5. இருவினைப் பகுதி யாலே எடுத்திந்தத் தேகந் தன்னை மருவிய நானான் என்று மாயையில் அழிந்தாய் நீதான்; குருவினாற் குறியைப் பார்த்துக் குண்டலி வழியே சென்றங்கு உருவினால்நாகை நாதர் உண்மையை உணர்வாய் நெஞ்சே!
15. புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்தவெண் ணுரையுண் டாக்கி மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படா திருக்கு மாபோல் சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச் சூட்சங் கண்டாற் கல்லிலே தெய்வ மில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே!
16. தண்ணீரி லிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக் கண்ணினாற் பார்க்கும் போது கயலுறு வானாற் போல நண்ணிய குருவைக் கண்டு நாதனல் லுருவைச் சேர்த்து விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே!
17. இலகிய ஊசிக் காந்தம் இரும்பினை இழுப்பதேபோல் உலவிய குருப ரன்றாள் உன்னையாட கொண்ட தன்மை நலமுடன் அறிந்த நீதான் நாயனை யறிந்தி டாமல் நிலமிசை யலைந்தாய் நாத லிங்கரை நினைப்பாய் நெஞ்சே!
34. கண்ணாடி தன்னிற் றோற்றுங் காரண உருவம் போல உண்ணாடி மூலா தாரத் துதித்தசற் குருவைக் கண்டு விண்ணாடி வெளியைப் பார்த்து விளக்கொளி மகிமை சேர்ந்தால் மண்ணாடு நாகை நாதர் வந்துனை ஆள்வார் நெஞ்சே!
48. கடலென விளங்கும் வேத காரணக் குருவைக் கண்டுன் உடல்பொருள் ஆவி மூன்றும் உகந்தவர்க் குதவி நீதான் திடமுடன் பூர்த்தி யாகிச் செந்தூசிற் பரத்திற் சேர்ந்து நடமிடும் வாசி நாகை நாதரை நாடு நெஞ்சே!
58. ஆதார மாறுந் தாண்டி ஐம்பூத வடிவுந் தாண்டி மீதான வெளியுந் தாண்டி விளங்கிய பரன்றன் கூத்தை நீதானும் அறிந்து கொண்டு நின்மல வடிவ மாகி வேதாந்த நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே
71. முந்தின பிறப்பு வந்த முதன்மையும் அறியாய் இப்பால் பிந்தின பிறப்பு வந்த பெருமையும் அறியாய் நீதான்: அந்தரப் பட்சி போல அலைகின்றாய்: அகத்து ளேமுச் சந்தியை அறிந்து நாகை நாதரைச் சார்வாய் நெஞ்சே!
72. காகத்தின் கண்ணி ரண்டிற் காண்பதுங் கண்ணொன்றே போல் தேகத்தின் அறிவின் கண்ணைத் திடமுடன் அறிந்து கொண்டு மோகத்தின் கனலில் வீழா முனைசுழி வாசி பார்த்தால் ஏகத்தால் நாகை நாத ரிணையடி சார்வாய் நெஞ்சே!