(சிவவாக்கியரின் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு, தலயாத்திரை, மத வாதம், வேதம் ஓதல், சாதியாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன்! உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.)
கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக் கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்து திக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
அக்ஷர நிலை
2. ஆன அஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
அன அஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றவே.
சரியை விலக்கல்
3. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
யோக நிலை
4. உருத்தரித்த நாடியில் ஒடுங்கின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே.
தேகநிலை
5. வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல் சுடலை மட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே.
ஞான நிலை
6. என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து இல்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே.
7. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ அனைத்துமாய் அகண்டமாய்அனாதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்குமாற தெங்ஙனே
8. மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்தபண் எழுத்தும் நீ கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.
9. அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம் கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள் துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே.
10. அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே!
15. வித்தில்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை, கீழும் இல்லை! தச்சில்லாத மாளிகை சமைந்தவாற தெங்ஙனே? பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்! சித்தில்லாத போது சிவன் இல்லை இல்லை இல்லையே!
16. அஞ்சும் மூன்றும் எட்டதாம் அநாதியான மந்திரம் நெஞ்சிலே நினைந்து கொண்டு நூறுருச் செபிப்பிரேல் பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும் பஞ்சுபோல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே.
17. அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம் ஆறிரண்டு நூறுகோடி யான வாசல் ஆயிரம் இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோகமான வாசல் எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லவரே?
18. சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும் சேமமாக ஓதிலும் சிவனைநீர் அறிகிலீர் காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே!
19. சங்கிரண்டு தாரை ஒன்று சன்ன பின்னல் ஆகையால் மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை சங்கிரண்டையும் தவிர்த்து தாரைஊத வல்லிரேல் கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே!
20. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்துகூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!
26. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை? பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை? மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை? மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை? அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள் பண்டறிந்த பான்மைதன்னை யார் அறிய வல்லரே? விண்டவேத பொருளை அன்றி வேறு கூற வகையிலா கண்டகோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே!
27. தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்: பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப் பராபரம் ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்! நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
28. தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல் செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தும்முளே விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற மாந்தரே எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே!
31. செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன் ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின் வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே.
அறிவுநிலை
32. மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே.
33. கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
34. செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர் உம்பதம் நிந்துநீர் உம்மைநீர் அறிந்த பின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல்பாடல் ஆகுமே!
35. பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம் ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே!
36. இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும் பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான் உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல் சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே!
45. சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ சாதிபேதம் ஒதுகின்ற தன்மை என்ன தன்மையே?
அறிவு நிலை
46. கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா உடைந்துபோன சங்கின ஓசை உயிர்களும் உடற்புகா விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
47. அறையினில் கிடந்தபோது அன்று தூமை என்கிறீர் துறை அறிந்து நீர்குளித்த அன்று தூமை என்கிறீர் பறையறைந்து நீர்பிறந்த அன்று தூமை என்கிறீர் புரை இலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே?
61. மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே ஐஇறந்து கொண்டுநீங்கள் அல்லல்உற்று இருப்பிர்காள் மெய் அறிந்த சிந்தையாய் விளங்குஞானம் எய்தினால் உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்விரே.
62. கரு இருந்து வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்துநோக்க வல்லிரேல் உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்றநீர் திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே.
71. சிவாயம் என்ற அக்ஷரம் சிவன் இருக்கும் அக்ஷரம் உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அக்ஷரம் கபாடம்உற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை உபாயம்இட்டு அழைக்குமே சிவாய அஞ் செழுத்துமே.
72. உருவும்அல்ல வெளியும் அல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல அரியதாகி நின்ற நேர்மை யாவர்காண வல்லரே.
74. அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர் நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர் உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும் அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே.
அன்பு நிலை
75 இருவர் அரங்க மும்பொருந்தி என் புருகி நோக்கிலீர் உருவரங்கம் ஆகிநின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின் திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லிரே.
82. பருகி ஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை நிரவியே நினைந்து பார்க்கில்நின்மலம் அதாகுமே உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.
83 சோதிபாதி ஆகி நின்று சுத்தமும் பலித்துவந்து போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா வீதியாக ஓடிவந்து விண்ணடியில் ஊடுபோய் ஆதிநாதன் நாதன் என்று அனந்தகாலம் உள்ளதே.
84. இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே கருவு நாதம் உண்டுபோய் கழன்றவாசல் ஒன்பதும் ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே.
85. நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லிரேல் அன்பர்கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே தும்பிஓடி ஓடியே சொல்லடா சுவாமியே.
86. தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே எல்லையைக் கடந்து நின்ற ஏகபோக மாய்கையே எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே. வெள்ளையும் சிவப்புமாகி மெய் கலந்து நின்றதே!
87. உடம்புஉயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ உடம்பு உயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர் உடம்பு உயிர் எடுத்தபோது உயிர் இருப்பது இல்லையே உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே.
99. வட்டமென்று உம்முளே! மயக்கிவிட்ட திவ்வெளி அட்டரக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும் எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே எட்டலாம் உதித்தது எம்பிரானை நாம் அறிந்தபின்
100. பேசுவானும் ஈசனே பிரம ஞானம் உம்முளே ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறார் ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே!
101. நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும் நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே நமசிவாய உண்மையை நன்கு உரைசெய் நாதனே!
102. பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும் சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும் உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயவே!
103. பச்சைமண் பதுப்பிலே புழுப்பதிந்த வேட்டுவன் நிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும் பச்சை மண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும் பித்தர் காள் அறிந்து கொள் பிரான் இயற்று கோலமே!
106. ஓம் நமசிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின் ஓம்நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம்நமசிவாயமே உட்கலந்து நிற்குமே!
107. அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும் சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மிநின்றது நல்லவாசலைத் திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டவர் இனிப் பிறப்பது இல்லையே!
108. ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய் சாதிபேதமாய் எழுந்து சர்வஜீவன் ஆனது ஆதியோடு இருந்துமீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின் சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே!
109. மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும் மலர்ந்தபூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும் புலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும் இலங்கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே!
110. பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும் ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர் ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும் சீரிடங்கள் கண்டவன் சிவன் தெரிந்த ஞானியே!
தலயாத்திரை நீக்கல்
111. மண்கிடாரமேசுமந்து மலையுள் ஏறி மறுகுறீர் எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர் தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக் கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே!
113. இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே!
114. காரகார காரகார காவல் ஊழி காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்கள் ஏழும் எய்தஸ்ரீ ராமராம ராமராம ராம என்னும் நாமமே!
115. நீடுபாரிபல பிறந்து நேயமான காயந்தான் வீடுவேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ பாடி நாலுவேதமும் பாரிலே படர்ந்ததோ நாடுராம ராமராம ராம என்னும் நாமமே!
116. உயிரு நன்மையால் உடல்எடுத்துவந்து இருந்திடும் உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும் உயிர்சிவத்தின் மாயை ஆகிஒன்றை ஒன்று கொன்றிடும் உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றைஒன்று தின்னுமே.
117. நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும் நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்றதொன்றும் கண்டிலேன் குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில் நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே!
122. இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம் அரிக்குமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம் கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே!
123. ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே ஆகிலும் அழகிலும் அதன் கண்நேயம் ஆனபின் சாகிலும் பிறக்கிலும் இவைஇல்லை இல்லையே!
124. வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி-நீரதாய் பாதமே இலிங்கமாய்ப் பரிந்து பூசைபண்ணினால் காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள் ஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே!
ஞான நிலை
125. பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சி ஓதும் மாந்தரே துருத்தி நூல் முறுக்கிவிட்டுத் துன்பம் நீங்க வல்லிரேல் கருத்தில் நூல் கலைபடும் காலநூல் கழிந்திடும் திருத்திநூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே.
126. சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள் தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன் மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.
127. காலைமாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள் காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும் காலமே எழுந்திருந்து கண்கண் மூன்றில் ஒன்றினால் மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.
மதவாதம் மறுத்தல்
128. எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.
அறிவு நிலை
129. அறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர் முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர் துறை அறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர் பொறைஇலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே.
130. சுத்தம் வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும் மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே. சுத்தம் ஏது கட்டதேது தூய்மைகண்டு நின்றதுஏது பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே.
131. மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான் மாதம் அற்று நின்றலோ வளர்ந்துரூபம் ஆனது நாம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா.
133. ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற கோலமே.
134. தூமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே. தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே.
135. வேணும் வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர் வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின் வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே.
136. சிட்டர்ஓது வேதமும் சிறந்த ஆக மங்களும் நட்டகாரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும் கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்
137. நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் நூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன் ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய் ஏறுசீர் எழுத்தை ஓத ஈசன்வந்து பேசுமே.
139. எட்டுமண்டலத்துளே இரண்டுமண்ட லம்வளைத்து இட்டமண்ட லத்துளே எண்ணி ஆறு மண்டலம் தொட்டமண்டலத்திலே தோன்றி மூன்றுமண்டலம் நட்டமண்ட பத்துளே நாதன் ஆடி நின்றதே.
140. நாலிரண்டு மண்டலத்துள் நாதநின்றது எவ்விடம் காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன் சேரிரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே மேலிரண்டு தான்கலந்து வீசி ஆடி நின்றதே.
141. அம்மைஅப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர் அம்மைஅப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய் அம்மைஅப்பன் அப்புநீர் ஆதியாதி ஆனபின் அம்மைஅப்பன் அன்னை அன்றி யாரும்இல்லை ஆனதே.
143. ஆதிஉண்டு அந்தம் இல்லை அன்றிநாலு வேதம்இல்லை சோதிஉண்டு சொல்லும்இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும் ஆதிஅன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே.
148. ஈணெருமையின் கழுத்தில் இட்டபொட்டணங்கள் போல் மூணுநாலு சீலையில் முடிந்த விழ்க்கும் மூடர்காள் மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை ஊணிஊணி நீர் முடிந்த உண்மைஎன்ன உண்மையே.
174. திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல்எட்டு மருங்கிலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு துரும்பிலாத கோலம்எட்டு சுற்றிவந்த மருளரே. அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே.
175. தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால் தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே வானிருந்து மதியமூன்று மண்டலம் புகுந்தபின் ஊனிருந் தளவுகொண்ட யோகிநல்ல யோகியே.
183. உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே மருவும் அல்ல கந்தம் அல்ல மந்தநாடி உற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும் அல்ல அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே.
190. வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூப தீபமாய் ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர் தேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே போடுகின்ற புட்பபூசை பூசை என்ன பூசையே.
191. முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை கட்டிகொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் முட்டும் அற்று கட்டும் அற்று முடியில் நின்ற நாதனை எட்டுதிக்கும் கையினால் இருந்தவீட தாகுமே.
195. பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம் ஆவிஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினால் மேவுகின்ற ஐவரும் விளங்குதூப தீபமாய் ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே.
196. உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது இருக்கில் என் மறக்கில் என் நினைந்திருந்த போதெலாம் உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே.
197. சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் சிவாயம் அஞ் செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம். சிவாயம் அஞ் செழுத்துளே தெளிந்து கொண்ட வான்பொருள் சிவாயம் அஞ் செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே.
202. அங்கலிங்க பீடமும் அசவை மூன்று எழுத்தினும் சங்குசக் கரத்திலும் சகல வானகத்தினும் பங்கு கொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும் சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே.
204. ஆதரித்த மந்திரம் அமைந்த ஆக மங்களும் மாதர்மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை ஏதுபுக் கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே.
206 ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில் ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம் அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே.
216. சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே துன்ப இன்பமுங் கடந்து சொல்லுமூல நாடிகள் அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே. ஆறுபங்கயம் கலந்து அப்புறத் தலத்துளே.
217. உருத்தரிப்ப தற்குமுன் உயிர் புகுந்த நாதமும் கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம் அருள்தரிப்ப தற்குமுன் அறிவு மூலா தாரமாம் குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே.
218. எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின் பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார் எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே
220. வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கு மந்திரம் முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே.
225. சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகத்து இருத்தியே துன்ப இன்பமுங் கடந்து சொல்லும் நாடி யூடுபோய் அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே ஆறுபங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே.
விழித்த கண் குவித்தபோது அடைந்துபோய் எழுத்தெலாம் விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே.
226 நல்லமஞ் சனங்கள் தேடி நாடிநாடி ஓடுறீர் நல்லமஞ் சனங்களுண்டு நாதன் உண்டு நம்முளே எல்லை மஞ்சனங்கள் தேடி ஏகபூசை பண்ணினால் தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே.
227. உயிர் அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்ததற்குமுன் உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும் உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம் உயிரினால் உடம்புதான் எடுப்பவாறு உரைக்கினே.
