றதொன்று விட்டுநின்ற தொட்டதை உண்மையாய் உரைக்க முத்தி உட்கலந்து இருந்ததே.
395. அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே உடக்கினால் எடுத்த காயம் உண்மையென்று உணர்ந்து நீ சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால் விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ
396. உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் தண்மையான சக்கரம் காயமும் தரித்த ரூபம் ஆனதும் வெண்மையாகி நீறியே விளைந்து நின்ற தானதும் உண்மையான ஞானிகள் விரித்துரைக்க வேண்டுமே.
410. சென்றுசென்று இடந்தொறும் சிறந்தசெம்பொன் அம்பலம் அன்றும் இன்றும் நின்றதோர் அனாதியான அம்பலம் என்றும் என்றும் இருப்பதோர் உறுதியான அம்பலம் ஒன்றிஒன்றி; நின்றதுள் ஒழிந்ததே சிவாயமே.
411.தந்தைதாய் தமரும் நீ சகலதே வதையும் நீ சிந்தைநீ தெளிவும் நீ சித்திமுத்தி தானும் நீ விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ எந்தைநீ இறைவன் நீ என்னை ஆண்ட ஈசனே.
423. இந்த ஊரில் இல்லை என்று எங்குநாடி ஓடுறீர்? அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை அந்தமான சீயில் அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.
428. உண்மையான தொன்றதொன்றை உற்றுநோக்கி உம்முளே வண்மையான வாசியுண்டு வாழ்த்திஏத்த வல்லிரேல் தண்மைபெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும் கன்மதன்மம் ஆகும் ஈசர் காட்சிதானுங் காணுமே.
429. பாலகனாக வேணும் என்று பத்திமுற்றும் என்பரே நாலுபாதம் உண்டதில் நனைந்திரண்டு அடுத்ததால் மூலநாடி தன்னில் வன்னி மூட்டி அந்த நீருண ஏலவார் குழலியோடே ஈசர்பாதம் எய்துமே.
445. முற்றுமே அவன் ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன் பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது கற்றதாலே ஈசர்பாதம் காணலா யிருக்குமோ பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.
446. கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே வாட்டம் உள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும் கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே.
453. கருக்கலந்த காலமே கண்டு நின்ற காரணம் உருக்கலந்த போதலோ உன்னைநான் உணர்ந்தது விரிக்கில்என் மறைக்கில்என் வினைக்கிசைந்த போதெலாம் உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ.
454. ஞான நூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள் ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர் ஞானம்ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின் ஞானம் அல்லது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே.
459. மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் சாதிபேதமாய் உருத்தரிக்கும் ஆறு போலவே வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில் பேதமாய்ப் பிறக்கிலாத வாறதெனன பேசுமே.
460. வகைக்குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் தொகைக்குலங்கள் ஆன நேர்மை நாடியே உணர்ந்தபின் மிகைத்தசுக்கிலம் அன்றியே வேறு ஒன்று கண்டிலீர்
461. ஒதும்நாலு வேதமும் உரைத்தசாஸ் திரங்களும் பூததத் துவங்களும் பொருந்தும் ஆக மங்களும் சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும் பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே.
462. உறங்கில் என் விழிக்கில்என் உணர்வு சென்று ஒடுங்கில்என் திறம்பில்என் திகைக்கில்என் சிலதிசைகள் எட்டில்என். புறம்பும் உள்ளும் எங்கணும் பொதிந்திருந்த தேகமாய் நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பதும்ஏதும் இல்லையே.
463. அங்கலிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசை செய்கிறீர் அங்கலிங்கம் பூண்டு நீர் அமர்ந்திருந்த மார்பனே எங்கும்ஓடி எங்கும் எங்கும் ஈடழிந்து மாய்கிறீர் செங்கல் செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே.
464. திட்டம் திட்டம் என்றுநீர் தினம்முழுகும் மூடரே தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனது பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.
466. வன்னிமூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும் கன்னியான துள்ளிருக்கக் காதல் கொண்டது எவ்விடம் சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டில் ஒன்று உன்னி உன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.
468. பரம்உனக்கு எனக்குவேறு பயமும்இல்லை பாரையா கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம் சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே உரம்எனக்கு நீ அளித்த உண்மை உண்மை உண்மையே
497. நானும்அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன் வானில்உள்ள சோதி அல்ல சோதிநம்முள் உள்ளதே நானும்நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ? தானதான தத்ததான நாதனான தானனா.
498. நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான் நல்லதென்ற போதது நல்லதாகி நின்றுபின் நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால் நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே.
499. பேய்கள்கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா! தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிர வேண்டி நாடினால் நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே.
501. பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது இறப்பதுஇல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக் குறிப்புப்பேசித் திரவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே?
506. சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்! சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர் சித்தர் இங்கு இருந்தும் என்னபித்தன் நாட்டிருப்பரே: அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலாமொன்றே.
507. மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் வேந்தன் ஆகி மன்றுளாடும்விமலன் பாதம் காணலாம் கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாது இது உண்மையே.
511. தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் பொங்கல் வைத்து ஆழி கோழிப் பூசைப்பலியை இட்டிட நங்கச் சொல்லு நலிமகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.
512. ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர் காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே.
513. நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர் தம் இட்டுமே மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்! வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே.
514. வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும் போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவெனச் சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.
515. யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார் மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.
516. காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் நேயமாக் கஞ்சா அடித்து நேர் அபினைத் தின்பதால் நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.
518. காவியும் சடைமுடி, கமண்டலங்கள் ஆசனம் தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள் தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே.
519. முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனச் சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே
520. செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர் நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே.
522. கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில் தொல்லைஅற் றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர் இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே
523. இச்சகம் சனித்ததுவும் ஈசன்ஐந்து எழுத்திலே மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்து எழுத்திலே உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல் அஞ்செழுத்திலே நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்தெழுத்திலே.
524. சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால் நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்கள்! பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல் சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே.
525. மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள் சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத் தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் இன்மதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள்