பதிவு செய்த நாள்
11
டிச
2015
06:12
குபேரன்! இந்தப் பெயரைச் சொன்னதுமே எல்லோருக்குள்ளும் ஒருவித சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். எத்தகைய பணக்கஷ்டம் இருந்தாலும் கண்டிப்பாக அது தீர்ந்து போகும் என்ற நம்பிக்கை மனதுக்குள் பிறக்கும். இன்னும் வர்த்தகம் சீராகும், லட்சுமிகடாட்சம் நிலைக்கும் என்று பணம் சார்ந்த அத்தனை பிரச்னைகளும் ஒட்டுமொத்தமாக ஓடிப்போகும் என்ற நிம்மதி தலைதூக்கும். இப்படி எல்லோருக்குள்ளும் நல்ல எண்ணமும் நம்பிக்கையும் ஏற்படக் காரணம் என்ன? அது குபேரன் வாங்கிய வரம். ராவணனின் சகோதரன். வடதிசைக்கு அதிபன். செல்வங்களுக்கு எல்லாம் அதிபதி. இப்படி எல்லோருக்குமே கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருக்கும் குபேரனைப்பற்றி.
இதில் ஒரு முக்கியமான விஷயம், ராவணனின் சகோதரன் என்பதால் குபேரன் அசுரகுலத்தவன் என்று பலரும் நினைப்பதுதான். ஆனால், அது தவறு எப்படி? பிரம்மாவோட மகன்களில் ஒருவர், புலஸ்திய முனிவர். அவரது மகன், விஸ்ரவஸ். அப்பாவைப் போலவே விஸ்ரவஸும் நிறைய தவங்கள் செய்தார். சிறந்த தவசீலரான அவருக்கு தன் மகள் தேவர்ஷினியை திருமணம் செய்து வைத்தார் பரத்வாஜ மகரிஷி. விஸ்ரவஸ் -தேவவர்ஷினி தம்பதியருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. மகனுக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார்கள். அவனும் வளர்ந்தான். அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா போலவே தவம் பல செய்தான்.
இந்த சமயத்தில், முற்பிறவியின் பலனால், கேகசி என்னும் அரக்கிக்கும் முனிவர் விஸ்ரவஸை மணக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளுக்குப் பிறந்தவர்களே ராவணன், கும்பகர்ணன், சூர்பனகை, விபீஷணன் ஆகியோர். இங்கே முக்கியமான விஷயம், தேவர்கள், முனிவர்கள் வம்சத்தில் தந்தையின் மரபினையும், அசுர இனத்தில் தாயின் மரபையுமே சொல்வது வழக்கமாக இருந்தது. அதனால், குபேரனும் ராவணனும் ஒருவிதத்தில் சகோதரர்களாக இருந்தாலும், குபேரன் புலஸ்தியரான ரிஷியின் வம்சத்தவன் என்றும், ராவணன் தாயின் குலமான அசுர இனத்தவன் என்றும் ஆனது. பாட்டனாரான பிரம்மாவின்ஆலோசனைப்படி சிவனை நோக்கி கடும்தவம் செய்தான் வைஸ்ரவணன். மனம் இரங்கிய மகேசன், அவனை தனது தோழனாக ஏற்றார். எட்டுத் திசைகளில் ஒன்றுக்கு அதிபதியாக நியமித்தார். உலகில் உள்ள எல்லா செல்வங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை அவனுக்குத் தந்தார். பிரம்மாவின் கொள்ளுப்பேரனான வைஸ்வரணனுக்கு குபேரன் என்ற பட்டப்பெயரையும் கொடுத்தார். அந்தப் பட்டப்பெயருக்கு என்ன அர்த்தம்.
அவரவரது செயல்களுக்கு ஏற்ப எந்த அளவுக்கு செல்வம் கிட்ட வேண்டும்? எப்படி வாழ்க்கைமுறை அமையவேண்டும் என்பதெல்லாம் கடவுளால் அவரவர் கணக்கில் வரவுவைக்கப்பட்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்தவகையில் உங்களுக்கக் கிடைக்கவேண்டிய செல்வத்தை பணத்தை அதை நிர்வகிக்கும் அதிகாரியான குபேரனைக் கேட்டுப் பெறுவதுதானே சுலபம். அதனால்தான் குபேரனைக் கும்பிடுவதற்கு வசதியாக, ஆகம விதிப்படி அமைந்த பழங்கால கோயில்கள் பலவற்றிலும் குபேரனுக்கு சன்னதிகள் அமைத்துவைத்தார்கள். சுமார் எழுநூறு எண்ணூறு ஆண்டுகள் பழமை மிக்க கீழ்வேளூர், நாகப்பட்டினம், செட்டிகுளம் உள்ளிட்ட தலங்களில்கூட குபேரனுக்கு தனி சன்னிதிகள் இருப்பது, குபேரன் வழிபாடு அந்தக் காலம் முதலே இருப்பதற்கு சாட்சி. குபேரன் என்ற பெயருக்கு அர்த்தம் நிதிகளை நிர்வகிப்பவன், பொருளைப் பெருக்குபவன் என்றுதான். வங்கியில் பணத்தை நிர்வகிப் பலருக்கு பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கும். அவரைப் பொதுவாக கேஷியர் என்று தானே கூப்பிடுவார்கள். அதே வைஸ்வரணன், குபேரன் ஆனார்.
ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச் ரவணாய குர்மஹே
ஸ மே காமான் காம காமாய மஹ்யம்
காமேச் வரோ வைச் ர வணோ ததாது
குபேராய வைச் ரவணாய மஹாராஜாய நம:
இந்த ஸ்லோகத்துக்குரிய அர்த்தம்.. எல்லா செல்வங்களுக்கும் அதிபதியான வைஸ்ரவணனே, விருப்பங்களை நிறைவேற்றி வைக்கக்கூடியவரே, எனது நியாயமான கோரிக்கையை தெய்வத்திடம் சொல்லி அது ஈடேற அருள் செய்யவேண்டி குபேரனாகிய உம்மை வணங்குகிறேன்.
சிவபெருமானிடம் எதை வேண்டுமானாலும் அதனை குபேரனிடம் கேட்டுத்தான் பெறமுடியும். (முருகனும் சிவ அம்சம்தானே!) எனக்கான பூஜை நடக்கும் போது அதன் நிறைவில் உன்னை வேண்டியே ஆரத்தி காட்டுவார்கள். இது சிவபெருமானே குபேரனுக்கு கொடுத்த வரம். உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப்பற்றி சொல்கிறேன். என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது சேரும் இடம் நன்றாக இருந்தால், சேர்பவரும் நன்றாக இருப்பார் என்று சொல்லாமலே தெரிந்துவிடும். தன்னுடைய நண்பன் என்று சிவபெருமான் இரண்டே இரண்டுபேரைத்தான் சொல்லியிருக்கிறார். ஒருவர், சுந்தரமூர்த்தி நாயனார்; இன்னொருவர் குபேரன். நீங்களோ தானோ மட்டுமல்ல, அந்த தெய்வமே பூவுலகம் வந்தால், அவருக்கே செல்வம் தேவைப்பட்டாலும் அவர் குபேரனிடம் இருந்துதான் அதைப் பெறமுடியும்.
திருமகள் நாதனான திருமாலே, பெருமாளாக பூவுலகம் வந்தபோது பத்மாவதி தாயாரை மணக்க செல்வம் தேவைப்பட்டபோது குபேரனிடம் இருந்துதானே அதனைப் பெற்றார்? திருமாலுக்கு சிவனோ, மற்ற யாருமோ உதவமாட்டார்களா என்ன? அல்லது பார்கவிதான் தன் கணவர்மேல் பார்வை பதிக்க மாட்டாளா? நியதி எதுவோ அதனை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். என்பதுதானே கடவுள் காட்டும் வழி. குபேரனிடம் கடனாகத்தானே பெருமாள் வாங்கினார்? மனித அவதாரத்தில் ஒருவருக்கு செல்வம் கிடைப்பதற்கு முன்வினைகள் எனும் கணக்கு இருக்கிறது. ஆனால் தெய்வத்துக்கு ஏது முன்வினையும், அதன் கணக்கும்? அதனால்தான் தன் கணக்கில் இல்லாத பணம் என்பதால் கடனாக வாங்கினார் திருமலையான். குபேரனை பூஜித்து ராஜ்யத்தையும் செல்வ வளத்தையும் பெறுமாறு பாண்டவர்களில் மூத்தவனான தருமனுக்கு நாரதர் உபதேசித்தார் என்கிறது மகாபாரதம். திருமகள் தன் நாதனான திருமாலில் ஆணைப்படி குபேரனின் இருப்பிடத்தை எப்போதும் பார்த்தவாறு இருக்கிறாள். அதனால்தான் குபேரனது இருப்பிடமான அளகாபுரியில் அளவற்ற செல்வம் நிறைந்துகொண்டே இருக்கிறது. குபேரனுடன் லட்சுமிகரம், அதாவது திருமகளின் பார்வைக் கடாட்சம் பதிந்திருக்கிறது என்பதால்தான் குபேரனுடன் மகாலட்சுமியை சேர்த்து குபேர லட்சுமியாக கும்பிடும் வழக்கம் வந்தது. குபேரனுடன் மகாலட்சுமியும் இணைந்திருக்கிறாள் என்பதால் அல்ல. குபேரனை கும்பிடுங்கள் உங்களுக்கு உரிய செல்வம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை கோலாகலமாக அமையும். கோடி நன்மையுடன் குன்றாத வளமையும் கண்டிப்பாகச் சேரும்.