228. அண்டம் ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே பண்டைமால் அயனுடன் பரந்துநின்று உழலவே எண் திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே
230. பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருள் அதென்றுநீர் எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைந்து வைத்து அளிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே.
232. அருவமாய் இருந்தபோது அன்னை அங்கு அறிந்திலை உருவமாய் இருந்தபோது உன்னை நான் அறிந்தனன் குருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம் பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே.
239. அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய் அந்தறைக்குள் வந்திருந்து அரியவிந்து ரூபமாய் தன்னை ஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய் தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே.
உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ உள்ள மீது உறைந்தெனை மறைப்பில்லாத சோதியை பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத ஈசனே பொன்னடிப் பிறப்பிலாமை என்றுநல்க வேணுமே.
246. பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள் பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ ஆதிபூசை கொள்ளுமோ ஆனாதிபூசை கொள்ளுதோ காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.
247. மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய் நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம் கோலி எட்டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த திட்டமாய் மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.
248. ஆதிகூடு நாடிஓடி காலைமாலை நீரிலே சோதி மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி ஆதிகூடி நெற்பறித்த காரமாதி ஆகமம் பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே.
249. பாங்கினோடு இருந்துகொண்டு பரமன் அஞ்செழுத்துளே ஓங்கிநாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம் மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய் விதத்தினில் ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
250. புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல் கண்டகோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே.
251. அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே உன்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே.
252. அண்ணலாவது ஏதடா அறிந்துரைத்த மந்திரம் தண்ணலாக வந்தவன் சகல புராணம் கற்றவன் கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன் ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம்.
253. உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர் உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ள வாசலைத் திறந்து காணவேணும் அப்பனே.
255. என்னகத்துள் என்னை நான் எங்குநாடி ஓடினேன் என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால் என்னகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்தபின் என்னகத்துள் என்னை அன்றி யாதுமென்றும் இல்லையே
256. விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல் என்னுள் நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்து இருக்கையால் கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால் என்னுள் நின்ற என்னையும் யானறிந்தது இல்லையே.
301. மூன்று பத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என் தலை ஏன்றுவைத்த வைத்தபின் இயம்பும் அஞ்செழுத்தையும் தோன்றஓத வல்லிரேல் துய்யசோதி காணுமே.
302. உம்பர்வானகத்தினும் உலகபாரம் ஏழினும் நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும் செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான் எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே.
303. பூவலாய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய் தீயிலாய மூன்றுமாய் சிறந்தகால் இரண்டுமாய் வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன் மையாய் நீயலாமல் நின்றநேர்மை யாவர் காண வல்லரே.
324. கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை நாடி நாடி நாடி நாடி நாளகன்று வீணதாய் தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே கூடி கூடி கூடி கூடி நிற்பர்கோடி கோடியே.
325. கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம் இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான் ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான் கருத்தில்கீயும் கூவும் உற்றோன் கண்டறிந்த ஆதியே.
326. வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் ஊதி ஊதி ஊதி ஊதி ஒளிமழுங்கி உளறுவான் வீதி வீதி வீதி வீதி விடைஎருப் பொறுக்குவோன் சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான்.
332. பொங்கிநின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும் தங்கி நின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும் கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும் திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே.
333. மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில் பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரிலே. ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில். ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே.
335. கூவும்கியும் மோனமாகி கொள்கையான கொள்கையை மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே பூவிலே நறைகள்போல் பொருந்திநின்ற பூரணம் ஆவி ஆவி ஆவி ஆவி அன்பருள்ளம் உற்றதே.
347. சோதி சோதி என்று நாடித் தோற்பவர் சிலவரே ஆதி ஆதி என்று நாடும் ஆடவர் சிலவரே வாதிவாதி என்று சொல்லும் வம்பரும் சிலவரே நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர்.
348. சுடரதாகி எழும்பியங்கும் தூபமான காலமே இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன் படரதாக நின்ற ஆதி பஞ்சபூதம் ஆகியே அடரதாக அண்டம் எங்கும் ஆண்மையாக நின்றதே.
349. நின்றிருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர் கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர் கண்டமுற்ற மேன் முனையின் காட்சி தன்னைக் காணுவார் நன்றி அற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும்